சமீபத்திய தரவுகளின்படி ஒவ்வொரு இந்தியரும் சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் இதில் எத்தனை பேர் அந்த 5 மணி நேரத்தை சரியாக தங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. அப்படி அவர்கள் செலவிடும் நேரமானது எந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுகிறது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே இந்த பதிவில், நீங்கள் அதிகமாக கன்டென்ட் கன்சியூம் செய்யும் மீடியாக்களை எப்படி உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவது எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையில்லாதை தூக்கி எறியுங்கள்: எந்த மீடியாவாக இருந்தாலும் அதில் உங்களுக்குத் தேவையானது மட்டும்தான் வரும் என சொல்ல முடியாது. அதில் எல்லாவிதமான கன்டென்டுகளும் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையானதை மட்டும் நீங்கள் பார்க்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு இன்ஸ்டாகிராமில் உங்கள் கவனத்தை சிதறச் செய்யும் வீடியோக்கள் வந்தால், முதலில் அப்படி தொடர்ச்சியாக காணொளி பதிவேற்றும் நபரை தடுத்து விடுங்கள். இதையே எல்லா சமூக வலைதளங்களிலும் முதலில் செய்யுங்கள்.
நம்பகத்தன்மை வாய்ந்த கிரியேட்டரை மட்டும் ஃபாலோ செய்யுங்கள்: சமூக வலைத்தளங்களில் ஏதோ ஒரு காணொளியை பார்த்து உங்களுக்குப் பிடித்து போனால் அதை பதிவேற்றும் நபரை உடனடியாக ஃபாலோ செய்ய வேண்டாம். அந்த கிரியேட்டர் உண்மையிலேயே உங்களுக்குத் தேவையான காணொளி போடுபவராக இருந்தால் மட்டுமே ஃபாலோ செய்வது நல்லது.
பல விஷயங்களை தேடிப்பாருங்கள்: இணையத்திற்கு சென்றாலே ஒரே மாதிரியான விஷயங்களை மட்டுமே தேடிப் பார்க்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாத மேலும் பல புதிய விஷயங்கள் பற்றியும் தேடிப் பார்த்து அதன் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக உங்களுடைய கவனத்தை ஈர்க்கும் தேவை இல்லாத விஷயங்கள் என்னவென்று அறிந்து, அவற்றைத் தவிர்த்து வேறு நல்ல கண்டென்ட்களுக்கு உங்கள் கவனத்தை கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் தேடுவதை முழுமையாகத் தெரிந்து கொண்டு அடுத்த விஷயத்திற்கு நகருங்கள்: இணையம் என்பது ஒரே நேரத்தில் பல விஷயங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து, நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு மாய வலையாகும். எனவே ஏதோ ஒன்றைப் பற்றி தேடுவதற்காக உள்ளே செல்கிறீர்கள் என்றால், அதை முழுமையாகத் தெரிந்து கொண்டு மற்ற விஷயத்திற்கு நகருங்கள்.
இணையத்தில் நீங்கள் தேடுவது கிடைக்கும் வரை தேடுங்கள்: ஏதோ ஒன்றைத் தெரிந்து கொள்ள இணையத்தை பயன்படுத்துங்கள். எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக சமூக வலைதளங்கள் போன்ற இதர மீடியாக்களை பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்துவது உங்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்கள் தேடிச் செல்லும் புத்தகங்கள், கதைகள், வீடியோக்கள், பாட்காஸ்ட் போன்றவை கிடைக்கும் வரை தேடி, அவற்றைபற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும்.
இப்படி சோசியல் மீடியா உங்களை பயன்படுத்தாமல், நீங்கள் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதை உறுதி செய்துகொண்டு இணையத்தில் நேரத்தை செலவிடுங்கள்.