நம்மில் பலர் அடிக்கடி “ஏன்டா ஆபிசுக்கு போறோம்னு இருக்கு. எப்ப பார்த்தாலும் ஒரே பிரச்னையாவே இருக்கு” என்று சலித்துக் கொள்வதை கேட்க நேருகிறது. எங்குதான் பிரச்னை இல்லை?. வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுச் சென்று மீண்டும் வீட்டிற்குத் திரும்பும் வரை பலரும் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதை எப்படி சுமூகமாக சரி செய்வது என்பது நம் கைகளில்தான் உள்ளது.
சரி. இனி நாம் அலுவலகத்தில் எப்படி பிரச்னை யில்லாமல் சிறப்பாக பணியாற்றுவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
1.சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்லும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். அடிக்கடி அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்று மேலதிகாரியிடம் தாமதத்திற்கு பொய்யான காரணங்களைக் கூறிக் கொண்டு நிற்காதீர்கள். வழக்கமான பணிநேரம் முடிந்த பின்பு அலுவலகத்திலிருந்து புறப்படும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள்.
2.தேவையின்றி விடுப்பு எடுக்காதீர்கள். விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கூடுமானவரை முன்கூட்டியே மேலதிகாரியிடம் தெரிவித்து அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
3.உடன் பணியாற்றும் ஒருவரைப் பற்றி மற்றொரு ஊழியரிடம் எக்காரணத்தைக் கொண்டும் எதையும் பேசாதீர்கள். பிறரைப் பற்றிய எந்த கருத்தையும் தெரிவிக்காதீர்கள். மீறிச் செய்தால் தேவையற்ற பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
4.சக ஊழியர்கள் எவரிடமும் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் பணி சம்மந்தமான விஷயங்களை மட்டுமே பேசுங்கள்.
5.உங்களுக்கு சம்பந்தமில்லாத பணியை உங்கள் மேலதிகாரி செய்யச் சொன்னால் உடனே முகத்தில் அடித்தாற்போல் முடியாது என்று செல்லாதீர்கள். அந்த பணியை உங்களால் செய்ய முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். முடிந்தால் செய்து முடியுங்கள். இல்லையென்றால் உங்கள் மேலதிகாரியிடம் அந்த பணியிலுள்ள சிரமங்களை எடுத்துக் கூறுங்கள். மேலதிகாரியும் அதைப்புரிந்து கொண்டு அந்த பணியை வேறு யாரிடமாவது ஒப்படைப்பார்.
6.உங்கள் பணி நேரம் முடிந்த பின்னர் உங்கள் மேலதிகாரி அவசர வேலை ஏதேனும் செய்யச் சொன்னால் முடியாது என்று மறுக்காமல் செய்து முடியுங்கள். சில சமயங்களில் மட்டுமே அவசர சூழ்நிலை காரணமாக அலுவலகங்களில் இப்படிப்பட்ட பணிகளைத் தருவது வழக்கமான ஒன்றுதான்.
7.உங்களுடைய பணிகளை தாமதிக்காமல் அன்றன்றே செய்து முடித்து விடுங்கள். ஏன் பணியை முடிக்கவில்லை என்று உங்கள் மேலதிகாரி கேட்கும் சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.
8.அன்றாடப் பணிகளை வேகமாக வேகமாகச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் பணிகளை வேகமாக முடிப்பவர் என்ற பெயர் உங்களுக்கு உருவாகிவிடும். ஒரு கட்டத்தில் உங்களால் வேகமாகப் பணியாற்ற முடியாமல் போகும்போது மேலதிகாரிக்கு உங்கள்மீது அதிருப்தி ஏற்படக்கூடும். ஒவ்வொரு பணிக்கும் அதை முடிக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அதைப் பின்பற்றி பணிகளைச் செய்து முடியுங்கள். எந்த ஒரு பணியையும் தவறின்றி நிதானமாகச் செய்யப் பழகுங்கள்.
இந்த 8 வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள். Best Employee Award ஐ தட்டிச் செல்லுங்கள்.