உண்மையான நட்பு என்பது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். நமது குடும்பத்தில் பகிர முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் நாம் பகிர்வது வழக்கம். அந்த அளவுக்கு நண்பர்களை நாம் நம்புவோம். இருப்பினும் எல்லா நண்பர்களும் நமக்கு உண்மையாக இருப்பதில்லை. சில போலி நண்பர்கள் சூழ்ச்சியாகவும், சுயநலமாகவும் செயல்பட்டு உங்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய மோசமான நண்பர்கள் வெளிப்படுத்தும் 7 அறிகுறிகள் பற்றி இப்ப பதிவில் பார்க்கலாம்.
1. நம்பகத்தன்மை இல்லாமை: உங்களுடன் போலியாக இருக்கும் நண்பர் நம்பகத்தன்மையின்மையை அவ்வப்போது வெளிப்படுத்துவர். அதாவது உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை அவர்கள் அவ்வப்போது மீறலாம், நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பலாம். இத்தகைய குணம் கொண்டவர்களிடம் ஒருபோதும் நட்புடன் இருக்காதீர்கள்.
2. தேவைக்கு பழகுவது: சில நண்பர்கள் அவர்களின் தேவைக்காக மட்டுமே உங்களுடன் பழகுவார்கள். ஒருவேளை அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும், உங்களால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்தே செய்வார்கள். அவர்களுக்கு தேவையென்றால் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் காணாமல் போய்விடுவார்கள்.
3. சுயநலம்: போலி நண்பர்கள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் தங்களையே உயர்த்திப் பேசும் இத்தகைய நபர்கள், உங்களது கருத்துக்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள். உங்களது வாழ்க்கை அல்லது உணர்வுகளுக்கு உண்மையான ஆர்வத்தை காட்ட மாட்டார்கள். ஏதோ பழக வேண்டும் என்பதற்காக பழகிக் கொண்டிருப்பார்கள்.
4. பொறாமை: நீங்கள் ஏதேனும் சாதித்துவிட்டால் அதை கொண்டாடுவதற்கு பதிலாக உங்கள் மீது பொறாமை படுபவர்கள் போலி நண்பர்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக போட்டி போடலாம். உங்களது சாதனைகளைப் பாராட்டாமல் குறைத்து மதிப்பிடலாம். எல்லா தருணங்களிலும் உங்களை மட்டம் தட்டி பேசலாம். உங்களது வெற்றியை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக, அதை நினைத்து பொறாமைப்பட்டு, கோபம் கொள்ளலாம்.
5. துரோகம்: போலி நண்பர்கள் உங்களை அடிக்கடி ஏமாற்றுவார்கள். முதுகுக்கு பின்னால் உங்களைப் பற்றி தவறாக பேசுவார்கள். உங்களது ரகசியங்களை பிறருக்கு வெளிப்படுத்தலாம் அல்லது வேண்டுமென்றே தங்களின் ஆதாயத்திற்காக உங்களை காயப்படுத்தலாம். இந்த அறிகுறி இருக்கும் நண்பர்களின் சகவாசத்தை உடனடியாக தடுப்பது நல்லது.
6. கட்டுப்படுத்தும் நடத்தை: போலி நண்பர்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக கையாளும் தன்மை படைத்தவர்கள். அவர்களுக்கு ஏற்ற மாதிரி உங்களை மாற்ற போலியாக நடிப்பது, பொய் பேசுவது, போற்றுவது போன்ற வஞ்சகமான செயல்களை பயன்படுத்தலாம். அவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்க, உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
இந்த 6 அறிகுறிகள் உள்ள நண்பர்களுடன் ஒருபோதும் பழகாதீர்கள். இதை புரிந்து கொண்டு அவர்களின் நட்பை துண்டிப்பதால், உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.