சோசியல் மீடியாக்களுக்கு நாம் ஏன் அடிமை ஆகிறோம் பற்றி அறிய, மனித உளவியலைத் தாண்டி முதலில் சோசியல் மீடியாக்களின் ஹிஸ்டரி, ஜியோகிராஃபி, இன்டென்ஷன், தேவைகள் போன்றவற்றை நாம் அறிய வேண்டும். இதை எழுத்து மூலமாக நான் விளக்குவதை விட, NETFLIX தளத்தில் The Social Dilemma என்ற டாக்குமென்டரி திரைப்படம் நீங்கள் பார்த்தால், சோசியல் மீடியாக்களின் உண்மைத் தன்மையை முழுமையாக அறிய முடியும்.
நம்மை எந்த அளவுக்கு இவர்கள் உளவியல் ரீதியாக அவர்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி இருப்பார்கள்.
பல சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் Like பட்டன்களும், Heart-களும், Emoji Reaction-களும், கருத்துகளும் நம்மை அடிமைப்படுத்தும் ஓர் பிரம்மாஸ்திரம்தான். சமூக வலைதளங்களை உருவாக்குவதற்கு பின்னால் பல உளவியல் நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது.
தொடக்க காலத்தில் சமூக வலைதளங்கள் நம்மை புதிய குடிகாரர்கள் போன்று எப்போதும் நம்மை அங்கேயே இருக்க வைக்கும்.
அடடே! இது புதுமையாக இருக்கிறதே.
நாம் பகிர்வதைக் கூட இத்தனை ஆயிரம் பேர் பார்க்கிறார்களே.
இங்க பாருடா, சும்மா விளையாட்டா ஒரு போட்டோ போட்டேன் இவ்வளவு Likes வந்திருக்கு.
அட நாங்களும் செலிப்ரிட்டி தான் போலவே. தொடர்ந்து ஏதாவது புகைப்படம், வீடியோ போட்டுகிட்டே இருப்போம்.
ஆஹா, இந்த வீடியோ பார்த்தா ஒரு மாதிரி புத்துணர்ச்சியா இருக்கே.
என்று பலரும் ZOMBIE-க்கள் போல சோசியல் மீடியாக்களில் சுற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அட இத்தனை வருஷமா பயன்படுத்துறேன் இதனால எனக்கு என்ன லாபம் என்று ஒரு கட்டத்திற்கு மேல் சிந்தித்துப் பார்க்கும்போது, பெரும்பாலானவர்களுக்கு ஒன்றுமே இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். சிலர் என்னதான் அறிவு வளர்கிறது பலருக்கு பொழுது போகிறது என்று கூறினாலும்,
நன்றாக யோசித்துப் பார்த்தால், கிடைத்த அறிவை நாம் எங்கேயும் பயன்படுத்தியதுமில்லை. பொழுது போகிறது என்ற பெயரில் காலம் மட்டுமே வீணாகிறது.
ஆனால் எந்த சமூக வலைதளமாக இருந்தாலும், அனைத்துமே ஒரு கட்டத்திற்கு மேல் saturation நிலையை அடைந்து தான் ஆக வேண்டும். அப்போது நம்முடைய மூளையானது, நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை நினைத்துப் பார்க்க தொடங்கும். இருப்பினும் சமூக வலைதளத்தை நீங்கள் விட்டுக் கொடுக்க முடியாதபடி, அவ்வப்போது புதிய அப்டேட்டுகளைக் கொடுத்து உங்களை அங்கேயே இருக்க வைப்பார்கள்.
நான் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று யாருக்கும் பரிந்துரை செய்ய மாட்டேன். இதை பல நன்மைகளுக்காக நாம் பயன்படுத்த முடியும். ஆனால் நிஜ உலகில் அதிக வேலையை வைத்துக்கொண்டு இங்கு தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா என்பதை மட்டும் சற்று யோசித்துக் கொள்ளுங்கள்.