தோல்வியில் இருப்பவர்களுக்கு ஒரு டானிக் - மூங்கில் கதை!

the story of bamboo tamil motivation
the story of bamboo! motivation storycredit AI image
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

நீங்கள் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், உங்கள் வாழ்க்கையில் ஒரு சின்ன வெற்றியைக்கூட இதுவரை பார்த்ததில்லையா? "வெற்றியே பெறாமல் எதற்காக கஷ்டப்படுகிறோம்? இதையெல்லாம் விட்டுவிட்டால் என்ன?" என்று நினைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த கதை உங்களுக்குத்தான்!

அந்த நாட்டின் அரசன், ஒரு நாள் அரண்மனைத் தோட்டக்காரனை கூப்பிட்டு, "மற்ற நாட்டு அரசர்கள் பொறாமைப்படும் அளவிற்கு, நல்ல பிரம்மாண்டமான மரங்களை வளர்த்துக் காட்டு!" என்று ஆணையிடுகிறார்.

இதைக் கேட்ட தோட்டக்காரனும், அரண்மனைக்கு முன்பாகப் புது விதைகளை விதைக்க ஆரம்பிக்கிறான். தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாகப் பராமரிக்கிறான். இப்படியே நாட்கள் வாரங்களாகின்றன; வாரங்கள் மாதங்களாகின்றன. ஆனால், அரண்மனை வாசலில் ஒரு சின்ன செடிகூட முளைக்கவில்லை.

அரசரும் பொறுமையாகக் காத்திருந்து பார்க்கிறார். ஒரு வருடம் ஆகியும் ஒரு சின்னச் செடிகூட முளைக்காததால், அரசர் தோட்டக்காரர் மீது கோபப்பட்டு சில தண்டனைகளைக் கொடுக்கிறார். இன்னொரு பக்கம், அங்கிருந்த போர் வீரர்கள் இதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். ஆனால், என்ன நடந்தாலும் அந்த விதைகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை மட்டும் தோட்டக்காரர் நிறுத்தவேயில்லை.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு...

கடைசியாக, ஐந்து வருடங்களுக்குப் பிறகு அரண்மனை வாசலில் சின்னச் சின்னச் செடிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. அடுத்த ஆறே வாரங்களில், ஒவ்வொரு மரமும் நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து நின்றன! அரசர் மிகுந்த சந்தோஷத்துடன் தோட்டக்காரனிடம், "கடந்த ஐந்து வருடங்களாக வளராத மரம், எப்படி ஆறே வாரத்தில் இவ்வளவு பெரிதாக வளர்ந்தது?" என்று கேட்கிறார்.

அதற்கு அந்தத் தோட்டக்காரர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"அரசரே, இதுதான் மூங்கில் மரம்! கடந்த ஐந்து வருடங்களாக இதன் வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியவில்லை; ஏனெனில், இது தன்னுடைய வேரை மண்ணுக்குள் ஆழமாக ஊன்றி, தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது. அதனால்தான், ஆறே வாரத்தில் நூறு அடி மரமாக வளர்ந்து நிற்கிறது!"

இந்தக் கதையில் வருவதுபோலவே, நாமும் நம் வாழ்க்கையில் வெற்றியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம், உழைத்துக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு பலனையும் கண்கூடாகப் பார்க்க முடியவில்லை என்பதால், "எதுவுமே நடக்கவில்லை" என்று அர்த்தமல்ல.

இதையும் படியுங்கள்:
மொட்டை மாடியில் பள்ளி அமைத்த காய்கறி வியாபாரி... இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி!
the story of bamboo tamil motivation

நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய வளர்ச்சி, பெரும்பாலும் சத்தமில்லாமல் தான் நடக்கும். எனவே, 'பின்வாங்கிவிடலாம்' என்ற எண்ணத்தைத் தூக்கிப்போடுங்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் தோற்கவில்லை; சத்தமில்லாமல் உங்கள் வெற்றிக்கான வேர்களை ஊன்றிக் கொண்டிருக்கிறீர்கள்!

logo
Kalki Online
kalkionline.com