

ஹல்க், அனைவரும் விரும்பும் ஒரு மார்வெல் சூப்பர் ஹீரோ. இவர் அபரிமிதமான உடல் வலிமை கொண்ட ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்தின் சின்னமாகவும் விளங்குகிறார். இவரைப் போல காமா கதிர்வீச்சால் தூண்டப்பட்ட சக்திகள் நம்மிடம் இல்லாவிட்டாலும், Hulk-ன் வாழ்க்கை பயணத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய மதிப்புமிக்க பாடங்கள் ஏராளமாக உள்ளன. இந்தப் பதிவில் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள்: ஹல்கின் உருமாற்றம் என்பது தீவிர உணர்ச்சிகளால் தூண்டப்படுகிறது. குறிப்பாக கோபம் என்ற உணர்வால் ஹல்க் வெளியே வருகிறான். தொடக்கத்தில், ப்ரூஸ் பேனரால் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் காலப்போக்கில் அதைப் புரிந்து கொண்டு ஹல்க் எப்போது வெளிவர வேண்டும் என்பதை அவர் கட்டுப்படுத்துகிறார். இப்படித்தான் நாமும் நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, சரியான சூழ்நிலைகளில் அவற்றை திறம்பட வெளிப்படுத்த வேண்டும்.
2. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்: தொடக்கத்தில் ப்ரூஸ் பேனருக்கு தன்னுள் இருந்து ஹல்க் வெளிவருவது பிடிக்கவில்லை. தன்னை மீண்டும் ப்ரூஸ் பேனராகவே மாற்றிக்கொள்ள பல முயற்சிகளை எடுத்தாலும், அனைத்துமே தோல்விலேயே முடிகிறது. இறுதியில் ஹல்க்கை ஏற்றுக் கொள்ளும் முடிவை அவர் எடுக்கிறார். இப்படி புதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், அவரை மேலும் சிறப்பாக மாற்றுகிறது. இப்படித்தான் நாமும் நம் வாழ்வில் நம்மால் தவிர்க்க முடியாத மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, அதை நமக்கு சாதகமான வாய்ப்புகளாகப் பயன்படுத்த வேண்டும்.
3. உள் வலிமையைத் தூண்டுங்கள்: நம்முடைய வலிமை நமக்கு உள்ளே தான் இருக்கிறது என்பதை ஹல்க் கதாபாத்திரம் நினைவூட்டுகிறது. என்னதான் நமக்குள் வலிமை இல்லை என நாம் நினைத்தாலும், அனைவருக்குள்ளும் வெளிவராத ஆற்றல்கள் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு நபரும் தனது உள்வலிமையை வெளியே கொண்டு வரும் முயற்சிகளில் நிச்சயம் இறங்க வேண்டும்.
4. சுயக் கட்டுப்பாடு வேண்டும்: ஹல்க் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால் கோபத்தைக் கட்டுப்படுத்துவதாகும். தொடக்கத்தில் கோபத்தை முறையாக நிர்வகிக்க முடியவில்லை என்றாலும், காலப்போக்கில் அதைப் புரிந்து கொண்டு சுய கட்டுப்பாட்டை ப்ரூஸ் பேனர் வளர்த்துக் கொள்வார். எனவே நாமும் பல விஷயங்களை சாதிக்க, சுயக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.
5. உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்: ஹல்க் என்கிற பலம் வாய்ந்த நபருக்கு உள்ளே, பலம் குன்றிய டாக்டர் ப்ரூஸ் பேனர் என்ற தனிநபரும் இருக்கிறார். அவரால் ஒருபோதும் ஹல்க்கை தன்னுள் இருந்து வெளியேற்ற முடியாது. இந்த உண்மையை அவர் ஏற்றுக்கொண்டதனாலேயே, பல மாற்றத்துக்குரிய விஷயங்கள் அவர் வாழ்வில் நடந்திருக்கும். எனவே நாமும், உண்மைகளை ஏற்றுக் கொண்டு நடந்தால், சரியான மாற்றம் நம் வாழ்வில் நிகழும்.
6. சமநிலையில் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்: ஹல்க் என்கிற கதாபாத்திரம், வலிமையும் பாதிப்பும் ஒன்றாக இருப்பதைக் குறிக்கிறது. எப்படி வலிமையில்லாத டாக்டர் பேனரும் வலிமை மிகுந்த ஹல்க்கும் இணைந்து வாழ்கிறார்களோ, அதேபோல நமக்குள்ளும் மாறுபட்ட அம்சங்கள் இருக்கிறது. எனவே நமது பலம், பலவீனங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மூலமாக, வாழ்வில் சமநிலையுடன் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.