
நேற்று மாலை நடை பயிற்சியை முடித்துவிட்டு பார்க்கில் உள்ள பெஞ்சில் தோழியுடன் அமர்ந்தேன். எதிரே சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. விளையாட்டின்போது ஒரு குழந்தை கீழே விழுந்துவிட அருகில் இருந்த அம்மாவைப் பார்த்து ஓவென அழ ஆரம்பித்தது. அப்போது அந்த இளம் தாய் கையைப் பிடித்து குழந்தையை எழுப்பி..
"ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை ஓடு" என்று உற்சாகப்படுத்த லேசாக அழுத குழந்தை விளையாட ஆரம்பித்தது.
எனக்கு அந்த தாயின் அணுகுமுறை பிடித்திருந்தது. குழந்தை விழுந்தவுடன் அதை பெரிதுபடுத்தி, உட்காரவைத்து, தண்ணி கொடுத்து, தாலாட்டி கேட்பதற்கு பதில் உற்சாகப்படுத்தி ஒன்றுமில்லை என்று ஓட வைத்தது அருமையான செயல். இது விளையாட்டுக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.
எந்த ஒரு தோல்வியையும் அதையே எண்ணி உட்காந்து கொண்டிருக்காமல் அதைத் தாண்டி ஓட பிள்ளைகளை பழக்க வேண்டும். எப்போதுமே வெற்றிக்கனியை சுவைத்துக்கொண்டே இருக்க முடியாது.
ஒரு விஜய் பாட்டில் வரும் அருமையான வரிகள் மனதில் வந்து போகின்றது..
"வெற்றியைப் போலவே சில தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி.."
மனித வாழ்வில் இன்ப துன்பம் இயல்பு.. ஏற்றத்தாழ்வு இயல்பு.. வாழ்க்கை ஒரு ராட்டினம். எப்போதுமே மேல இருந்தவர்களும் கிடையாது கீழே நின்றவர்களும் கிடையாது. ஒரு கஷ்டமோ துன்பமோ வந்தால் அதைத் தாண்டி செல்ல பழகவேண்டும். இப்போது உள்ள இளம் தலைமுறைக்கு தோல்வி பயம் அதிகம். எப்போதும், எதிலும், தாங்கள் நினைத்தபடியே நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நடக்காத பட்சத்தில் எந்த முடிவுக்கும் போகிறார்கள்.
வாழ்க்கையில் போராடி, ஒரு கஷ்டமோ, நஷ்டமோ வந்தால், அதைதாண்டி தன்னம்பிக்கையுடன் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி பலருக்கு இருப்பதில்லை. அதற்கு நாம் தான் நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் அதை சொல்லியே பழக்க வேண்டும்.
இப்போதுள்ள வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. அதை சந்திக்க நாம் மனதளவில் பிள்ளைகளை தயார் செய்யவேண்டும். அது நம் தார்மீக பொறுப்பு. மனவுறுதியுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படிப்பட்ட சூழலையும் எளிதாக கடந்து வந்து விடுவார்கள்.
நம் வாழ்க்கை நம் கையில். அதை வென்றெடுக்க தன்னம்பிக்கையும் தைரியமும் அவசியம். "மனதில் உறுதி வேண்டும்" என்ற மீசைகவியின் வரிகள் நம் தாரக மந்திரம் ஆகட்டும்.