
"நல்ல மனிதர்" என்று பெயர் எடுப்பது எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், "நல்ல மனிதர்" என்று யாரை சொல்வது? என்னென்ன குணங்கள் இருந்தால் ஒருவரை நல்ல மனிதர் என்று உளவியல் கூறுகிறது?
மனோதத்துவம், மனிதர்களின் எண்ணங்களையும், செயல்களையும் ஆராய்ந்து, ஒரு நல்ல மனிதர் எப்படி இருப்பார் என்பதற்கான சில தெளிவான வழிகாட்டுதல்களை நமக்கு வழங்குகிறது. அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பிறர் உணர்வுகளை மதித்தல் (Empathy): நல்ல மனிதரின் முதல் அடையாளம் பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வது மற்றும் மதிப்பது. மற்றவர்களின் கஷ்டங்களையும், சந்தோஷங்களையும் உணர்ந்து, அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதும், அழுவதும்தான் உண்மையான மனித நேயம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது ஒரு நல்ல பண்பு.
2. தயாள குணம் (Kindness): தயாள குணம் என்பது மற்றவர்களுக்கு உதவி செய்வது, கருணை காட்டுவது. சின்ன உதவி என்றாலும், பெரிய உதவி என்றாலும், உதவி என்று யார் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வது நல்ல மனசுக்காரர்களின் அடையாளம். மற்றவர்களுக்கு கஷ்டம் என்று வரும்போது முதலில் ஓடிப்போய் உதவி செய்பவர்கள் நல்ல மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
3. நேர்மை (Honesty): நேர்மை, நாணயத்தோடு நடப்பது ஒரு நல்ல மனிதருக்கு மிக முக்கியமான குணம். பேச்சிலும், செயலிலும் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது நேர்மை. பொய் சொல்லாமல், ஏமாற்றாமல், வாக்கு மாறாமல் இருப்பது நல்ல மனிதர்களுக்கான அடையாளம்.
4. பொறுப்புணர்வு (Responsibility): தான் செய்யும் செயல்களுக்கு பொறுப்பேற்பது முக்கியமான ஒரு பண்பு. தவறு நடந்தால், அதை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வது நல்ல மனிதரின் அடையாளம். மற்றவர்களை குறை சொல்லாமல், தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுபவர்கள் சிறந்த மனிதர்களாக கருதப்படுவார்கள்.
5. பொறுமை (Patience): பொறுமை என்பது ஒரு முக்கியமான நல்ல குணம். மற்றவர்கள் மெதுவாக செயல்பட்டாலோ அல்லது தவறுகள் செய்தாலோ கோபப்படாமல், அவர்களைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருப்பது நல்ல மனிதரின் அடையாளம். பொறுமை உள்ளவர்கள் மற்றவர்களுடன் நல்லுறவை பேணுவார்கள் மற்றும் சூழ்நிலைகளை அமைதியாக கையாளுவார்கள்.
6. மன்னிக்கும் மனப்பான்மை (Forgiveness): தவறு செய்தவர்களை மன்னிப்பது அல்லது தங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னிப்பது உயர்ந்த குணம். மனதில் கசடுகளை வைத்துக்கொண்டு கோபப்படுவதால் எந்த பயனும் இல்லை. மன்னித்து மறந்து வாழ்க்கையில் முன்னேறி செல்வது நல்ல மனிதர்களின் பழக்கம்.
7. கவனித்து கேட்பது (Active Listening): மற்றவர்கள் பேசும்போது கவனமாக கேட்பது மற்றும் அவர்கள் சொல்வதை புரிந்து கொள்வது ஒரு நல்ல பழக்கம். மற்றவர்கள் சொல்வதை மதிக்காமல், தன் கருத்தை மட்டுமே திணிப்பது தவறான அணுகுமுறை. மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
இந்த 7 பழக்கங்களும் உளவியல் படி நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை காட்டுகின்றன. இந்த பழக்கங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம், நீங்களும் ஒரு நல்ல மனிதராகவும், மற்றவர்களால் மதிக்கப்படும் நபராகவும் மாறலாம்.