நாயக்கர் காலத்தில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணியின் பொன்மொழிகள் 7!

Viveka Chintamani
Viveka Chintamani
Published on

பழம்பெரும் தமிழ் நூல்களில் விவேக சிந்தாமணியும் ஒன்று. பொருள் நிறைந்த வார்த்தைகளால் நிரம்பி உள்ள இந்நூல் நாயக்கர் காலத்தில் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. அதிலிருந்து 7 பொன்மொழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.

1. செய்யாதே

ஒருவன் தான் கெட்டுப் போயிருந்தாலும், யோக்கியருக்கு உதவி செய்யவேண்டும்; அவருக்குத் தீங்கு செய்து பொருளைத் தேடுவதால், தனக்கு சுகம் கிடைப்பதாயினும் அங்ஙனம் தீங்கு நினைக்கலாகாது. நல்ல உணவு அகப்படாமல் உடல் மெலிந்தாலும், உண்ணத்தகாதவரிடத்தே உணவு உண்ணலாகாது. பொய் கூறுவதால் பூமி முழுவதுமே கிடைப்பதாயினும் பொய் கலந்த சொற்களைக் கூறலாகாது.

2. மனதை நிலைநிறுத்து

தலையில் நீர்க்குடத்தை வைத்துச் சுமந்து செல்லும் தாதியானவள் அக்குடத்தைக் கைகளால் பற்றாது கைகளை வீசி விளையாடி நடந்து சென்றாலும், அவளின் உள் மனம், “எங்கே நீர்க்குடம் தவறி விழுந்துவிடப் போகிறதோ?” என்று எண்ணி தன் முழுக் கவனத்தையும் அதன்மேலேயே செலுத்தி நடந்து வருவாள். அதுபோல, பக்தர்கள் எந்ததொழிலைச் செய்யினும் அவர்களின் உள்மனம் எப்பொழுதும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும். ஆகவே, நாம் எத்தொழிலைச் செய்தாலும் மனத்தை இறைவனிடம் செலுத்த வேண்டும்.

3. ஈதல் நன்றே

ஏரியில் நீர்வந்து பெருகும் போது மதகைத் திறந்து அந்நீருக்குப் போக்குவிட்டால், அந்த ஏரிக்கு ஒரு கெடுதியும் ஏற்படாது. வரும் நீர் தேங்கியிருக்கும். அப்படி திறந்து போக்கு விடவில்லையெனின் வெள்ளப் பெருக்கால் அவ்வேரி நிரம்பி கரைகள் உடைபடும்; நீர் முழுவதும் வெளியேறிவிடும். அதுபோல ஒருவருக்குச் செல்வம் வந்து சேருங்காலத்தே, அதில் ஒரு சிறு பகுதியை நல்வழியில் செலவிட, அப்பொருளானது வரவரப் பெருகும். இல்லையெனில் அது பெருகாமல் ஒரே சமயத்தில் சிறிதும் இன்றி நாசமடைந்து நீங்கிவிடும்.

4. நோய் வராது காக்க

ஒருவன் உணவு முதலியவைகளால் தன் உடலைப் பாதுகாக்காமையாலும், உடலுக்கு அதிக வேலையைக் கொடுத்து அதை வருத்துவதாலும், துயரமடைவதாலும், நேரத்துக்கு மலசலம் கழிக்காமையாலும், உண்ணும் உணவை வெறுத்து ஒதுக்குவதாலும், பாதி உடல் நனைந்தும் பாதி நனையாமலும் குளிப்பதாலும், அறத்தை இகழ்ந்து செய்யாமலே விடுவதாலும் அவன் உடலில் நோயுண்டாகும். வராது தடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
சாதனையாளர்களின் 5 சக்சஸ் மந்திரங்கள் இவைதான்!
Viveka Chintamani

5. கல்வி என்னும் செல்வம்

இவ்வுலகில் நிலையற்ற செல்வத்தைத் தேடியலையும் மக்களே! வெள்ளம் வந்தால் அடித்துக்கொண்டு போகாது; வெம்மைமிகு நெருப்பில் எரிந்து போகாது; பிறர் எடுக்க அதனால் குறைந்து போகாது; தானாகக் கொடுத்தாலும் குறையாது; திருடர்களின் கைகளுக்கும் எட்டாது; தமக்கே சொந்தம் எனக் காவலில் வைக்க முடியாதது. அதுவே கல்வி என்னும் செல்வம். ஆகவே, அழியாப் பொருளாம் கல்வி ஞானத்தைப் பெருக்கி நன்மை பெருவீர்களாக.

6. எது அழகு

கருணை நோக்குடைத்தலே கண் படைத்தற்கு அழகு. ஒன்றை யாசகமாக ஏற்கச் செல்லாமையே கால் படைத்தற்கு அழகு. எந்தக் கணக்கையும் சரியாகக் கணக்கிட்டுச் சொல்லும் திறமே கணிதக் கலைப் பயிற்சிக்கு அழகு. கேட்போர் மகிழ்ந்து புகழப்படுதலே இசைப்பயிற்சிக்கு அழகு. குடிமக்களை வருத்தாது 'குடிமக்கள்மீது இவ்வரசன் அன்புடையவன்' என்று பலரும் புகழும்படி அரசாள்வதே வேந்தனுக்கு அழகாகும்.

7. உணவு

செழிப்பாக வாழும் மக்கள், இஞ்சி, நெல்லிக்கனி, கீரை வகைகள், பாகற்காய், வெண்மையான கட்டித் தயிருடன் கஞ்சியையும், இராக்காலத்தே உண்ணுவது பிணியை வரவேற்பது போல! தாமரை மலராள் இலக்குமி அவர்களை விட்டு நீங்கி விடுவாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com