
வாழ்க்கையில் தோல்வியும் பின்னடைவுகளும் சகஜம். செய்து கொண்டிருக்கும் தொழிலில் திடீரென சறுக்கல், நஷ்டம், எடுத்த முயற்சிகளில் பின்னடைவுகள் போன்றவை நிகழ்வது உண்டு. அவற்றிலிருந்து மிக வேகமாக மீண்டு வர உதவும் எட்டு விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வீழ்வது தோல்வி அல்ல, ஆனால் வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி என்று சொல்வார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புத்திசாலிகள் பின்னடைவுகளிலிருந்து மீண்டு வர இந்த உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.
1. தோல்வியை ஏற்றுக்கொள்வது;
தனக்கு நேர்ந்தது தோல்விதான் என்பதை ஒரு மனிதன் உணரவேண்டும். மேலும் தோல்வி என்பது ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம் அல்ல. மாறாக இது வெற்றியின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை புரிந்து கொள்கிறார்கள். அதை ஒரு முட்டுச்சந்தாக பார்ப்பதற்கு பதிலாக மேலே ஏறிச்செல்லும் படிக்கட்டுகளாக பார்க்கவேண்டும். தோல்வியைப் பற்றி பயப்படுவதை நிறுத்திவிட்டு வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்கத் தொடங்கும்போது முன்பைவிட வேகமாகவும் வலுவாகவும் உறுதியுடனும் மீண்டு வரமுடியும்.
2. தவறுகளுக்கு பொறுப்பேற்றல்;
நடந்த தவறுகளுக்கு மற்றவர்களைக் குறை கூறுவதற்கு பதிலாக தாமே அதற்குப் பொறுப்பு ஏற்கும் மனப்பக்குவத்தை பெறவேண்டும். அப்போதுதான் அவற்றை எதிர்கால முன்னேற்றத்திற்கான பாடங்களாக எடுத்துக் கொள்ளவும், அவற்றை பயன்படுத்தவும் முடியும்.
3. சுய இரக்கம்;
தங்களது முயற்சியில் தோல்வியோ அல்லது பின்னடைவோ, அடைந்திருந்தால் அதற்காக தங்களை கடுமையாக திட்டிக்கொள்ளாமல் ஒரு நண்பரைபோல கருணையுடன், புரிதலுடன் தங்களை நடத்த வேண்டும். எல்லோரும் தவறு செய்கிறார்கள். தோல்வி என்பது ஒரு மதிப்புமிக்க ஒரு பாடம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
4. எதிர்கால இலக்குகளில் கவனம் செலுத்துதல்;
கடந்த கால தோல்விகள் மற்றும் பின்னடைவுகளை பற்றி சிந்தித்து கொண்டிருப்பதை விட எதிர்கால இலக்குகள் மற்றும் வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதால் அது உந்துதலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. மனச்சோர்வில் இருந்து மீண்டு வரும் உற்சாகத்தைத் தருகிறது.
5. உடல் மன ஆரோக்கியம்;
வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு, போதுமான ஓய்வு மற்றும் தியானம் போன்ற உடல், மன ஆரோக்கியத்தை பராமரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் மிக முக்கியமானது.
6. நேர்மறை எண்ணங்கள்;
மனதில் எண்ணங்கள் அளவிட முடியாதவை. எதிர்மறை எண்ணங்களை சிந்திக்க தொடங்கும்போது அவை அவற்றின் போக்கிலேயே கொண்டு சென்றுவிடும். எனவே அவற்றை நிறுத்திவிட்டு நேர்மறையான எண்ணங்களை பயிற்சி செய்யப் பழகவேண்டும். இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். நேர்மறை எண்ணங்கள் கொண்ட ஆதரவான நபர்கள் சூழ இருப்பது நல்லது.
7. ரிஸ்க் எடுத்தல்;
மாற்றத்திற்கு தன்னை தயார் நிலையில் ஒருவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும் செய்யும் செயல்களில் உண்டாகும் அபாயங்களை கண்ட அஞ்சாமல் தொடர்ந்து செயலாற்ற தயாராக இருக்க வேண்டும் அதனால் புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கும்.
8. தொடர்ந்து செயல்படுதல்;
நிறைய மனிதர்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்றுவிட்டு அதை மேலே தொடராமல் விட்டு விடுவார்கள். அதனால்தான் தொடர்ந்து தோல்விகளும் பின்னடைவுகளும் அவர்கள் வாழ்க்கையில் நிறைந்திருக்கும். ஆனால் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் புத்திசாலி மனிதர்கள் தடைகளை தாண்டிச் செல்லும் வழிகளை கண்டுபிடித்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை அவர்களை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும்.