உண்மைச் சம்பவம்: ஜொலித்த நன்றியுணர்வு!
நகை கடை ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு.
அன்று வார நாள். கடையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. வந்திருந்தவர்களில் சிலர் கை வளையல்கள் செலக்ட் செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு தம்பதி, நகை வாங்க கடைக்குள் வந்தார்கள்.
கணவர் அங்கு இருந்த ஸ்டூலில் அமர்ந்துக் கொண்டார். அவர் மனைவி நகை செலக்ட் செய்வதில் பிசியாக இருக்க, கணவர் அங்கும் இங்கும் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.
ஒரு கவுண்டரில் வேலை செய்யும் ஒரு பெண் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார். உடன் வேலை செய்பவர், அவளிடம் சரியாக தேடிப்பார், என்றாள்.
முதல் பெண் என் கையில் இருந்தது. ஒரு கஸ்டமர் வாங்கி பார்த்தார். பிறகு கொடுத்தாரா என்று நினைவுக்கு வரவில்லை, என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினாள்.
நடந்தது இதுதான். ஒரு வைர மூக்குத்தியை காணவில்லை. கூடவே அந்த கஸ்டமரும் மிஸ்ஸிங். அந்த சமயத்தில் முதலாளி கடையில் இல்லை. அந்த பெண்ணுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அந்த சமயத்தில்தான் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த கணவர் கண்ணில் கடையில் வேலை செய்யும் ஒரு அழகான பெண் இப்படியும், அப்படியும் நடந்து சென்றதை கவனித்தான். அவள் நேர்த்தியாக அணிந்து இருந்த உடையை கூர்ந்து கவனித்தான்.
ஏதோ பொறி தட்டியது.
அவர் மனைவி ஒரு நகை பற்றி பேச வாய் திறந்து, தனது கணவனின் செயல் கண்டு திடுக்கிட்டாள். மெல்லிய குரலில் அதட்டி திசை திருப்ப முயன்றாள். முடியவில்லை.
வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன், அந்த வேலை செய்யும் பெண்ணிடம், "எக்ஸ்க்யூஸ் மி மேடம், இங்கே வருங்கள்", என்றான்.
அந்த பெண்ணும் வந்து, "என்ன வேண்டும் சார்.." என்றாள்.
அடுத்து அவன் கூறியதை கேட்டு அவன் மனைவிக்கு தூக்கி வாரிப் போட்டது. அவமானமாக வேறு போய்விட்டது.
அந்த பெண்ணிடம், "தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் சாரியில் மாட்டிக் கொண்டிருக்கும் அதை எடுக்க முடியுமா" என்று கூற, அந்த பெண் திட்டுக்கிட்டு அவளை அறியாமலேயே அவள் சாரியை பார்க்க, அங்கே மாட்டியிருந்த வைர மூக்குத்தி டால் அடித்துக் கொண்டிருந்தது.
இதை கண்ட அந்த குறிப்பிட்ட (வைர மூக்குத்தியை தவற விட்ட) பெண் சிப்பந்திக்கு, போன உயிர் திரும்பி வந்தது.
அவள் அந்த தம்பதியினருக்கு கைகள் கூப்பி மனதார நன்றி கூறினாள்.
நடந்தது இதுதான். வைர மூக்குத்தியை பார்வையிட்ட கஸ்டமர் திருப்பி கொடுத்ததை திரும்ப வைக்கும் சமயத்தில், அடுத்த கவுண்டர் சிப்பந்தி எதற்காகவோ இந்த பெண் ஊழியரை அவசரமாக அழைக்க, இவள் திரும்பும் பொழுது இவளை அறியாமல் அந்த மூக்குத்தி கை தவறி விழ அந்த பெண் சிப்பந்தியின் புடவையில் மாட்டிக் கொண்டதை யாரும் கவனிக்கவில்லை.
பிறகு அந்த கணவர் கண்ணில் தென்பட்டது. முதலில் அவருக்கும் புரியவில்லை.
அந்த பெண் நடக்கும் பொழுது ஏதோ பளபள என்று மின்னுகிறதே என்று கூர்ந்து கவனித்தார். பிறகு நடந்ததுதான் தெரியுமே.
கடையை விட்டு கிளம்பும் பொழுது மனைவி தனது கணவரின் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை (keen observation habit) மெச்சி ஒரு சார்டிபிகேட் கொடுத்தாள், பெருமையுடன்.
நடைமுறை மூலம் கற்பிக்கபடும் அனுபவ பாடம் நன்றாக பதியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.
செய்யும் வேலையில் எந்த வகை தடங்கல் (disturbance) வந்தாலும் கவனத்தை சிதற விடாமல் செய்தால், தேவையில்லாத பிரச்னைகளை எதிர் கொள்வதை தவிர்க்கலாம். அவர்கள் கிளம்பும் பொழுது, அந்த குறிப்பிட்ட கவுண்டர் பெண் சிப்பந்தி மறுபடியும் இருவருக்கும் நன்றி கூறினாள், கண்களில் கண்ணீருடன்.
அந்த கண்ணீரில் தெரிந்த நன்றி உணர்வு ஒளி, அந்த வைர
மூக்குத்தியை விட சிறப்பாக மின்னியது.