
தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை. ஆசைப்பட்ட பிறகு அதை அடைய நம்முடைய தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதுதான் தவறு. தகுதி என்பது எந்த விஷயத்திற்கான வரையறை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். அதை அடையமுடியும் எனில் முயற்சியும் செய்யலாம். முடியாத இலக்கு என்றால் முயற்சியை விட்டுவிட்டு அடுத்த ஆசைக்கு போக ஆசைப்படலாம்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைபோல என்று ஒரு பழமொழி உண்டு. ஆசைப்படுவது ஒருவரின் வாழ்க்கைக்கு உந்துதலாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசையை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது பயனற்றது.
தகுதிக்கு மீறிய ஆசை துன்பத்தைக் கொண்டுவரும் என்பார்கள். காரணம் வெறும் ஆசை மட்டும் இருந்தால் அது வெறுமைக்கும் ஏமாற்றத்திற்கும் வழி வகுக்கும். ஆசை நிறைவேறாமல் போகும்பொழுது ஏமாற்றம், விரக்தி, மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பேராசையாக மாறி சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும் தூண்டலாம்.
ஆசையை ஒரு உந்து சக்தியாக வைத்துக்கொண்டு முயற்சி செய்ய வாழ்வில் தொடர்ந்து முன்னேறவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் முடியும். ஆசையை நிறைவேற்ற தேவையான திறமைகளையும், உழைப்பையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.
போதும் என்று நின்றுவிட்டால் குட்டை நீராக தேங்க ஆரம்பித்து விடுவோம். அனைத்திற்கும் ஆசைப்படு என்கிறார் ஒருவர். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார் மற்றொருவர். இந்த பூமி இயங்குவது ஈர்ப்பு விசையால் மட்டுமல்ல. மனிதனின் ஆசையாலும்தான் சுழன்று கொண்டிருக்கிறது. பெரிதினும் பெரிது கேள் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஆசையை வளர்த்துக்கொண்டு அதை நோக்கி பயணிப்பதால் தான் உலகம் இந்த அளவிற்காவது இயங்குகிறது ஆசைப்படுவது தவறில்லை. ஆசைப்பட்ட பிறகு அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது அவசியம்.
ஆசைப்படுவது என்பது அனைவருக்கும் இயல்பாக எழக்கூடிய ஒரு உணர்வுதான். ஆசைப்பட்டால் மட்டும் போதாது. சரியான திட்டமிடல்களோடு தீவிரமான முயற்சியும், அதற்கான கடுமையான உழைப்பும் மிகவும் அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, தகுதியை மீறி ஆசைப்படக்கூடாது என்பார்கள். நம் தகுதி என்ன என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர பிறர் தீர்மானிக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
ஆசைப்படலாம் தவறில்லை. ஆனால் அதை அடைவதற்கு சுய ஆய்வு மற்றும் சுயமாக முடிவெடுக்கும் திறன், இலக்கை நோக்கி செல்வதற்கான முயற்சியும் தேவை. முக்கியமாக எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை மிகவும் அவசியம். கடைசியாக நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இவை எல்லாம் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம்.