மனதளவில் திடமாக இருக்க 5 வழிகள்! இனி சோர்வே இல்லை நம்புங்க!

Mentally Strong
Mentally Strong
Published on

- மரிய சாரா

உடலை உறுதியாகவும் திடமாகவும் வைத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி, நடை பயிற்சி என பல வழிகள் இருக்கின்றன. ஆனால் மனதை திடமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதெல்லாம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதனால் தான் பலரும் இன்று அதிக அளவில் மனா உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மனநல மருத்துவர்கள், ஆலோசனையாளர்களின் எண்ணிக்கையும் தேவையும் பெருகி வருகிறது.

சரி மனதை லேசாக வைத்துக்கொள்ள என்னதான் செய்வது? நான் பின்பற்றும் 5 வழிகளை சொல்கிறேன் கேளுங்கள்.

1. சுயநலமாய் இருங்கள்:

 எப்போதும் மற்றவர் நலனை முதன்மையாக கருத்துபவராக நீங்கள் இருந்தால், உங்களின் மனம் தான் முதலில் காயப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உங்களின் தேவைகள் நிறைவேறி விட்டனவா? உங்களுக்கு எல்லாம் குறை இல்லாமல் இருக்கிறதா? என்பதையெல்லாம் முதலில் யோசித்துக்கொள்ளுங்கள். சமயங்களில் சுயநலமாய் இருப்பது நல்லது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட.

2. தோல்விகளை எதிர்கொள்ள பழகுங்கள்:

வெற்றிக்கான வழி என்பது மலர்களைக்கொண்ட மெத்தை அல்ல, அது முட்கள் நிறைந்த கடினமான பாதை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் தோல்விகள் தான் அந்த முட்கள். ஒவ்வொரு முறையும் தோல்வி எனும் முட்கள் நம்மை பதம் பார்க்கும்போது, வலிகளை தாங்கிக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். வெற்றி என்பது எளிதில் கிடைப்பதில் திளைத்து நிற்பதல்ல. பல முட்களின் ரணங்களுக்குப் பின்னர் நிலையான வெற்றியை எட்டிப்பிடிப்பது தான். வாழ்க்கையில் தோல்விகளை மன வலிமையுடன் எதிர்கொள்ளப் பழகுங்கள். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர முடியும்.

3. உங்களை நேசியுங்கள்:

உங்களை நீங்கள் முதலில் நேசிக்கப் பழகுங்கள். உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை பெரிதாய் நேசித்துவிட முடியாது. நம்மை சுற்றியுள்ள அனைவருக்குமே ஏதோ ஒரு தேவை நம்மிடம் இருக்கும். தேவைகள் தீரும் போது அவர்கள் நம்மை நேசிப்பதை நிறுத்த வாய்ப்புண்டு. ஆனால் நம்மை நாம் அதிகப்படியாய் நேசிக்கும் போது, மற்றவர்களிடம் நமக்கான நேசத்தை தேட மாட்டோம். ஆதலால், முதலில் நீங்கள் உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை அழகாக மாற்ற நாம் கடைப்பிடிக்க வேண்டிய 10 தத்துவங்கள்!
Mentally Strong

4. யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள்:

நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம். அதை நாம் மற்றவர்கள் மீது வைக்கும்போது, எதோ ஒரு புள்ளியில் அவர்கள் நம்மை அதே நம்பிக்கை எனும் ஆயுதத்தால் திருப்பி குத்த நேரிடும். அப்போது அதன் வலி நாம்மை நொறுக்கிப்போட்டுவிடும். உங்களுக்கு நம்பிக்கையை யார் மீதாவது வைக்கவேண்டும் என்று தோன்றினால் அதை உங்கள் மீது வையுங்கள். ஏனென்றால் உங்களது நம்பிக்கையை உடையாமால் பாதுகாக்க உங்களால் மட்டுமே முடியும்.

5. எதிர்பார்ப்பதை தவிருங்கள்:

எதிர்பார்ப்புகள் தான் ஒரு மனிதனுக்கு பெரும் மன உளைச்சலை தருகின்றன. நாம் எதிர்ப்பார்ப்பதை மற்றவர் செய்யவேண்டும், அதிலும் நாம் நேசிப்பவர்கள் செய்யவேண்டும் என நினைக்கும்போது, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனால் நாம் முற்றிலுமாய் முடங்கி விடுவோம். எனவே யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது சிறியதோ பெரியதோ, அன்போ அரவணைப்போ, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com