
நாம் வசிக்கும் வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை சக்திகளைத் தடுத்து, அவற்றை நேர்மறை சக்தியாக மாற்றுவது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
உயிர் சக்தியின் எதிர்மறைப் படிவம் (Negative form) ஷாச்சி (Shachi) எனப்படும். அதன் பிடியில் இருந்து விடுபடுவதும், சிக்காமல் இருப்பதும் அவசியம். உங்கள் பார்வையில் படுகிற எதிர்வீட்டின் சரிவான படி வரிசை கூட உங்களுக்குக் கெடுதல் செய்யும். அதுதான் ஷாச்சி ஏற்படுத்துகிற விளைவு. உங்கள் வீட்டுக் கதவருகே ஒருபோதும் அது இருக்கக் கூடாது. கட்டடங்களின் கூறிய விளிம்புகள், வாசலுக்கு எதிரே உள்ள பட்ட மரக் கிளைகள், கூம்பு வடிவ கோபுரங்கள், வெகு நீண்ட நேரான சாலை, ஒரு T வடிவ சந்திப்பு, மேம்பாலம், நேரான மலைமுகடுகள், கண்ணாடி முகப்புடைய கட்டடங்கள் இவை எல்லாம் வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டு வரும் என்கிறது ஃபெங் சுயி.
ஷாச்சி என்கிற விஷம் எந்த திசையில் இருந்து பாயும் என்று கூற முடியாது. ஷாச்சியை நீக்க ஸ்படிகம் பயன்படுத்தலாம். அறையின் ஒவ்வொரு மூலையிலும் செடிகள் வைத்து ஷாச்சியை சிதறடித்து விட முடியும். ஆனால், அந்த செடியின் இலைகள் கூர்மையானதாக, நீண்டதாக இருக்கக் கூடாது. செடியின் பச்சை நிறம் பளிச்சென்று இருக்க வேண்டும். செயற்கை செடிகளை விட இயற்கையானதே சிறந்தது. செடிகள் ஆரோக்கியமாக, அடர்த்தியாக இருக்க வேண்டும். இலைகள் வாழை இலை போல் விளிம்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தடுப்பு தட்டிகளும் (ஸ்கிரீன்) ஷாச்சியைத் தடுத்து நல்ல சக்தியாக மாற்றும். திரைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், அவை திக்காக இருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட மூலைக்குரிய நிறத்துடன் பொருந்துகிற நிறமுடையதாய் இருக்க வேண்டும். ஷாச்சி தெற்கிலிருந்து வருவதாக வைத்துக்கொண்டால் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தும்படி இருக்கும். வடக்கு என்றால் கருநீலம், கிழக்கு என்றால் பச்சை, மேற்கு என்றால் வெள்ளை.
கதவுக்கு முன்னால் திறந்தவெளியாக வராந்தா இருப்பது நல்லது என்று ஃபெங்சுயி நம்புகிறது. நல்லவிதமாக உயிர் சக்தி ச்சி (chi) சேகரம் ஆகி நீங்கள் கதவை திறக்கும்போது உள்ளே நுழையும். ஒரு குறுகிய இடத்தின் வெளியே வீட்டுக்குள் நுழைவது அல்லது ஒரு தாழ்வாரத்தின் வழியே வீட்டுக்குள் நுழைவது மோசமான ஃபெங்சுயி ஆகும். பிரதான வாயில்களுக்கு அருகிலேயே கழிப்பறை இருப்பதும் கெடுதல். அப்பார்ட்மெண்டிற்கு பகலிலும், இரவிலும் விளக்குகள் மூலம் செயற்கை வெளிச்சம் உண்டாக்கிக் கொள்வது மிகவும் நல்லது. வீட்டு மனை ஃபெங்சுயிக்கு மாறான அமைப்பில் இருந்தால் அங்கே உயிர் சக்தி குறைவாக இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வாக இயந்திரப் பொறிகள் அமையும் எனலாம்.
அவற்றை அமைத்துக்கொள்ளும் விதம் குறித்து இனி பார்க்கலாம்.
நீர்வாழ் உயிரினங்களுக்கான செயற்கை நீர்நிலைகள் (Aquarium): மீன் தொட்டியில் ஏழு மீன்கள் வளர்ப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று தங்க மீனாகவும், ஒன்று கருப்பு மீனாகவும் இருக்க வேண்டும். வீட்டின் உள்ளிருந்து பார்க்கும்போது மீன் தொட்டி கதவுக்கு வலப்புறம் இருக்கக் கூடாது. ஆனால், செல்வத்துக்குரிய தென்கிழக்கு பகுதியில் இதனை அமைத்தால் நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தேடித் தரும் என்று நம்பப்படுகிறது. ஃபெங்சுயியின் பயன்களைப் பெற விளக்குகளை தெற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் பொருத்தலாம்.
கொக்கு: இது நீண்ட ஆயுளைக் குறிக்கும். நோயுற்ற முதியவர்கள் வசிக்கும் அறையில் கொக்கு படத்தை தொங்க விடலாம். இதனால் அவர்கள் நோயிலிருந்து விரைவில் மீண்டெழுவார்கள்.
யானை: இது விவேகத்தைக் (Wisdom) குறிப்பது. குழந்தைகள் படிக்கும் அறையில் கிழக்கு அல்லது மேற்கு பக்கம் மரத்தால் செய்த யானை ஒன்றை வைக்கலாம். யானையின் அளவு முக்கியமல்ல. ஆனால், அது அறைக்குள் வருபவரின் பார்வையில் படக்கூடியதாக இருக்க வேண்டும்.
காற்றில் ஒலிக்கும் மணித் தொடர் (Chime): இவற்றை மென் காற்று வீசும் இடத்தில் தொங்கவிட்டு பகலில் ஒலிக்கச் செய்தால் போதும். இரவில் அந்த ஓசை தேவையில்லை என்பதால் ஜன்னலை மூடி விடலாம். பாகுவா கண்ணாடியை (Pakua mirror) பிரதான வாயிலுக்கு மேலாகப் பயன்படுத்த வேண்டும்.
விண்ணக விலங்குகள் (Celestial Animals): புலி, ஆமை, பாம்புகளுடன் தீ கக்கும் விலங்கு டிராகன், பீனிக்ஸ் பறவை ஆகியவை விண்ணகம் சார்ந்த விலங்குகளாகக் கருதப்படுகிறது. இவை மரத்தில் செய்யப்பட்டு பின்பக்கம் ஸ்டிக்கருடன் இருக்கும். வீட்டில் குறிப்பிட்ட பகுதியை ஊக்குவிக்க இந்த குறியீடுகளை பயன்படுத்தலாம். ஸ்படிகத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ தொங்க விடலாம்.
பிரமிடுகள்: பிரமிடு அபார சக்தி பொருந்திய கருவி. சக்தியை வெளியிடுவதில் பிரமிடின் கூர்முனைப் பகுதி 'யாங்' சக்தியையும், அதன் அடிப்பகுதி 'யின்' சக்தியையும் வெளியிடும். இதன் சக்தி வெளிப்பாடு பிரமிடின் அடிப்பகுதியில் இருந்து 1/3 பகுதி உயரத்தில் இருக்கும். அங்கே நல்ல உயிர்ச்சக்தி (chi) வெளியாகும். இதை வரவேற்பு அறையில் தென்மேற்கு முகமாக பிரதான படுக்கை அறையில் வைக்கலாம். இப்படி வீடுகளில் உயிர்ச் சக்தியை பெருக்கி நலமுடனும், வளமுடனும் வாழலாம்!