Absurdism: என் மனநிலையை மாற்றிய தத்துவம்!

Sad Man
Absurdism

பிறக்கும்போதே வலியிடனும் வேதனையுடனும் இவ்வுலகத்திற்கு வந்து. வளரும்போது குறிப்பிட்ட படிப்பை படிப்பது, குறிப்பிட்ட வேலையை செய்வது, கல்யாணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக்கொண்டு அவர்களையும் நம்மைப் போலவே வளர்ப்பது, சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று சம்பாதிப்பது, எதையாவது சாதிப்பது, பெரிய பதவியை அடைவது என நாம் அனைவருமே தினசரி ஏதோ ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் திடீரென்று ஒருநாள், “இது எல்லாத்தையும் நாம ஏன் செய்றோம்” என்கிற கேள்வி நமக்குள் எழுந்தால்? அந்த கேள்வியால் மனிதர்களாகிய நாம் செய்யும் எல்லா விஷயங்களுமே அர்த்தமற்ற ஒன்று என்பது நமக்குப் புரிய வந்தால்? இதுபோன்ற ஒரு Absurd மனநிலையானது வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த மனநிலை நமக்கு ஏற்பட்ட பிறகு வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும், கேள்விகளுடனும் குழப்பங்களுடனும் பார்க்க ஆரம்பிப்போம்.  

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும், மனிதர்களாகிய நாம் இத்தனை ஆண்டு காலமாக செய்து வந்த எல்லா செயல்களையும், உலகத்தில் நடக்கும் எல்லா சம்பவங்களையும், மற்றவர்கள் செய்யும் செயல்களையும், இதுவரை நாம் செய்து கொண்டிருந்த நம்முடைய வேலைகளையும் தேவையில்லாத ஒன்றாக பார்க்க ஆரம்பிப்போம். 

  • அனைத்துமே ஏன் குறிப்பிட்டபடி நடக்கிறது? 

  • யாரை திருப்தி படுத்த நாம் வேலைக்கு போக வேண்டும்? சம்பாதிக்க வேண்டும்? நல்ல நிலையை அடைய வேண்டும்? 

  • நாம் வாழ்வதற்கான அர்த்தம் என்ன? 

  • நாம் வாழ்வதற்கான அர்த்தம் ஏன் மற்றவர்களால் முடிவு செய்யப்படுகிறது? 

  • உண்மையிலேயே நமது வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன? 

  • ஏன் பிறக்கிறோம், இறக்கிறோம் இவை இரண்டிற்கும் மத்தியில் தினசரி வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்?

  • இது எல்லாமே என்னது? 

  • இந்த சமுதாயம் எடுத்துரைக்கும் அனைத்தையும் செய்துகொண்டு ஏன் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? 

Sad Man
Absurdism

இதுபோன்ற ஒரு Absurd மனநிலை ஏற்பட்ட பிறகு பலரால் அதிலிருந்து வெளிவர முடியாது. ஏனென்றால் அந்த எல்லா கேள்விகளுக்கும் இறுதிவரையில் நமக்கு பதில் கிடைக்கப் போவதில்லை. யாரெல்லாம் இதுபோன்ற ஒரு மனநிலையை எதிர்கொள்கிறோமோ, அந்த எல்லா கேள்விகளையும் நம்மிடம் நாமே திரும்பத் திரும்ப கேட்கும்போது, ஒரு கட்டத்தில் நமது வாழ்க்கையானதும், நாம் செய்து கொண்டிருக்கும் செயல்களானதும், உண்மையிலேயே அர்த்தமில்லாத ஒன்று என்பது நமக்குத் தெரியவரும்.

இன்றைய காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் இத்தகைய Absurd மனநிலையை அடிக்கடி எதிர்கொள்கிறோம். ஏனெனில் தினசரி டிவி மூலமாகவும், சோஷியல் மீடியாக்கள் வாயிலாகவும், வெவ்வேறு மக்களால் வாழ்க்கை என்றால் இப்படியெல்லாம் வாழ்வதுதான் என எடுத்துரைக்கப்படுவதனால், 

  • எப்படி நாம் உண்மையிலேயே நம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டும்? 

  • அவர்களைப் போல நாம் வாழவில்லை என்றால் நமது வாழ்க்கை அர்த்தமில்லாத ஒன்றா? 

  • உண்மையிலேயே நாம் அவர்களைப் போலதான் வாழ வேண்டுமா? 

  • அவர்களைப் போல வாழ்வதுதான் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுமா? 

  • ஒருவேளை அவர்களைப் போல நாம் வாழவில்லை என்றால் நமது வாழ்க்கை அர்த்தமில்லாத ஒன்றா? 

போன்ற கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொண்டு சோகத்திலும், தனிமையிலும் தள்ளப்படுகிறோம். 

இதையும் படியுங்கள்:
உங்களது இலக்கை அடைவதற்கான ஸ்மார்ட் வழிகள்! 
Sad Man

உண்மை என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்வில் என்ன செய்தாலும், செய்யவில்லை என்றாலும், பிறருக்கு உதவினாலும் உதவவில்லை என்றாலும், ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும், வேலைக்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும், பிறரால் மதிக்கப்பட்டாலும் மதிக்கப்படவில்லை என்றாலும், இந்த வாழ்க்கை என்பது முற்றிலும் அர்த்தமற்றது. அதில் நீங்கள் செய்யும் அனைத்துமே தேவையில்லாதது.

ஒரு கட்டத்தில் நீங்கள் இறக்கத்தான் போகிறீர்கள். சிறிது காலம் கழித்து உங்களை அனைவரும் மறக்கத்தான் போகிறார்கள். 

இந்த பதிவு ஒரு எதிர்மறையான சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தலாம். எனவே, அடுத்த பதிவில் இதுபோன்ற Absurd மனநிலையில் இருந்து மீண்டு வந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது எனப் பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com