சில சமயம் எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். மனது தோற்றுவிட்டதைப் போன்ற வெறுமை உண்டாகும். அந்த மனச்சோர்வை அனுமதிக்காதீர்கள். நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். வெளியேயிருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக்கூட சமாளித்து விடலாம் ஆனால் உங்களை நீங்களே இந்த மனச்சோர்வால் தாக்கி அழித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது?.
வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஒருநாள் ஜெனரல் ஐசனோவர் சொர்க்கத்திற்குள் போனார். வாரக் கடைசியில் ஒரு நாள் நரகத்தை சுற்றிப்பார்க்க கடவுளிடம் அனுமதி கேட்டார். நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தை பார்க்க விரும்பினால் அதில் அர்த்தம் இருக்கிறது. நீ ஏன் நரகத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாய் என்று கடவுள் அவரிடம் கேட்டார்.
உடனே ஐசனோவர் அங்கே ‘’ஹிட்லர் என்ன வேதனை அனுபவிக்கிறார் என்று பார்க்கத்தான்" என்றார். கடவுளும் சம்மதித்தார். நரகத்தில் அசிங்கங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ஆள் உயரத் தொட்டியில் ஹிட்லர் அமிழ்த்தப்பட்டிருந்தார். தொட்டிக்கு வெளியே அவர் முகம் பிரகாச புன்னகையுடன் இருந்ததைப் பார்த்து ஐசனோவர் ஆச்சர்யப்பட்டார். "சகிக்க முடியாத நாற்றத்தில் அமிழ்த்தப்பட்ட போதும் நீ வெட்கமில்லாமல் சிரிக்கிறாயே " என்றார்.
உடனே ஹிட்லர் "எனக்குக் கீழ் சிக்கிக்கொண்டிருப்பது யார் தெரியுமா?. முசோலினி. அவன் தோள்களில்தான் நான் நிற்கிறேன். அவன் நிலைமையை நினைத்துப் பார்" என்று கூறி சிரித்தார். துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். உங்கள் மனதை சோர்வாகவோ அல்லது சந்தோஷமாகவோ வைத்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.
நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும். மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை. அதைக் காலடியில் போட்டு நசுக்கிவிட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். நம்பிக்கை குறைந்து அச்சம் வரும்.
வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, அது உங்களைப் பக்குவப்படுத்துவதற்கான வரம் என எண்ணவும். அகங்காரத்தை விட்டொழித்து மாற்றுக் கருத்துக்களை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.அவற்றையே உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள். கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.