போலியான விஷயங்களில் ஏமாற்றம் அடைகிற மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள். காரணம் உண்மையைக் காட்டிலும் போலி அழகாக இருக்கிறது. அதன் மினுமினுப்பு நம்மை இழுக்கிறது. உண்மை மென்மையாக தன் அதிர்வுகளை வெளிப்படுத்தும். அதே நேரத்தில் போலி வலுக்கட்டாயமாகத் தன்னைத் திரித்துக் கொண்டு புலன்களை நுகர வருகிறது. உண்மை ஒருபோதும் தன்னை மெய்ப்பிக்க முயற்சி செய்வதில்லை. ஆனால் போலி தன் முகத்தைத் காட்டிக் காட்டி தன்னை வெளிப்படுத்த முயற்சி செய்கிறது.
உண்மையான மனிதர்களைக் காட்டிலும், போலியான மனிதர்கள்தான் இந்த உலகத்தில் அதிகம் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் செல்லுகிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். மனிதன் உண்மையை எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான். ஒரு செடி பூக்கும்போது இதில் என்ன அதிசயம் என்று நினைக்கிறான். ஆனால் செயற்கையாக ஒரு மலரைப் பார்த்தால் அதைப் பெரிதும் விரும்புகிறான்.
ஒருமுறை அக்பர் பீர்பாலிடம் "சிறந்ததாகக் கருதப்படுவது உண்மையான பொருளா? அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்டதா" என்று கேட்டார். போலிக்குதான் மதிப்பு அதிகம் என்றார் பீர்பால். எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாகவே நீ பேசுகிறாய். நீ சொன்னதை நிரூபிக்க முடியுமா என்று அக்பர் பீர்பால் இடம் கேட்க,
பீர்பாலும் சரி என்று ஒப்புக்கொண்டார். மறுநாள் கைவினைக் கலைஞர் ஒருவரை வரவழைத்து அவரிடம் அழகான காய்கறிகள், மலர்கள் இவற்றைத் தயாரித்து தரும்படி கூற, அவரும் தயாரித்துக் கொண்டு வந்தார். அவை அனைத்தையும் அரசவைக்கு எடுத்து வருமாறும், விலை என்ன என்று கேட்டால் 1000 மொகராக்கள் என்று கூறுமாறு அந்த கலைஞரிடம் கூறினார்.
பிறகு தோட்டக்காரன் ஒருவரை அழைத்து கூடை நிறைய பூக்களும், பழங்களும் அரசவைக்கு வந்து அரசரிடம் கொடுக்கக் கூறினார். மறுநாள் பீர்பாலின் ஏற்பாட்டின்படி கைவினைக் கலைஞர் தான் கொண்டு வந்த மலர்களையும், காய்களையும் காட்டினான். அதைப் பார்த்து மகிழ்ந்த அரசர் "அற்புதம் இவற்றிற்கு என்ன விலை என்றார்" . கலைஞன் 1000 மொகராக்கள் என்று கூற அதை அவனுக்குக் கொடுத்தார்.
அவன் சென்ற பிறகு தோட்டக்காரன் வந்தான். தான் கொண்டு வந்த மலர்களையும்,காய்கறிகளையும் அரசர் முன் வைத்து தன் தோட்டத்தில் விளைந்ததை காணிக்கையாக கொடுக்க வந்ததாகக் கூறினார். அக்பர் அவனுக்கு 100 மொகராக்கள் கொடுக்க கட்டளையிட்டார். அவன் போன பிறகு பீர்பால் எழுந்து "நான் செயற்கையான பொருட்களுக்கு மதிப்பு அதிகம் என கூறியதை நிரூபிக்கிறேன். தாங்கள் செயற்கையாக செய்யப்பட்ட பூக்களுக்கும் காய்களுக்கும் 1000மொகராக்கள் தந்தீர்கள். ஆனால் இயற்கையான பூக்கள் காய்கறிகளுக்கு 100மொகராக்கள்தான் கொடுத்தீர்கள். இதிலிருந்து எது மதிப்பு மிக்கது என்பதை தாங்களே அறிந்திருப்பீர்கள் " என்று கூறியதை கேட்டு அக்பர் திகைத்துப் போனார்.