அலுவலகத்தில் இதைப் பேசினால் சிக்கல் நிச்சயம்! உங்கள் பணியை காப்பாற்றிக்கொள்வது உங்கள் 'வாயில்' !

நிம்மதியைக் கெடுக்கும் 5 'வாய்' தவறுகள்!
Office gossip with office friends
Office gossip
Updated on

லுவலகச் சூழலில் நீங்கள் ஒரு சிறந்த ஊழியராகவும், நன்மதிப்பு மிக்க நபராகவும் திகழ, நீங்கள் பேசும் சொற்களில் மிகுந்த கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பழகும் போது, பேச வேண்டியதை மட்டும் பேசி, தேவையற்ற விஷயங்களைத் தவிர்ப்பது (Office gossip) உங்கள் வளர்ச்சிக்கும் நிம்மதிக்கும் நல்லது. அதற்கான சில முக்கிய குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. எதிர்காலத் திட்டங்கள்

நமது வேலை குறித்த எதிர்காலத் திட்டங்களையும் முயற்சிகளையும் பிறரிடம் கூறாமல் இருப்பது நலம். ஏனெனில், ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்வது மற்றவர்களுக்குத் தெரியவந்தால், அது தற்போது பார்க்கும் வேலைக்குச் சிக்கலை (பாதகத்தை) உண்டாக்கும்.

2. உடல்நலம் சார்ந்த பிரச்னைகள்

உடல்நலப் பிரச்னைகள் குறித்து சக ஊழியர்களிடமோ அல்லது நெருக்கம் இல்லாதவர்களிடமோ கூறக் கூடாது. சிலர் இதைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகத் திரிக்க வாய்ப்புள்ளது. விடுமுறை தேவைப்பட்டால், அதை யாரிடம் கேட்க வேண்டுமோ அந்த அதிகாரியிடம் மட்டும் தெரிவித்தால் போதுமானது.

3. தனிப்பட்ட விஷயங்களைப் பகிராதீர்கள்

வேலைக்கான சம்பளம், வாங்கியுள்ள கடன்கள், முதலீடுகள் போன்றவற்றை எல்லோரிடமும் பகிராதீர்கள். எல்லோரும் இவற்றை நேர்மறையாகப் பார்க்க மாட்டார்கள்; அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கை முறையை வைத்து மற்றவர்கள் உங்களைத் தவறாக எடைபோடவும் வாய்ப்பு உண்டு.

4. அரசியல் மற்றும் மதம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கும். உங்கள் பார்வை மற்றவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, பணிபுரியும் இடத்தில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த விவாதங்களைத் தவிர்ப்பது தேவையற்ற மோதல்களைத் தடுக்கும்.

5. உயர் அதிகாரிகளைப் பற்றிப் பேசாதீர்கள்

கூட வேலை பார்ப்பவர்கள், உயர் அதிகாரிகள் அல்லது நிறுவனத்தைப் பற்றிப் பின்னால் குறை கூறுவதையோ (Gossip), கிசுகிசுப்பதையோ தவிர்க்கவும். நீங்கள் பேசும் விஷயம் சம்பந்தப்பட்டவர்களுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தெரியவந்தால், அது உங்கள் நற்பெயரைக் கெடுப்பதோடு தேவையற்ற சங்கடங்களையும் ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
நாயின் தாகமும் மனிதனின் மனமும் - நாய்கள் நமக்குச் சொல்லும் நீதி!
Office gossip with office friends

அலுவலகத்தில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது உங்கள் நிபுணத்துவத்தை (Professionalism) மேம்படுத்தும். உங்கள் அலுவலக நண்பர்களுடன் பேசும் போது இந்தப் பண்புகளைக் கடைபிடித்தால், தேவையற்ற அரசியலில் இருந்து நீங்கள் விலகி இருக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com