வெற்றிக்கு வித்திடுவது எது தெரியுமா?

motivation image
motivation imageImage credit - pixabay

வெள்ளைக்காரன் பூக்க வெகு நேரம் காத்திருக்கிறார்கள் அது என்ன ? என்று விடுகதை போடுவோம்.

சட்டென்று சோறு என்று கூறி விடுவார்கள்  விடை தெரிந்தவர்கள். 

வெகுநேரம் என்பதை விட வெகுநாட்கள் என்று கூறினால்தான் அதில் எத்தனை பேர் உழைப்பு அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். நெல்லை விதைத்து, பயிராக்கி அறுவடை செய்து, அதை பதமாக காயவைத்து, அரைத்து அரிசியாக்கி, நாம் சாதம் வடித்து சாப்பிடுவது வரை பலரது உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது. இப்படி பலரது கூட்டு முயற்சியால் கிடைத்த பொருள்தான் அரிசி. 

இன்னும் சொல்லப்போனால் கரிகாலன் கட்டி வைத்த கல்லணை, ராஜ ராஜ சோழன் கட்டிய பெரிய கோயில், மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் இவை அனைத்தும் தனி மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்வேறு நிபுணர்கள்,  சிந்தனையாளர்கள், கலைஞர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் பலர் சேர்ந்து எழுப்பிய கூட்டு முயற்சியால் உருவானதுதான் அவைகள் அனைத்தும்.

அவரவரும் அவரவர் சாம்ராஜ்யத்தை நிலை நாட்ட, பெயரும் புகழும் பெற அத்தனை பேர் உழைப்பையும் பெற வேண்டி இருக்கிறது. அதன் பிறகுதான் அவர்களின் பெயரும் நிலைத்து நிற்கிறது. அவர்கள் கட்டி எழுப்பிய அனைத்தும் நம்மை அவர்களின் பெயரை கூற வைக்கின்றன.  இன்னும் சொல்லப்போனால் டீம் ஒர்க் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் நாம் ரசித்து கேட்கும் இசையை கூட நம்மால் அனுபவிக்க முடியாமல் போகும் என்பதுதான் உண்மை.

அதேபோல் நிலவில் முதலில் காலடி வைத்தது யார்? என்று கேட்டால் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று சொல்லிவிடுவோம். இன்றுவரை மனித இனத்தின் மகத்தான சாதனையாக அது கருதப்படுகிறது. ஆனால் அது நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற ஒற்றை மனிதனின்  தனிப்பட்ட சாதனை அல்ல. கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்த உழைப்பின் பலனாக அவர் நிலவில் காலடி வைத்தார். ஆம் ஒருவர் நிலவைத் தொடுவதற்காக 4 லட்சம் பேர் உழைத்தார்கள். விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடங்கி எல்லா தரப்பினரும் இந்த கூட்டு முயற்சியில் இணைந்ததால்தான்  நீல் ஆம்ஸ்ட்ராங் நான் சாதித்தேன் என்று கூற முடிகிறது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை உலகமே அறியும். ஆனால் அவரின் சாதனைக்காக உழைத்த பலரது பெயர் யாருக்கும் தெரியாது. கூட்டு முயற்சியின் மகத்தான பலன் அந்த வெற்றி!

இதையும் படியுங்கள்:
பார்த்தவுடன் வருவதும்... புரிதலில் வருவதும்...
motivation image

'நான்தான் சாதித்தேன்' என்று பலரும் உரிமை கொண்டாடும் சாதனைகளுக்குப் பின்னால் இப்படி கண்ணுக்குத் தெரியாத பலரின் பங்களிப்பு இருக்கிறது. 'கூட்டு முயற்சி' என்ற அடித்தளத்தின் மீதே மாபெரும் வெற்றி சாம்ராஜ்யங்கள் உருவாக்கப்படுகின்றன. ஈகோ இல்லாமல் அதை அங்கீகரிப்பவர்கள் நிரந்தரமாக சிகரத்தில் இருக்கிறார்கள். மதிக்க மறுப்பவர்கள் மண்ணில் விழுகிறார்கள். 

வீடு, அலுவலகம், தொழில் செய்யும் இடம் என்று சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் பலர் ஒற்றுமையாக இணைந்து செய்யும் கூட்டு முயற்சிகளே வெற்றி தருகின்றன. ஆதலால் இந்த குழு முயற்சிகளில் எங்கெல்லாம் நாம் ஒத்துழைப்பு தர வேண்டுமோ அங்கெல்லாம் தயங்காமல் தளராமல் நம் பங்களிப்பை கொடுத்து வெற்றிக்கு வித்திட்டால் மற்றொரு சந்தர்ப்பத்தில் பலரது கூட்டு முயற்சிகள் சேர்ந்து நமக்கு வெற்றியை தேடித்தந்து உச்சம் பெற வைக்கும் என்பது உறுதி! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com