
தோல்வி என்று சொல்வதைவிட அந்த வார்த்தையையே மாற்றி நம் முயற்சிகளில் லேசான பின்னடைவு என்று சொல்லிப்பாருங்கள். நம் மனத்திலேயே லேசான உற்சாகம் பிறக்கும். மனிதன் என்றில்லை இவ்வுலகில் ஜீவராசிகளும் தத்தம் வாழ்வின் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தான் செய்யும் முயற்சியில் பின்னடைவுகளைச் சந்தித்தே வருகின்றன.
இது இயற்கையின் நியதி. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. தப்பிக்க வழியில்லை என்று தெரிந்த பிறகு அதனுடன் வாழ்வது எப்படி என்று யோசிப்பதுதானே புத்திசாலித்தனம்.
நிழல் எப்படி நம் கூட பிறந்ததோ அதேபோல் நாம் செய்யும் முயற்சிகளில் பின்னடைவுகள் ஏற்படுவதும் நம் கூடவே பிறந்ததுதான். ஒரு செயலில் ஈடுபடும்போதே பின்னடைவுகளுக்கும் நம்மைத் தயார்படுத்திக் கொண்டுவிட்டால் அவைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் நமக்குத் தானாகவே வந்துவிடும்.
பிரச்னை எது அல்லது எங்கே என்று தெரியும் வரைதான் பிரச்னை. அதைக் கண்டுபிடித்துவிட்டாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான். மருத்துவர்கள் வியாதியை இனம் கண்டுகொள்ளும் வரைதான் பிரச்னை. இன்ன நோய் என்று கண்டு பிடித்துவிட்டால் அப்புறம்அதற்கான மருந்தைக் கொடுத்து குணப்படுத்துவது எளிது. பிரச்னைக்கும் அப்படித்தான் தீர்வு காணவேண்டும்.
இந்த வகையில் அனைவரும் சிந்தித்தால் யாரும் பின்னடைவுகளைக் கண்டு சோர்ந்துபோக மாட்டார்கள் அதுதான் வாழ்வின் யதார்த்தம் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல் தங்கள் வாழக்கை முறையை மாற்றிக் கொண்டு விடுவார்கள். அதுதான் விவேகமான செயலும் கூட. தோல்வியைச் சந்திக்காதவர்கள் யாருமே இவ்வுலகில் கிடையாது என்ற உண்மை நம்முள் ஊறிப்போனால் தோல்விகளைக் கண்டு நாம் துவள மாட்டோம். இன்னும் அதிக உற்சாகத்தோடு முயற்சிப்போம்.
சின்ன குழந்தையாக இருக்கும்போதே தோல்வியை எப்படி சந்திக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்களே குழந்தைகளுக்கு சொல்லித் தருவது அவசியம். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் படிப்பறிவில்லாத அம்மாக்கள் நிலாவை வரவழைத்து சோறு ஊட்டினார்கள்.
ஆனால் இன்றைய படித்த அம்மாக்கள் பல விஷயங்களை அறிந்தவர்கள் அவர்கள் தம் குழந்தைகளோடு செலவிடும் நேரங்களில் தம் அம்மாக்களும் பாட்டிகளும் தனக்கு சொன்ன கதையையே அர்த்தம் இல்லாமல் திருப்பிச் சொல்வதை விடுத்து வாழ்க்கையில் நாம் செய்யும் மிகச்சிறிய செயல்களில் கூட பின்னடைவுகள் ஏற்படலாம் என்பதையும் அதை எதிர்கொள்வது எப்படி என்பதையும் தத்தம் கற்பனைக்கு ஏற்றவாறு சொல்லலாம்.
உதாரணத்திற்கு காகம் பானையின் அடியில் இருந்த தண்ணீரை மேலே வரவழைக்க கற்களை போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்துவிட்டு பறந்தது. என்பதற்கு பதிலாக காகம் முதலில் முயற்சி செய்தது தண்ணீர் குடிக்க என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.