வாழ்வில் வெற்றியை நோக்கிச் செல்லும் பயணத்தில் நிச்சயம் கற்களும் முட்களும் சமயத்தில் பாறாங்கல்லும் தடையாக வருவதுண்டு. இவைகள் சூழல்கள் தரும் சவால்கள் என்றால் நமக்குள்ளேயே மாபெரும் சவால் ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.
மற்ற சவால்களை வேறொருவர் உதவியுடன் சமாளிக்க முடியும். ஆனால் இந்த சவாலை முழுக்க முழுக்க அவரவர்களே சமாளித்தாக வேண்டும் . எது தெரியுமா? அச்சம் எனும் சவால்தான் அது. அச்சம் ஒருவருடைய நம்பிக்கையை அழித்து விடுகிறது. அவனுடைய முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையின் குறுக்கே கடக்க முடியாத தடுப்புச் சுவரை உருவாக்கி விடுகிறது. பயத்தை வென்றவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றிகள் தொடரும்.
இந்த அச்சம் அல்லது பயம் பல விதங்களில் ஏற்பட்டாலும் பொதுவாக மனிதர்களிடையே இயற்கையாகவே எழும் ஏழு வகை அச்சங்கள் உண்டு. நம் அனைவரின் மனதில் இருக்கும் இவையே நம்மை முன்னேற விடாமல் தடுப்பதாக மனோவியல் நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அவைகள் என்ன என்பதை பார்ப்போம்.
1.நம்மிடம் இருக்கும் அனைத்தையும் இழந்து வறுமையால் வாட வேண்டி இருக்குமோ என்ற அச்சம். நமது பெற்றோர் வறிய நிலையிலிருந்து பாடுபட்டு ஒரு நிலையை அடைந்திருப்பார்கள். அதன் அனுபவமும் நண்பர்கள் மற்றும் சந்தித்த சிலரின் தோல்வி அனுபவமும் இது போன்ற அச்சத்தை தரும். வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் அனைவருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
2.மற்றவர்கள் குறை கூறுவார்களோ என்ற அச்சம். அடுத்தவர் என்ன சொல்வார்கள் என்பதை அனைவருக்கும் இயற்கையான கவலை உண்டு. ஆனால் அதைத்தாண்டிய இந்த அச்சம் தேவையற்றது.
3.ஆரோக்கியமின்மையால் அவதிப்பட வேண்டி இருக்கும் என்ற அச்சம். உடல் ரீதியான பாதிப்புகளை எண்ணி வரும்முன் ஏற்படும் இந்த அச்சத்தை ஆரோக்கியமான உணவு மற்றும் செயல்களால் விரட்டுவோம்.
4.நெருங்கி உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களின் அன்பை இழக்க வேண்டிவரும் என்ற அச்சம். நம்மை விட அதிக அந்தஸ்தில் பாசமழை பொழியும் உறவுகள் நம் முன்னேற்றம் பார்த்து ஒதுங்குவார்கள் என்ற அச்சம். இது நிச்சயம் தேவையற்றது. அவர்களைப்போல் நீங்களும் அந்தஸ்துக்கு மாறவேண்டாமா?
5. பருவத்தின் தள்ளாமையால் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்ற அச்சம். அந்தந்த பருவத்தில் மனிதன் உடல் ரீதியான தளர்ச்சி அடைவது சகஜம். இது வருமோ அது வருமோ என்று அச்சம் கொள்வதால் மேலும் தளர்வுதான் அடைவீர்கள். சிறு வயது முதலே ஆரோக்கியமான உணவுமுறை வாழ்க்கை முறை பின்பற்றி இந்த அச்சத்தை தவிர்க்கலாம். வெற்றிக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
6.தன் சுதந்திரத்தை பறிகொடுத்து அடிமையைப் போன்று அவதிப்பட வேண்டி இருக்கும் என்ற அச்சம். பணிகளில் தன்னை மீறியவர்களிடம் தன் திறமையை நிரூபிக்க முடியாமல் அவர்கள் தன்னை அடிமையாக மாற்றிவிடுவார்கள் எனும் அச்சம். இது தேவையற்ற ஒன்று. இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரவர் திறமையும் பணபலமும் அவரவர்க்கு மட்டுமே சொந்தம்.
7.மரணம் பற்றிய அச்சம். இது அனைவருக்கும் இருக்கவேண்டிய அச்சம். ஆனால் அதுவே வெற்றிக்குத் தடையாக ஆகிவிடக் கூடாது. நம் பிறப்பும் இறப்பும் மட்டுமே இன்னும் நம்மால் அறியப்படாத ரகசியம். அதை நினைத்து அச்சப்படுவது முட்டாள்தனம். அந்த அச்சத்தை அகற்றி இருக்கும்வரை முடிந்ததை செய்து முன்னேறும் முடிவுடன் இயங்கி வெற்றி பெறுவதே சிறந்தது.
இந்த ஏழு வகை அச்சங்களுடன் புறசூழல்களால் எழும் அச்சங்களையும் உதறித் தள்ளிவிட்டால் உங்கள் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது.