
நம் நாட்டில் ஒரு பழமொழி கூறுவார்கள். "வைக்கோல் போரை காத்த நாய் போல" என்று. நாய்க்கு வைக்கோல் தின்னும் பழக்கம் இல்லை. அப்படி இருக்கும்பொழுது அது சும்மா இருக்க வேண்டியதுதானே. வைக்கோல் போர் மீது ஏறி படுத்துக்கொண்டு வைகோலை சாப்பிட வரும் பசுவை குரை குரை என்று குரைத்து அனுப்பிவிடும். அதைப் பார்த்ததும் பசு மனதிற்குள் வருத்தப்படும். இதற்கு தேவை இல்லையே இது ஏன் நம்மை தின்னவிடாமல் விரட்டுகிறது என்று எண்ணி பசு வேதனைப்படும்.
மேலும் நாம் இந்த வைக்கோலை தின்னாமல் இருப்பதால் அதற்கு என்ன லாபம். அது சாப்பிடாத ஒரு பொருளை மற்றவர்கள் சாப்பிடுவதால் அதற்கு என்ன கஷ்டம் என்று மனதிற்குள் எண்ணி புழுங்கிக் கொண்டிருக்கும். இதை வெளியில் சொல்ல முடியாததே குறை. சொல்லும்படி இருந்தால் உடனே கேட்டேவிடும்.
ஆகவே, தன்னால் அனுபவிக்க முடியாத நிலையில் ஒரு பொருளோ, திண்பண்டமோ, துணிமணிகளோ, பாத்திரம் பண்டங்களோ வீட்டில் பரணிலோ அல்லது பெரிய பெரிய பெட்டிகளிலோ அடுக்கியபடி வைத்துக் கொண்டிருப்பதை விட அவற்றை தேவைப்படுபவர் களுக்கும், இல்லாதவர்களுக்கும், அதை விருப்பப் படுபவர்களுக்கும் கொடுத்து உதவலாம்.
அதை பிறராவது அனுபவித்து மகிழட்டும் என்ற பெருந்தன்மை ஒவ்வொரு மனிதரிடமும் இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நல்ல மனிதர்கள் அனைவரும் எண்ணுவது இயற்கையே. சிலர் அதை அவ்வப்பொழுது கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்தி தானும் சந்தோஷப்பட்டு மகிழ்வது பலரிடமும் இருக்கும் நல்ல குணம்.
மாடு பசியால் துடிப்பதால் நாய்க்கு என்ன லாபம்? ஒன்றும் இல்லை. இருந்தாலும் வேண்டுமென்றே இவ்விதம் செய்கிறது நாய். நாய் மட்டுமா இவ்விதம் செய்கிறது. இதுபோல் குணம் படைத்தவர்கள் சிலரே இவ்விதம் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் செய்வது சரியல்ல என்பது நன்றாகத் தெரியும் என்றாலும், அதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தன் குறுகிய மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு, பெருந்தன்மை உடையவர்களாக இனிமேலாவது திருந்தினால் நல்ல பெயர் பெறலாம்.
சிங்கத்திடம் நடை, புலியிடம் வீரம், யானையிடம் பலம், காகத்திடம் பகிர்ந்துண்ணும் பண்பு, எருமை இடம் பொறுமை, மாடுகளிடம் கடுமையான உழைப்பு, எறும்பிடம் சுறுசுறுப்பு இவையெல்லாம் மனிதன் கற்க வேண்டிய இயற்கையின் இனிய பாடம் என்பதை இதயத்தில் பதிப்போமாக! அதன் வழி நடப்போம் ஆக!