
நமது வாழ்க்கையில் நாம் எதிா்பாா்க்காத பல வகைகளில் இலவசமாக சில அனுபவங்கள் கிடைக்கின்றன. பொதுவாகவே இலவசம் என்பது ஒரு மாயைதான். இலவசமாக ஒன்று கிடைக்கிறதே என பலரும் அந்த மாயையில் வீழ்ந்து விடுகிறாா்கள். இது வேதனையான விஷயமே!
இந்த இலவசங்களைத் தவிர வேறு வகையான இலவசங்களும் இலவசத்தின் எல்லைதாண்டி நம்மிடம் வருவது கண்டு மனம் பதைபதைக்கிறதே!
அது என்ன என்று ஆராய்ந்து பாா்த்தால் வேறு ஒன்றுமில்லை.
இலவச அறிவுரை, நம்மை மீறிய கோபம், சோம்பல், பெறாமை, அடுத்துக்கெடுத்தல், நயவஞ்சக எண்ணம். இதையும் தாண்டியும் பல விஷயங்களை மேற்கோள் காட்டலாம்.
பொதுவாக கோபமானது நமக்கு அழிவுப் பாதையைத்தான் காட்டும். அப்போது நமது செயல்பாடுகளுக்கும் நமது வாயிலிருந்து வரும் வாா்த்தைகளுக்கும் பஞ்சம்மில்லா நிலை வரும்.
அந்த நேரத்தில் நாம் அணியவேண்டிய கவசமே நிதானம் மற்றும், பொறுமை, என்பதாகும். கோபம் வரும்போது அறிவாளியும் முட்டாள் ஆகிவிடுகிறானே!
அந்த நேரம் நமது நினைவு தவறிவிடுகிறதே! நினைவு தவறினால் குழப்பம் ஏற்படும். "யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே" என்பது போல குழப்பத்தின் எல்லை மீறலானது. குடும்ப அமைதியைக் கெடுத்துவிடுமே! ஆக நமக்கு இது போன்ற இலவசம் தேவையா?
அதேபோல அறிவுரைகள் இலவசமாக கிடைத்தாலும் அனுபவப் பட்டால்தான் தொியும். அனுபவம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்கும்போது கிடைப்பதே பொிய இன்பமாகும். வாழ்க்கை என்பது ஒரு வட்டம்.
அதில் பொறாமை எனும் கோலத்தை வரைய புள்ளிகள் வைக்கக்கூடாது. அந்த புள்ளிகள் மாறினால் அலங்கோலமாகி விடுமே, வாழ்க்கை என்பது ஒரு நெடிய பயணம், நீண்ட பாதை, அதில் சோம்பல், அடுத்துக்கெடுத்தல், நயவஞ்சக எண்ணம், போன்ற தடைக்கற்களும், முட்புதர் செடிகளும், விஷ ஜந்துக்களுமாகிய எதிா்மறை எண்ணங்களும் ஆங்காங்கே வழியில் குறுக்கே கிடக்கும்.
அப்போது நாம் வெகு லாவகமாக இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, நீதி, நோ்மை, நிதானம், இவைகளை கடைபிடித்து தடைகளைத் தாண்டிவிட்டாலே வெற்றி தேவதை நம்மை வரவேற்க காத்திருப்பாளே!
ஆக இன்பமும், துன்பமும் ஏற்றுக்கொண்டேனே, என்ற பாடல் வரிகளைப்போல எங்கும் நிதானம், எதிலும் நிதானம், கடைபிடித்து நோ்மையான சிந்தனை அழியாத அன்பு இனிமையான சொல், பதமான பண்பாடு, இவைகளை கடைபிடித்து வாழ்ந்து வருவதே நிலையான வாழ்க்கையின் ஜீவநாடி என்பதாகும். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் என்ற கவிஞரின் பாடலுக்கேற்ப வாழலாமே!