மொட்டை மாடியில் பள்ளி அமைத்த காய்கறி வியாபாரி... இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி!

ஒரு சிறிய கிராமத்தின் மொட்டை மாடியில் ஆயிரம் மாணவர்களின் கனவுகளை நனவாக்க முடியுமென்றால், இன்றைய இளைஞர்கள் நினைத்தால், கண்டிப்பாக நாடு முழுவதும் இது போன்ற இன்னும் பல வகுப்பறைகளை உருவாக்க முடியும்.
Rohit Kumar Bihar teacher
inspiring education stories IndiaImage credit: AI
Published on
Kalki
Kalki

பீகாரில் ஒரு கிராமத்திலுள்ள தன் வீட்டின் மொட்டை மாடியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியாக மாற்றிய ஒரு காய்கறி வியாபாரியை பற்றி பார்க்கலாமா...

பீகாரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், விடியற்காலையில் குழந்தைகள் ஒரு குறுகலான படிக்கட்டுகளில் ஏறி செல்கிறார்கள். அங்கே, அவர்களுக்காக வண்ணம் பூசப்பட்ட சுவர்களைக் கொண்ட பள்ளி வாயில்களோ காலை மணிகளோ காத்திருக்கவில்லை. மாறாக, அங்கே ஒரு மொட்டை மாடியில், கற்றல் ஒரு போதும் பணத்தைச் சார்ந்திருக்கக் கூடாது என்று தீர்மானித்த ஒரு காய்கறி வியாபாரி தான் இருக்கிறார்.

ஆம், அந்த மொட்டை மாடி பீகாரை சேர்ந்த ரோஹித் குமார் (inspiring education stories India) என்ற நபருக்குச் சொந்தமானது. 125 ரூபாய் கட்டணத்துடன் வெறும் நான்கு பேரை வைத்து தொடங்கிய இந்த வகுப்பறையானது, இன்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான வகுப்பறையாக வளர்ந்துள்ளது.

பீகாரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ரோஹித், குழந்தை பருவத்தில், தான் ஒரு கலைஞராக வேண்டும் என்றே கனவு கண்டார். ஆனால், பிழைப்பிற்கே கஷ்டம் என்கிற பட்சத்தில், கனவுகள் பெரும்பாலும் பின்னுக்குத் தானே தள்ளப்படுகின்றன. அவருடைய பள்ளிக்கூட கட்டணத்தைச் செலுத்துவதற்காக, அவருடைய தாய் மாட்டுச் சாணத்தை விற்று, குடும்பத்தின் சுமையை ஒற்றை ஆளாகச் சுமந்தார். பணம் பற்றாக்குறையாக இருந்த காரணத்தினால் ரோஹித்தின் எதிர்பார்ப்புகளும் குறைவாகவே இருந்தன.

Rohit Kumar Bihar teacher
Rohit Kumar Bihar teacherImage credit: thebetterindia.com

ரோஹித் கல்வி கற்பதில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார் என்றே சொல்லலாம். அவரை பொறுத்த வரையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது கூட கடினமாகவே இருந்தது. பள்ளி நேரம் முடிந்ததும், மற்றவர்கள் ஓய்வெடுக்கும் வேளையில், அவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் காய்கறிகளை விற்றார். ஆனாலும், எப்படி இருந்தாலும் கல்வி தன் வாழ்க்கையை மாற்றும் என்ற ஒரே ஒரு நம்பிக்கையை அவர் தன் ஆழ்மனதில் இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தார்.

பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த போது, கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்காக ரோஹித் தன் சுற்று வட்டாரத்தில் உள்ள சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். மாதத்திற்கு கல்வி கட்டணமாக வெறும் 125 ரூபாய் மட்டுமே வசூலித்தார். கட்டணம் செலுத்த முடியாத நிலையிலிருக்கும் குழந்தைகளையும் அவர் வரவேற்றார்.

ஆரம்பத்தில், நான்கு மாணவர்கள் தான் அவருடைய எளிமையான மாடியில் கல்வி பயில வந்தார்கள்.

இவனே சரியாக படிக்க முடியாமல் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருக்கிறான், இவனால் எப்படி மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியும் என்று அவனை குறைவாக எடை போட்டு அருகிலுள்ள மக்கள் அவரைப் பார்த்து கேலி செய்து சிரித்தார்கள்.

ஆனால் ரோஹித்தோ தான் பெற்ற மதிப்பெண் சரிதான் என்று நிரூபிக்க முயற்சிக்காமல், மாறாக கற்றதை வைத்து வித்தியாசமாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கவே முயன்றார் மற்றும் அதற்காக போராடினார்.

அவர் அறிவியல் பாடங்களை எளிமையாக்கி, மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து சற்று விலகி, குழந்தைகள் அச்சமின்றி கேள்விகள் கேட்கக் கூடிய ஒரு சூழலை, புதிய முறையை உருவாக்கினார். ஒவ்வொரு குழந்தையும் கருத்தை நன்றாக புரிந்து கொள்ளும் வரை அவர் அங்கேயே தங்கி, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட, பெரும்பாலும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கற்பித்தார்.

இதையும் படியுங்கள்:
சாந்தி தெரசா லக்ரா: செவிலியர் சமூகத்தின் உத்வேகம்!
Rohit Kumar Bihar teacher

படிப்படியாக, மேலும் பல மாணவர்கள் சேரத் தொடங்கினார்கள். நான்கு பேரிலிருந்து 40 பேர் ஆனார்கள், விரைவில் அந்த 40 பேர் நூற்றுக்கணக்கானவர்களாகப் பெருகினார்கள்.

இன்று, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அவருடைய மாடியில் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள் .

தன்னுடைய பொருளாதார நிலையை ஈடுசெய்வதற்காக தொடங்கிய இந்த எளிய கட்டண படிப்பு, மிகவும் தேவைப்படும் மற்றும் கஷ்டபடும் குடும்பங்களுக்கு எளிமையான முறையில் கற்கும் ஒரு இடமாக இன்று மாறியுள்ளது.

அவருடைய மாணவர்கள்தான் அவருக்காக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கினார்கள். அதில் இப்போது லட்சக்கணக்கானோர் அவருடைய எளிய அறிவியல் சோதனைகளை ஆன்லைனில் பார்க்கிறார்கள். ஆனால் ரோஹித்தைப் பொறுத்தவரையில், சமூக ஊடகப் புகழ் என்பது அவருக்கு மிகவும் முக்கியமான சாதனை அல்ல.

அவருடைய பெருமைக்குரிய தருணம் என்பது அதைவிட மிகவும் சிறப்பான மற்றும் தனிப்பட்ட ஒன்று. அதாவது அவருடைய தாயார் இனி வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒரு காலத்தில் தன் மகன் மீது நம்பிக்கை வைத்து பார்த்து கொண்டிருந்த அதே மாடியில் இப்போது அவர் தன் மகன் கற்பிப்பதை ஆனந்தத்தோடு பார்க்கிறார்.

இதையும் படியுங்கள்:
பணத்தால் வாங்க முடியாத 15 விஷயங்கள்... மக்களே தெரிஞ்சுக்கோங்க!
Rohit Kumar Bihar teacher

அதிகமான குழந்தைகள் தரமான கற்றலை அணுகும் வகையில், மலிவான மற்றும் எளிமையான முறையில் இணையவழிக் கல்வியை இன்னும் அதிகமாக விரிவுபடுத்த ரோஹித் விரும்புகிறார். பீகாரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் மொட்டை மாடியில் ஆயிரம் மாணவர்களின் கனவுகளை நனவாக்க முடியுமென்றால், இன்றைய இளைஞர்கள் நினைத்தால், கண்டிப்பாக நாடு முழுவதும் இது போன்ற இன்னும் பல வகுப்பறைகளை உருவாக்க முடியும்.

(Source: The better India)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com