
ஒரு அசாதாரணமான உயர்வான காரியத்தை செய்யத் தொடங்கும்பொழுது நம்மிடம் ஒரு தயக்கம் ஏற்படும். இது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. இந்த தயக்கம் நமது எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடுதான். ஒரு திட்டத்தோடு அதை அணுகினால் அதில் வெற்றி பெறலாம்.
இதே சூழ்நிலைதான் காமராஜருக்கும் ஏற்பட்டது. சென்னை மாகாணத்துக்கு முதல் மந்திரியாக தேர்ந்து எடுக்கும்பொழுது. அவருக்குள் தயக்கம் ஏற்பட்டது. இந்தத் தயக்கத்துக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை "தான் படிக்காதவன் தன்னால் படித்த அதிகாரிகளையெல்லாம் நிர்வகிக்க முடியுமா? நாட்டிற்கு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியுமா?" என்று பலர் எடுத்துச் சொல்லியும் முடியாது" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
விஷயத்தை கேள்விப்பட்ட பெரியார் காமராஜரிடம்," என்ன தயக்கம்? ஏன் மறுக்கிறீர்கள்"? என்று கேட்டார்.
அதற்கு காமராஜர் நான் இதுவரை கட்சிப்பணி என்று இருந்துவிட்டேன். ஒரு இடத்தில் நிர்வாகம் செய்வது என் சுபாவத்துக்கு ஒத்து வராது அதுதான் தயக்கமாக இருக்கிறது" என்றார்.
பெரியார். "நிர்வாகம் என்பது ஒரு சாதாரண விஷயம். இதோ பாருங்கள் நானும் படிக்காதவன்தான். ஆரம்பத்தில் கட்சிப்பணி, சமூக சீர்திருத்தம் என்று ஊர் ஊராக சுற்றி, சேலம் நகராட்சிக்குப் பலமுறை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டேன். என்னுடைய நிர்வாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். சரி உன் வீட்டின் நிர்வாகத்தை ஆரம்பத்தில் யார் கவனித்து வந்தார்கள்?" என்று கேட்டார்.
காமராஜர், "என் தாயார்தான்."
அவர் என்ன படித்திருந்தார்...
அப்படி ஒன்றும் இல்லை..."
படிப்பறிவு இல்லாத உங்கள் தாயார் ஒரு குடும்பத்தையே திறம்பட நிர்வாகம் செய்யவில்லையா? ஒரு அரசாங்கம் என்பதும் ஒரு குடும்பம் போலத்தான் அரசாங்கம் பெரியது. குடும்பம் சிறியது. அவ்வளவுதான். இரண்டையும் கையாளும் முறை ஒன்றுதான். அதாவது பொது அறிவு முடிவு எடுக்கும் திறமை, தைரியம் இவை எல்லாம் உங்களிடம் இருக்கிறது பிறகு என்ன?" எனக் கேட்டு முதலமைச்சர் ஆவதற்கு ஒத்துக்கொள்ள வைத்தார்.
தாழ்வு மனப்பான்மை உங்கள் வெற்றிக்கு மாபெரும் தடங்கல். என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையோடு எதையும் அணுகவும், உங்களால் முடியாதது எதுவுமில்லை.
பல அற்புதங்கள் செய்த காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பலரும் கூறுவதை நம் காதால் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.