
மைக்ரோ ஹாபிட்ஸ் எனப்படும் சின்னஞ்சிறு பழக்கங்கள், செய்வதற்கு எளிதான செயல்பாடுகள். 'அட! இதெல்லாம் அத்தனை முக்கியமா? என்று நினைக்கத் தோன்றினாலும் தினசரி இவற்றை கடைபிடிக்கும் போது வாழ்வில் பெரிய மாற்றங்களை உண்டாக்கும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. வழக்கத்தை விட அரைமணி நேரம் முன்னதாக எழுந்திருப்பது
தினமும் 6 மணிக்கு எழுவது உங்கள் வழக்கமாக இருந்தால் இனி ஐந்தரை மணிக்கு விழித்து எழுவதற்கு பழகுங்கள். ஒரு நாளை 30 நிமிடங்கள் அதிகமாக கிடைக்கின்றன. அவசர அவசரமாக கிளம்பாமல் நிதானமாக வேலைகளை செய்து தயாராகலாம். இது அன்றைய நாளை திட்டமிட்டுக் கொள்ளவும் உதவுகிறது.
2. படுக்கையை ஒழுங்காக வைப்பது;
தூங்கி எழுந்ததும் போர்வையை உதறிவிட்டு தலைகாணிகளை கன்னாபின்னா என்று போடாமல், போர்வையை அழகாக மடித்து, தலைகாணிகளை சரியாக வைத்து, படுக்கையில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி அழகாக வைக்கவேண்டும். இதற்கு ஐந்து நிமிடங்கள் போதும். ஆனால் படுக்கையை நீட்டாக வைப்பது ஒரு சாதனை உணர்வையும் ஒழுங்கையும் தருகிறது. குழப்பம் இல்லாத மனநிலையை ஊக்குவிக்கிறது.
3. வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது;
இரவு முழுவதும் தூங்கி எழுந்த பின் உடலுக்கு நீர்ச்சத்து அவசியம். வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கும்போது அது செரிமானத்தையும், உடலின் ஆற்றலையும் மேம்படுத்துகிறது. காலைக் கடன்கள் கழிக்க உதவியாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தையும் மன தெளிவையும் பராமரிக்க உதவுகிறது.
4. 10 நிமிட உடற்பயிற்சி;
பத்து நிமிடங்கள் நடப்பது அல்லது எளிய உடற்பயிற்சிகள் செய்வது பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அன்று முழுவதும் செய்யப்போகும் வேலைகளுக்கு உடலை தயார்படுத்துவதோடு மனநலனையும் மேம்படுத்தும்.
5. ஒரு பக்க புத்தக வாசிப்பு;
புத்தகம் வாசிப்பது மூளைக்கும் மனதிற்கும் மிக அருமையான ஒரு பயிற்சி. முழு அத்தியாயத்தையும் வாசிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு பக்கத்தை அல்லது ஒரு சிறிய கட்டுரையை தினமும் வாசிக்க வேண்டும் இது ஒரு நிலையான வாசிப்பு பழக்கத்தை உருவாக்குகிறது. அறிவை விரிவுபடுத்துகிறது. மூளை மேம்பாட்டிற்கு உதவுகிறது.
6. ஒரு நிமிட மூச்சுப் பயிற்சி;
காலையில் ஒரு நிமிடம் மட்டும் ஒதுக்கி மூச்சில் கவனம் செலுத்த வேண்டும். மூக்கின் வழியாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, சில வினாடிகள் நிறுத்தி வாய் வழியாக மெதுவாக மூச்சு விடவேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைத்து கவனத்தை மேம்படுத்தி உற்சாகத்தைதரும். நாள் முழுக்க இரண்டு மூன்று முறை ஒரு நிமிட மூச்சுப்பயிற்சியை செய்யலாம்.
7. மறுநாளைத் திட்டமிடுவது;
அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு நோட்டில் எழுதுவது மன அழுத்தம் இல்லாமல் தூங்க செல்வதற்கு உதவும். மறுநாள் என்ன சமைக்க வேண்டும் என்று கூட திட்டமிட்டு கொண்டு தூங்கினால் நிம்மதியான உறக்கம் வரும்.
8. நன்றியுணர்வு பயிற்சி;
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு, அன்றைக்கு உதவிய மனிதர்களை நினைத்து, மனதார நன்றி சொல்ல வேண்டும். அது உடல் முழுவதும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றைய நாள் முழுவதும் செய்த வேலையினால் உடலும் மனமும் களைத்திருக்கும். நன்றியுணர்வு பயிற்சியினால் ஏமாற்றம், துக்கம் போன்றவை விலகி மனம் முழுதும் மகிழ்ச்சி உண்டாகும். அது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகுக்கும். இந்தப் பயிற்சியை செய்ய இரண்டு நிமிடம் போதுமானது.
சின்னஞ்சிறு பழக்கங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை.