நமது வாழ்வில் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம். முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களைத் தெரிந்துக்கொண்டாலே முக்கியமில்லாத விஷயங்களை நாம் எளிதாக கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக ‘யார் முக்கியம்’ என்ற கேள்வியை கேட்டால், பலர் கூறும் பதில், "என் ஃப்ரெண்டுதான் முக்கியம்", "சோறுத்தான் முக்கியம்" போன்ற பல விடைகளைத் தருவார்கள். முதலில் உண்மையாகவே உங்களுக்கு என்னவெல்லாம் முக்கியம் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. உங்களுக்கு நீங்கள்தான் முதலில்: இந்த விஷயத்தை இக்கட்டான நேரங்கள், சந்தோசமான நேரங்கள், தேர்ந்தெடுக்க வேண்டிய நேரங்கள் போன்ற அனைத்து நேரங்களிலும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கு நீங்கள் தான் முக்கியம் என்பதை நினைவில் கொண்டாலே பதில்கள் எளிதாகிவிடும். குழப்பம் தீர்ந்துவிடும். அதேபோல் இது சிறந்த முடிவாகவும் இருக்கும்.
2. வருங்காலமே முக்கியம்: இறந்த காலத்திற்கு சக்தி அதிகம்தான். ஒருமுறை அதனை நினைத்தாலே நம்மை நிகழ்காலத்தில் நிம்மதியாக இருக்க விடுவது கிடையாது. இதனால் எதிர்காலம் கேள்விக்குறியில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் கசப்பான இறந்த கால நிகழ்வுகளைப் புதைக்காதீர்கள் எரித்து விடுங்கள்.
3. உங்களுடைய கருத்து: நீங்கள் செய்யப் போகும் வேலையைப் பற்றி மற்றவர்களிடம் யோசனைக் கேளுங்கள். தவறில்லை. ஆனால் உங்கள் கருத்துகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். விளைவை எண்ணி பயப்படாமல், யாராவது எதாவது உங்களின் கருத்துகளைப் பற்றி கூறிவிடுவார்களோ என்ற பயமில்லாமல் கருத்துகளைத் தெரிவியுங்கள். இந்த பயம் மட்டும்தான் பல திறமைசாலிகளை வெளியில் வர விடாமல் தடுக்கிறது.
4. உலகத்தை நம்புங்கள்: உங்களுடைய முழு உழைப்பையும் போட்ட பிறகு நீங்கள் நம்ப வேண்டியது இந்த உலகத்தைதான். யாராவது ஒருவர் உங்கள் உழைப்பை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வருவார்கள். ஆகையால் நம்பிக்கை கொள்ளுங்கள்.
5. உறவுகளை மேம்படுத்துங்கள்: உங்களிடம் அன்பாக இருக்கும் உறவுகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. அதேபோல் உங்களைக் கண்டுக்கொள்ளாத உறவுகளிடமிருந்தும் காயப்படுத்தும் உறவுகளிடமிருந்தும் விலகி இருப்பதே நல்லது.
6. உடல் மற்றும் மன ஆரோக்கியம்: அனைத்திலும் முக்கியமானவை இவை இரண்டும்தான். நீங்கள் செய்யும் வேலைகளுக்கும் உங்களுடைய இலக்குகளுக்கும் இவை மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு விஷயத்தை செய்வதற்கான சக்தியை உடல் ஆரோக்கியம் தருகிறது. அதேபோல் அந்த விஷயத்தை சரியாக செய்து முடிப்பதற்கு மன வலிமை உதவுகிறது.