வாழ்வியல் பாடத்தை உணர்த்தும் வியாபார யுக்தி!

Motivation Image
Motivation ImageImage credit -pixabay.com
Published on

து ஒரு துணிக்கடை. அங்கு விற்கப்படும் துணிகளின் விலைகள் முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் வருவார்கள், பார்ப்பார்கள். தங்களுக்கு வேண்டிய தேவையானவற்றை வாங்கிக்கொண்டு செல்வார்கள்.

அந்த நேரத்தில் அவ்வளவாக வாடிக்கையாளர்கள் இல்லை. ஒருவர் வந்தார். பேண்ட் துணிகள் விற்கும் பகுதிக்குச் சென்றார். ஒரு குறிப்பிட்ட துணியைக் காண்பித்து விலை வினவினார். அந்த விற்பனை பிரிவில் நின்றுகொண்டு இருந்தவர் மீட்டர் என்ன விலை என்று கூறினார்.

வாங்க வந்தவர், சிறிது வயதானவர்போல் காணப்பட்டார். மனக்கணக்கு போட்டுவிட்டு, "நான் இந்தத் துணி வாங்கினால், எவ்வளவு விலை குறைத்துத் தருவீர்கள்?" என்றார்.

விற்பனை பிரிவில் நின்றுகொண்டிருந்தவர் சிரித்துக்கொண்டே, "இங்கே எல்லாம் பிக்ஸ்ட் விலை" என்றார்.

வந்தவர், "விலை குறைத்துக்கொடுத்தால் வாங்கிக்கொள்கிறேன்" என்றார்.

அதற்கு விற்பனையாளர், "சரி! உங்களுக்காகக் குறைத்துக் கொடுக்கிறேன். ஆனால், ஒரு வேண்டுகோள். நீங்கள் கேட்ட துணி அளவு கொடுத்தால் மீதி உள்ள (balance cloth) விற்பனை செய்யமுடியாது. மொத்த பேண்ட் துணியையும் வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றார்.

வாங்க வந்தவர் இதை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ள டீல் முடிந்து, அந்தக் குறிப்பிட்ட துணி விற்கப்பட்டது. வந்தவரும் சந்தோஷம் பொங்க உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்தத் துணியுடன் சென்றார்.

அவர் போனதும் இந்த நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த விற்பனையாளரின் நண்பர் கேட்டார், "உங்களுக்கு நஷ்டம் இல்லையா?, அவ்வளவு குறைந்தவிலையில் கொடுத்துவிட்டீர்களே?"

இதையும் படியுங்கள்:
இந்திய மணப்பெண்களின் 4 தனித்துவமிக்க ரவிக்கை வடிவமைப்புகள்!
Motivation Image

விற்பனையாளர் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். "இல்லை. லாபம்தான். இந்த வகை துணி அவுட் ஆப் பேஷன். தேங்கிக்கிடக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் டிஸ்கவுண்ட் சேலில் இதைவிடக் குறைவான விலையில் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அப்படியும் விற்குமா என்பது சந்தேகம். இப்ப விற்ற விலை கொள்முதல் மற்ற செலவு எல்லாவற்றையும்விட சிறிது லாபத்தில் விற்கப்பட்டுள்ளது. வியாபாரத்தில் வந்த சந்தர்ப்பதை விட்டு விடக்கூடாது. அதே சமயம் சூழ்நிலைக்குத் தோதாக வளைந்தும் கொடுக்க வேண்டும். எப்போதும் கடுமையாகவோ அல்லது கண்டிப்பாகவோ இருக்கக்கூடாது. முடிந்தபோது விட்டுக் கொடுத்து வியாபாரம் செய்யக் கற்றுக்கொண்டு, நடைமுறையில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும். அந்த வாடிக்கையாளர் மிக்க மகிழ்ச்சியுடன் சென்றார். கவனித்தீர்கள் அல்லவா. இப்படிப்பட்ட வாய்ப்புகள், வணிகத்தில் நல்லெண்ணத்தை (to develop goodwill) வளர்க்க உதவும். வாய்ப்புகளை நழுவ விட்டு விடக்கூடாது," என்று முடித்தார்.

(உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com