
பறவைகளை நாம் எல்லோருமே அன்றாடம் பார்க்கிறோம். ஆனால் பறவைகளிடமிருந்து நாம் என்ன வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
பறவைகளின் வாழ்க்கை எப்போதும் சுதந்திரமாகவும், சுமையற்றதாகவும் போற்றப்படுகிறது. நமக்கு பறப்பதற்கு சொந்தமாக இறக்கைகள் முளைக்க முடியாமல் போகலாம், ஆனால் நாம் இறகுகள் கொண்ட அந்த பறவைகளிடமிருந்து கற்றுக்கொள்ள நிச்சயமாக நிறைய இருக்கிறது.
பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான ஆறு வாழ்க்கைப் பாடங்களை இங்கே பார்க்கலாம்...
1. நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்:
பறவைகள் கூட்டில் தன் குஞ்சுகளையோ அல்லது முட்டைகளையோ வைத்து விட்டு நம்பிக்கையோடு உணவுதேட செல்கின்றன. அவைகள் யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்று எண்ணி உட்கார்ந்துவிட்டால் உணவு எங்கிருந்து கிடைக்கும். மேலும் அவைகள் தினமும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பறந்து திரிகின்றன. அது மட்டுமில்லாமல் குஞ்சுகள் சிறிது பெரிதாகியவுடன் பறக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அம்மா பறவையுடன் சேர்ந்து பறக்க ஆரம்பிக்கின்றன. நாமும் நம் வாழ்க்கையில் எது நடந்தாலும் எதிர்காலத்தை பற்றி நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.
2. உண்மையான வண்ணங்கள் அல்லது தன்மைகள் பிரகாசிக்க தயங்கக் கூடாது:
பறவைகள் தனக்குரிய நிறத்தை பற்றி கவலைப்படுவது இல்லை. காகம் கருப்பாக இருந்தாலும் எத்தனை பிரகாசமாக பறக்கிறது. தனக்கு கொடுக்கபட்ட நிறத்தோடும் தன்மையோடும் பறக்கிறது. பறவைகள் தங்களுடைய உண்மையான நிலைகளை எப்போதும் மாற்றியது இல்லை. அதைப்போல நாமும் பறவைகளிடமிருந்து இந்த வாழ்க்கைப் பாடத்தைக் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். பறவைகள் தாங்களாகவே இருக்கவும், தங்கள் விசித்திரமான தன்மைகளை பிரகாசிக்கவும் யோசிப்பதில்லை. ஆகவே நாமும் நமக்கென்று அமைக்கப்பட்ட தன்மையோடும் சூழ்நிலைகளோடும் வாழவேண்டும். யார் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் யோசிக்க கூடாது.
3. காலத்திற்கு ஏற்றவாறு இடம் மாறவோ அல்லது செயல்புரியவோ வேண்டும்:
சில பறவைகள் பருவகாலத்திற்கு ஏற்றவாறு இடம் மாறிக்கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் வெப்பமான காலநிலையைத்தேடிச் செல்லும் அல்லது வெப்ப காலத்தில் குளிர்பிரதேசத்தை நோக்கிச் செல்லும். அவ்வாறு செல்வதால்தான் அவைகள் இறக்காமல் உயிரோடிருக்கின்றன. நாமும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொண்டு, இடம் பெயரவேண்டும் என்றால் இடம் மாறி அனுசரித்து கொண்டுபோக வேண்டும்.
4. நல்ல பெற்றோராக இருங்கள்:
பல பறவைகள் தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும்; தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை கொடுப்பதற்காக எந்தவிதமான ஆபத்தையும் எதிர்நோக்கி போராடும். எந்த மரத்தில் குஞ்சு போடுமோ, அங்கு வந்து செல்பவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். நாமும் பறவைகளைப்போல நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டும்.
5. ஒன்றாகக் கூடி இருக்க வேண்டும்:
பறவைகள் வேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதற்காகவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும் மற்றும் உணவுகளை சேர்ந்து உண்பதற்காகவும் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. மேலும் அவை பிணைப்புகளை வலுப்படுத்தவும், நண்பர்களைக் கண்டறியவும், புதியவர்களை உருவாக்கவும் இவ்வாறு செல்கின்றன.
அது மட்டுமில்லாமல் ஓரு பறவை இறந்துவிட்டால், உடனடியாக தங்களின் குரலை எழுப்பி முழு கூட்டத்தையும் கூப்பிடுகின்றன. இந்த முறையை நிச்சயமாக நாமும் செய்யவேண்டும்; நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அன்பாகவும் அரவணைப்பாகவும் இருந்து சுக தூக்கங்களில் பங்கு கொண்டு, நம் வாழ்நாள் முழுவதும் அந்த பிணைப்புகளை வலுவாக வைத்திருக்கலாம்.
6. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்:
குளிர் மற்றும் மழை நாளில் ஜன்னலில் அமர்ந்து ஒரு ஜோடி புறாக்கள் ஒன்றையொன்று நோக்கி கூவுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது உறைபனி நிறைந்த நாளில் ஒரு மரங்கொத்தி ஒரு புழுவை இழுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? வானிலை எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் பறவைகளின் மூலமாக நாம் கற்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம். எது நேர்ந்தாலும் சரி, கூடியவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து அடுத்தவர்களையும் மகிழ்விக்கவேண்டும்.
மேற்கூறியவற்றை நாம் கடைபிடித்தால் நிச்சயமாக நாமும் பறவைகளைப் போன்று சுதந்திரமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.