
பள்ளியில் படித்த காலத்தில் என் தோழிமார்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து படிப்போம். அப்பொழுது அன்று யார் பேசாமல் இருக்கிறார்களோ, அவருக்கு அதிகம் பேசியவர்கள் கடலைமிட்டாய் பாக்கெட் பரிசாக வாங்கி தருவதாக பந்தயம் கட்டிக்கொள்வோம். அப்பொழுது அனைவரும் பேசிவிட ஒரே ஒரு தோழி மட்டும் பேசாமல் அமைதிகாப்பாள். எப்பொழுதுமே அவள் யாருக்கும் கடலைமிட்டாய் வாங்கி கொடுத்ததே இல்லை. அவளுக்குதான் மற்றவர்கள் வாங்கிக்கொடுப்போம். அப்படி ஒரு அமைதி. அதேபோல் யாரைப்பற்றியும் நிறைவாகவே பேசுவாள்.
பேசினால் நிறைவாக, இல்லையேல் பேசவேமாட்டாள். அது மாதிரி ஒரு குணம் அவளுக்கு. இதுபோன்ற பண்புடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் பேசியதை மறந்துவிட்டு, அடுத்த நொடியே பேச்சை துவங்கி விடுவதும் உண்டு. அப்படி துவங்கும் பேச்சுகூட மற்றவர்களை குறை சொல்வதாக இருப்பதும் உண்டு. அப்படி நடந்த ஒரு கதைதான் இது.
ஜென்குரு தங்களது பள்ளிக்கு வருகைத் தருவதை தெரிந்து 4 இளைஞர்கள் பரவசமானார்கள். குருவுக்கு முன்னால் நால்வரும் பேசவே கூடாது என முடிவு எடுத்தார்கள். அடுத்த நாள் மாலை குரு அவர்களை சந்திக்க போவதாக தகவல் வந்தது. அன்று காலையே தங்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். சின்ன விளக்கு ஒன்றை எரியவிட்டு நால்வரும் அமர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விளக்கு அணையத் தொடங்கியது.
இறுதியில் ஒருவன் அந்த விளக்குக்கு எண்ணெய் ஊற்றுங்கள் என்றான். இரண்டாமவன் நீ பேசக்கூடாது மறந்துவிட்டாயா? என்றான். மூன்றாம் அவன் முட்டாள்களே ஏன் பேசுகிறீர்கள்? என்றான். நாலாம் அவன் நான் மட்டும்தான் பேசவில்லை என்றான். அடுத்தநாள் ஜென் குரு அவர்களிடம் "அடுத்தவரைக் குறை சொல்லும் முன் உங்களைப் பற்றி ஒரு நொடி யோசியுங்கள்" என்றார்.
ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு"- என்றார் வள்ளுவர். பிறருடைய குற்றத்தை ஆராய்வதற்கு முன் தம்முடைய குற்றத்தை ஆராய்ந்து பார்த்தோமானால் அடுத்தவரையும் தன்னைப்போல் நேசிக்கத் துணிவோம். அப்பொழுது குறை களையப்படும். குற்றங்கள் அகற்றப்படும். அன்பு ஒன்றே உறுதிப்படும். அந்த உறுதிப்பாடு அனைத்து வெற்றிக்கும் வழிவகுக்கும். ஆதலால் குறைகளை களையவேண்டுமானால் அன்பு ஒன்றே அதற்கு ஆதாரம்.
நம்பிக்கை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும்.
அன்பு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் வாழ்க்கை இனிக்கும்
வாழ்க்கை இனித்தால் குறைகள் அடிபட்டு போகும். ஆதலால் அன்பு செய்வோம் அது அனைத்து உயிருக்கும் உயிர்ப்பை தரும்!