
நாம் செய்யும் வேலையை கடினமாக நினைத்து செய்தால் நிச்சயமாக அது கடினம்தான். ஆனால், அதையே மகிழ்ச்சியோடு செய்து பாருங்களேன். அந்த வேலையும் சுலபமாக இருக்கும். மன மகிழ்ச்சி நமக்கு எவ்வளவு நன்மைகளைத்தரும் என்பதை பற்றி டென்சிங் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்பதிவில் பார்ப்போம்.
1914ஆம் வருடம் இமயமலை அடிவாரத்தில் 'கும்ஜிங்' என்ற கிராமத்தில் பிறந்தவர்தான் டென்சிங். யாக் எருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த டென்சிங்குக்கு மலையேற வேண்டும் என்ற ஆசை வந்தது. தன் தாயிடம் ஆசையைச் சொன்னபோது அவள் "நம்மைப் போன்றவர்கள் மலையேற முடியாது வேண்டுமானால் சுமை தூக்கியாகச் செல்லலாம்" என்றாள்.
சரி, ஒரு சுமை தூக்கியாகச் செல்லலாம் என்று நேபாளம் சென்று முயன்றபோது, முடியவில்லை. அப்போது தலாய்லாமாவைச் சந்தித்த டென்சிங் தன்னால் சுமை தூக்கியாகக் கூடச் செயல்பட முடியவில்லையே! என்று வேதனைப்பட்டபோது, அவர் "எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது" என்று கூறிய வார்த்தைகள் டென்சிங்கைத் தூண்டியது.
சுமை தூக்கியாகச் செல்பவர்கள் குறைந்த உணவு உட்கொண்டு வெகுதூரம் நடக்கவேண்டும். பனிக்காற்று உடம்பை ஊசிபோலக் குத்தும்போது அதைத் தாங்கிக்கொண்டு பாதைகளைக் கடக்கும்போது பாலங்களை அமைக்கவேண்டும். குறைவாகத்தான் தூங்க முடியும். இத்தனை சவால்களையும் ஏற்றுக்கொண்டு டென்சிங் பயிற்சி எடுத்தார். விரைவில் ஒரு சுமை தூக்கியாக முன்னேறினார்.
1953ஆம் ஆண்டு நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட ஹிலாரியுடன் சேர்ந்து சென்று இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை இருவரும் முதலில் அடைந்தனர். மே மாதம் 29ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு இந்தச் சாதனையை ஹிலாரியும், டென்சிங்கும் செய்தார்கள். டென்சிங் தன் மகள் கொடுத்த பென்சிலை அங்கே நட்டு வைத்தார்.
"எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது" இந்த மந்திர வார்த்தைகள்தான் டென்சிங் உலகிற்குக் சொன்னது. கடினமான வேலைகளின்போது இம்மந்திரம் உதவும். நமது வீட்டில் நமது தாய்மார்கள் இந்த மந்திரத்தைப் பெரிதும் பின்பற்றுகிறார்கள். ஆம், உங்கள் அன்னையையும் நோக்குங்கள் அர்த்தம் புரியும்.
"ஒரு வேலையை நன்றாகச்செய்ய விரும்பினால் அதை நீயே செய்ய வேண்டும்."