மனித உறவுகளின் அடிப்படையே மரியாதைதான். நாம் பிறருக்கு மரியாதை கொடுக்கும்போது அவர்களும் நம்மை மரியாதையுடன் நடத்துவார்கள். மரியாதை என்பது ஒருவரின் செயல்களைப் பார்த்து தானாக நமக்கு ஏற்படுவது. நாம் எந்த அளவிற்கு பிறருக்கு அதைக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குக் கிடைக்கும். இந்தப் பதிவில் பிறருக்கு நம் மீது மரியாதையை ஏற்படுத்தும் 6 பழக்கங்கள் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறர் பேசுவதை கவனிக்கவும்: நாம் அதிகமாக பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்பது நம் மீது பிறருக்கு மரியாதையை ஏற்படுத்தும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கேள்விகளைக் கேட்டு அவர்கள் சொல்வதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் அவர்கள் சொல்வதை ஆர்வமாகக் கேட்கிறீர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
நேர்மையாக இருங்கள்: நேர்மை என்பது எந்த ஒரு உறவுக்கும் மிகவும் முக்கியமானது. எப்போதும் உண்மையாக இருங்கள். பொய் சொல்வது மற்றவர்களின் நம்பிக்கையை இழக்க செய்யும். நேர்மையானவராக இருப்பது மற்றவர்களுக்கு நீங்கள் நம்பகமானவர் என்ற உணர்வை ஏற்படுத்தி மரியாதையை உண்டாக்கும்.
மரியாதையுடன் பேசுதல்: பிறரிடம் பேசும்போது மரியாதையுடன் பேசுங்கள். கண்ணியமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். திட்டுதல், சத்தமாக பேசுதல் போன்ற செயல்களைத் தவிர்க்கவும். மற்றவர்களின் உணர்வுகளை மதித்து பேசும்போது நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
உங்கள் கருத்துக்களில் உறுதியாக இருங்கள்: உங்களது கருத்துக்களில் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பது முக்கியம். அதே நேரம் மற்றவர்களின் கருத்தையும் மதிக்கவும். நீங்கள் உங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது மற்றவர்களுக்கு நீங்கள் திடமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்ற மனப்பான்மையை உண்டாக்கும்.
பொறுப்புடன் இருங்கள்: உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் செயல்களுக்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். தவறு செய்தால் அதை ஒப்புக்கொண்டு, அதைத் திருத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் இருப்பது நீங்கள் மற்றவர்களுக்கு நம்பகமானவர் என்பதைப் புரிய வைக்கும்.
உதவும் மனப்பான்மை: உதவும் மனப்பான்மை கொண்டவராக இருங்கள். பிறருக்கு தேவைப்படும்போது உதவுங்கள். இது மற்றவர்களுக்கு நீங்கள் கனிவானவர் என்பதைத் தெரியப்படுத்தி மரியாதையை அதிகரிக்கும். மேலும், மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். இது நீங்கள் பிறரை மதிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் பண்பு.
பிறருக்கு நம் மீது மரியாதை ஏற்படுத்துவது என்பது ஒரு கலை. மேற்கண்ட பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், நாம் எளிதாக மற்றவர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடிக்கலாம். நாம் பிறருக்கு மரியாதை செலுத்தும்போது அவர்களும் நம்மை மரியாதையுடன் நடத்துவார்கள். இது நம்முடைய அனைத்து உறவுகளையும் வலுப்படுத்தும்.