
சிலரைப் பார்த்தால் எப்பொழுதும் ஏதோ ஒரு கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பார்கள். எவ்வளவு கேட்டாலும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். தன் மனதிற்குள்ளே போட்டு அடைத்து கொண்டு நன்கு உணவருந்தாமல், எந்த வேலையையும் சரியாக செய்யாமல் , வீட்டிலும் திட்டு வாங்கிக்கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கி இருப்பார்கள். அதுபோல் எதற்காக இருக்கவேண்டும். கவலையை வெற்றிகொள்ள வேண்டுமானால் ஐயத்தையும், அச்சத்தையும் விட்டொழிப்பதுதான் சிறந்த வழி.
ஐயம்தான் நமக்கு அச்சத்தை அளிக்கிறது. அந்த அச்சம் நமக்கு கவலையை உண்டு பண்ணுகிறது. செய்ததைப் பற்றியும், நாம் இனிமேல் செய்யப் போவதை பற்றியும் அஞ்சி நடுங்கி ஒடுங்குகிறோம். அப்பொழுது கவலை நம்மை கைப்பற்றி விடுகிறது. எனவேதான் ஷேக்ஸ்பியரும், 'நம்முடைய ஐயங்கள் தான் நம்முடைய துரோகிகள். அவை நம்முடைய முயற்சியைத் தடுத்து நாம் அடைய விருந்த நன்மையை அடையவிடாமல் நம்மை தடுக்கின்றது என்று கூறுகின்றார்.
ஆதலால் எந்த ஒரு செயலை செய்ய முற்படும் பொழுதும் துணிவுடன் செய்யவேண்டும். அதுபோல் துணிவுள்ளவர் ஒருபோதும் எதற்கும் கவலைப்படமாட்டார். வானமே இடிந்து விழுந்த போதிலும் , பூமி வெடித்து பிளந்த போதிலும் நிலைகுலையாது அமைதியாக வீற்றிருப்பார். அவரே விரைவில் வெற்றி அடைவார் என்பதில் ஐயமில்லை. ஆதலின் கவலையை வெற்றிக்கொள்ள முழு முதல் வழி ஐயத்தையும், அச்சத்தையும் விட்டொழிப்பதுதான் என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
அதற்குப் பிறகு எடுக்கும் எந்த முடிவையும் துணிச்சலாக எடுக்க வேண்டும். பங்கு மார்க்கெட்டில் வாணிபம் செய்யும் வணிகர்களை கவனியுங்கள். அவர்கள் ஐம்பது ரூபாய்க்கு தாங்கள் வாங்கிய பங்கு 45 ரூபாய்க்கு வந்துவிட்டது என்பதை அறிந்ததும் ஐந்து ரூபாய் இழப்பானாலும் ஆகட்டும்.
இதற்கு மேல் நாம் இதில் இழக்கக் கூடாது என்று எண்ணி உடனே அதனை 45 ரூபாய்க்கு விற்று ஐந்து ரூபாய் இழப்போடு தங்களை காத்துக்கொள்வதை அனேகர் அறிந்திருப்பர். அது போல்தான் நாமும் அடடா.! ஐந்து ரூபாய் இழந்து விட்டோமே என்ற மனஅமைதியை கெடுக்க வருபவற்றைத் தடுத்து நிறுத்தினால் கவலையை வெல்லலாம்.
இழந்தது இழந்ததாக இருக்கட்டும். இதற்கு மேல் ஒரு எள்ளளவும் என்னால் இழக்க இயலாது. இழக்கவும் கூடாது என்று துணிச்சலாக இருந்து விட்டால் நம்முடைய கவலைகளை எல்லாம் மாயமாக மறைந்து போகச் செய்து விடலாம்.
எங்கள் நண்பர் ஒருவர் கையில் குண்டூசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. விளையாடும் பொழுது அதை வாயில் போட்டுக் கொண்டு விட்டோமோ என்னவோ தெரியவில்லை. குண்டூசியை எங்கும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையே என்று கவலை கொள்ள ஆரம்பித்தார்.
உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். அனைவரும் சேர்ந்து அவரை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் விஷயத்தை கூறினோம், மருத்துவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு நீங்கள் குண்டுசியை விழுங்கவில்லை. வீட்டில் போய்ப் பாருங்கள்.
நலமாகத்தான் இருக்கிறீர்கள் என்று கூறியதும்தான் அவர் கவலையை விட்டு வெளியில் வந்தார். வளர்ந்தவர்களும் இதுபோல் சிறு பிள்ளைத்தனமாக சில செயல்களை செய்வது உண்டு. அதற்காக நாம் அவர்களை கோபித்துக்கொள்ள முடியாது. அதற்காக அவர்கள் கவலைப்படுவதைப் பார்த்துக் கொண்டும் இருக்க முடியாது. அவர்களின் ஐயத்தையும், அச்சத்தையும் போக்க வேண்டும். செய்தோம். இதனால் அவர் கவலையிலிருந்து வெளியில் வந்தார்.
விளையாட்டு வீரர்களை கவனித்தால் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற துணிவோடு தான் களத்தில் குதிக்கிறார்கள். அவ்விதம் செய்யாமல் விளையாடுவோமா? வேண்டாமா? என்னும் ஐயத்தில் இருந்தால் எப்படி வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க, விளையாட்டில் ஜெயிக்க முடியும். ஆதலால் கவலையை அப்புறப்படுத்த ஐயத்தையும் ,அச்சத்தையும் விட்டொழிப்போம். வாழ்க்கையில் இன்பங்களையும் வெற்றிகளையும் தொட்டுப் பார்ப்போம்.