

வெகுளியாக இருப்பது என்பது கள்ளம் கபடம் இல்லாத, உலக நடப்புகள் அறியாத வெகுளியாக, அப்பாவித்தனத்துடன் சூதுவாது அறியாத தன்மையுடன் இருப்பதாகும்.
வெகுளியாக இருப்பதற்கான காரணங்கள் பெரும்பாலும் சமூக மற்றும் மனோவியல் காரணிகளுடன் தொடர்புடையவை. புதியவர்களுடன் பழகத் தயக்கம், சங்கடமான சூழ்நிலைகளை தவிர்ப்பது, தன்னம்பிக்கை இன்மை மற்றும் சமூக கவலைகள் அதாவது பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம் காரணமாக பேசுவதற்கு தயக்கம் காட்டலாம் போன்றவையே வெகுளியாக இருப்பதற்கான காரணங்களாகும்.
வெகுளியாக இருப்பதை நிறுத்துவதற்கு 5 சிறந்த வழிகள்.
1) சுய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்:
நம் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாம் எப்பொழுது, எப்படி வெகுளியாக நடந்து கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வில்லாத வெகுளித்தனம் நமக்கு வாழ்வில் வலியைத் தான் தரும். விவேகம் என்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் கருத்துக்களுக்கு எளிதில் அடிபணிவதால் நம் சொந்த முடிவுகளை எடுப்பதில் சிரமம் உண்டாகும். இதனால் நிறைய வாய்ப்புகளை தவறவிட வேண்டி வரும். எனவே எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
2) இல்லை என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்:
நம்மால் செய்ய முடியாத காரியங்களை அல்லது விரும்பாத கோரிக்கைகளுக்கு தயக்கமின்றி இல்லை என்று சொல்ல வேண்டும். இது நம் நேரத்தையும் சக்தியையும் பாதுகாக்கும். இல்லை என்று சொல்லக் கற்றுக் கொள்வது நம் தனிப்பட்ட தேவைகள் மற்றும் எல்லைகளை மதிப்பதன் ஒரு பகுதியாகும். சில சமயங்களில் நோ சொல்வது கடினமாக இருக்கலாம். ஏனெனில் இது மோதலுக்கான பயத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஆரோக்கியமான எல்லையை வரையறுப்பதற்கும், நம் சொந்த நலனை பாதுகாப்பதற்கும் அவசியமாகும்.
3) நம் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்:
நம் தேவைகள் மற்றும் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். வரையறுக்கப்பட்ட எல்லைகள் நம்மை பாதுகாக்கும். இல்லையெனில் சுயநலவாதிகள் அல்லது மோசமான குணமுடையவர்கள் நம்மை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். கருணை, அன்பு, இரக்கம் இவற்றுடன் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் உற்று கவனிக்க வேண்டும். சுயமரியாதையைப் பேணவும், மற்றவர்களுடனான உறவுகளில் ஆரோக்கியமான வரம்புகளை உருவாக்கவும் எல்லைகளை நிர்ணைப்பது அவசியம்.
4) நம்மை நாமே மதிக்க தொடங்க வேண்டும்:
நம் திறமைகள் மற்றும் மதிப்பு ஆகியவற்றில் முதலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். நம்மை நாமே மதிக்க தொடங்கும் பொழுது மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள். இது நம் சுயமதிப்பை அதிகரிப்பதுடன் நம்மை மற்றவர்கள் மதிக்கவும் வழிவகுக்கும்.
5) ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்க வேண்டும்:
மற்றவர்கள் கூறும் விமர்சனங்களை எதிர்மறையாகப் பார்க்காமல், நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். திறந்த மனத்துடன் விமர்சனங்களை காது கொடுத்து கேட்க வேண்டும்.
நாம் வெற்றி பெறுவதற்கு வெகுளித்தனத்தை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்துடன் சேர்த்து நம் பகுத்தறிவையும் கொஞ்சம் பயன்படுத்தினால் நாம் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்போம். மனதளவில் உறுதியாக இருப்பது மக்கள் நம்மை அவர்கள் தேவைக்காக பயன்படுத்திவிட்டு நம்மை மன வருத்தத்தில் ஆழ்த்தாமல் இருக்க உதவும். அத்துடன் நமக்கான மரியாதையும் கிடைக்கும்.
