தெளிவான மனமே சிறப்பாக செயல்பட முடியும்!


A clear mind can work better!
Motivation articles
Published on

ன அமைதி என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும். எதிலும், எங்கும் வெற்றியே, ஆனால், அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை. பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்.

அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.

அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. உணர்வுகள். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம்தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒருநாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை.

உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் போய்த்தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சித் தென்றல் வீசட்டுமே!

A clear mind can work better!

அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு ஆலோசனை கிடைத்தது. சிறுவர்களே, என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள்.

இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்ற தருவேன் என்றார். மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை.

சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள் விவசாயி வசம், “மன்னியுங்கள் அய்யா!, எங்களால கண்டுபிடிக்க இயலவில்லை’’ என்றார்கள்.

அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான். அய்யா!, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா...? என்று முயற்சி செய்து பார்க்கிறேன் என்றான்.

சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக்கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்தான். அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது.

அவருக்கு ஒரே வியப்பு. தம்பி!, நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாய்? என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
மனித உறவுகளில் நல்லவர்களை அடையாளம் காணும் தந்திரங்கள்!

A clear mind can work better!

அய்யா!, நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்...டிக்... டிக்...’ ஒலியானது கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை கண்டு பிடித்தேன் என்றான்.

நாளும் சற்று நேரத்தை, மனதை அமைதிப்படுத்த செலவழித்துப் பாருங்கள். உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள். தெளிவான மனநிலை இருந்தால் மட்டுமே நம்மால் எந்த காரியமும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com