நம் அருகிலேயே இருப்பவர்களில் சிலர் நம்மைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார்கள். இருவரும் ஒன்றாகத்தான் படித்து முடித்தோம், ஒன்றாகத்தான் எப்போதும் இருப்போம், அப்படியிருக்க இவன் மட்டும் எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்கிறான்? என்ற கேள்வியை உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த கேள்விக்கு இங்கு பதில் உள்ளது.
அதிகமாக சம்பாதிப்பவன் செய்யும் ஆறு விஷயங்கள்.
1. நிறைய இலக்கு வைத்திருப்பான்:
அவன் ஒரு பெரிய இலக்கை வைத்திருப்பான் அல்லது சிறு சிறு இலக்காக நிறைய வைத்திருப்பான். அந்த பெரிய இலக்கிற்காக உழைக்கும்போது பெரிய பதவியில் முன்னேறிக்கொண்டேதான் இருப்பான். பதவியில் முன்னேறினால் வருமானமும் அதிகரிக்கும்.
அதேபோல் சிறு சிறு இலக்கில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன், அந்த அனைத்து இலக்குகளிலும் கால் பதித்து சம்பாதிக்க முயற்சி செய்வான்.
2. அதிகப்படியான ஆசை:
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத அதிகமான ஆசைகளும் நல்லதுதான். அந்த இலக்கில் பெரிய ஆளாக மாற வேண்டும் என்ற ஆசைகள்தான் அவன் பணம் சம்பாதிக்க உதவுகின்றது.
பணத்தின் மேல் உள்ள ஆசை ஒருவனைத் திருடனாகக்கூட மாற்றிவிடும். எதில் ஆசைப்பட வேண்டும், எப்படி ஆசைப்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
3. பெரிதாக யோசிப்பான்:
'இதுதான் நம்மால் செய்யமுடியும் ஆகையால் இதுவே செய்வோம்' என்று குறுகிய வட்டத்திலேயே அவன் யோசித்துக்கொண்டிருக்க மாட்டான்.
எந்த எல்லையும் வகுத்துக்கொள்ளாமல் பெரிதளவில் யோசித்தாலே நாம் முன்னேறுவதற்கு பல வழிகள் தோன்றும் . எல்லையை தாண்டி யோசிக்கும்போது 'இதுதான்' என்று இல்லாமல் 'எது வேண்டுமென்றாலும் செய்யலாம்' என்பதற்குள் சென்று விடலாம்.
4. கடினமாக உழைப்பான்:
இரவு பகல் பார்க்காமல் வேலையில் குறியாக இருந்து கடினமாக உழைப்பான். எது வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று உட்கார்ந்து யோசித்துக்கொண்டே இருந்தால் என்னவாகும்? எதுவும் ஆகாது. நம்முடைய திட்டம் நினைத்துப் பார்க்கும்போது அழகாகத்தான் தெரியும். ஆனால் நிஜத்தில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.
5. அழுத்தமான ஒரு காரணம் இருக்கும்:
சாதிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் அழுத்தமான ஒரு காரணம் வைத்திருப்பான்.
நீங்கள் ஒன்றை கூர்ந்துக் கவனித்தால் புரியும், சாதித்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். அந்த கதையில் அவர் சாதனை அடைந்ததற்கான ஒரு காரணமும் இருக்கும். காரணம் இல்லாமல் ஒரு இலக்கு வைத்திருபவனுக்கு அது ஒரு விருப்பமாகத்தான் இருக்கும். ஆனால் காரணம் உள்ளவனுக்கு மட்டும்தான் அது ஒரு கட்டாய தேவையாக இருக்கும். அதேபோல் தான் பணம் சம்பாதிப்பதற்கும் ஒரு காரணம் வைத்துக்கொள்ள வேண்டும்.
6. தெளிவுடன் இருப்பான்:
எந்த வேலை செய்தாலும் தெளிவாக செய்வான் அல்லது தெளிவுப்படுத்திக்கொண்டு செய்வான். செய்யும் வேலையில் தெளிவிருந்தாலே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை அந்த வேலையில் அவனை முன்னேற வைத்து பணம் சம்பாதிக்க வைக்கும்.
இந்த 6 விஷயங்களில்தான் பணக்காரன் கவனமாக இருக்கிறான்.
இப்போது நீங்கள் அவன் மாதிரி ஆக வேண்டும் என்று நினைக்காமல் உங்களை மாதிரியே இருந்து மேற்சொன்ன விஷயங்களை மட்டும் நடைமுறைப்படுத்தினால் வேலையில் முன்னேறி நிறைய பணமும் சம்பாரிக்கலாம்.