
ஒவ்வொருக்கும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்ற கவலை இருக்கும். ஒன்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது முட்டாள்தனமோ, அதை பொய் என்று உதாசீனப்படுத்துவதும் முட்டாள்தனம்தான். சிலர் இதைச் செய்யப் போகிறேன், அதை சாதிக்கப்போகிறேன் என்று திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கு யாரிடமாவது ஆலோசனை கேட்டே காலம் தள்ளுவார்கள்.
ஒருவர் தன் மேலதிகாரி வீட்டுக்கு ஃபோன் செய்தார். அவர் வீட்டு வேலைக்காரன் "ஐயா ஒரு விபத்தில் காலை உடைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருக்கிறார்" என்றான். தினமும் இவர் ஃபோன் செய்து கேட்க அதே பதில் வந்தது.அந்த வேலைக்காரன் கோபமானான் "ஒருமுறை சொன்னால் உனக்கும் புரியாதா? மறுபடி மறுபடி போன் செய்கிறாயே" என்றான்.
அதற்கு அவர் "அது ஒன்றும் இல்லை. இந்த இனிமையான பதிலை தினம் ஒருமுறை கேட்பதில் சுகம்" என்றான். இப்படி சிலருக்கு திரும்பத் திரும்ப விஷயங்களைப் கேட்பதே சுகமாக இருக்கும். எல்லா பிரசங்களுக்கும் போவார்கள். இவர்களுக்கு யார் குரலையாவது கேட்டுக்கொண்டு இருந்தாலே தங்கள் வாழ்க்கை சீர்படும் என்று நம்புவார்கள்.
அதற்காக அறிவுரை செய்பவரையெல்லாம் எதிரிகளாகப் பார்க்கத் தேவையில்லை. உங்களுக்கு அறிவுரை சொல்பவருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று தீர்ப்பு எழுதுவது தவறு. சில பெரியவர்கள் சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளிடம் சிகரெட் பிடிக்காதே என்று அறிவுரை சொன்னால் அவர்கள் வருத்தப்படுவார்கள்.
உங்கள் அப்பா உங்களுக்காக எதை எதையோ கொடுத்தபோது அதையெல்லாம் அவர் தனக்கு வைத்துக்கொண்டு இருக்கிறாரா என்று நீங்கள் கவலைப்பட்டீர்களா? அறிவுரை உங்களுக்காக கொடுக்கப்பட்டது. அந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.
பிரபல மனோதத்துவ நிபுணரிடம் ஒரு தம்பதி வந்திருந்தனர். அவரிடம் மனைவி "என்மீது இவருக்கு அக்கறையே இல்லை" என்று கூறினார். உடனே கணவன் "இவளுக்கு என்ன குறை, பெண்கள் க்ளப்பில் உறுப்பினராக்கியிருக்கிறேன். வீட்டில் நீச்சல் குளம், ஜிம், ஹோம் தியேட்டர் வசதிகளை செய்திருக்கிறேன். அக்கறையில்லாமலா இதையெல்லாம் செய்திருக்கிறேன்" என்றான் பிசியான கணவன்.
இருவரிடமும் விவரங்களைக் கேட்டுவிட்டு மனோதத்துவ மருத்துவர் எழுந்தார். இங்கே கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த மனைவியின் முகத்தைத் தாங்கிப் பிடித்தார். "நீ அழகாக இருக்கிறாய்" என காதில் கிசுகிசுத்தார்.
இதனால் அந்தப் பெண் திகைத்துப் போனாள். அந்த மருத்துவர் கணவனைப் பார்த்து "உங்கள் மனைவிக்கு வாரத்துக்கு இரண்டு தடவையாவது இந்த அன்பு தேவைப்படுகிறது என்றார்.
கணவன் தன் டைரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு "திங்கள் வியாழக்கிழமைகளில் இவளை அழைத்து வர முடியும். உங்களுக்கு வசதிப்படுமா?" என்றானாம்.
உங்களுக்காகச் சொல்லப்பட்டதை சொல்பவர்களுக்கே பொருத்திப் பார்ப்பது அந்தக் கணவன் மனோதத்துவ மருத்துவரைப் புரிந்து கொண்டதுபோல் ஆகிவிடும்.
எந்த அறிவுரையானாலும் அது உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான என்று மட்டும் பாருங்கள்.யாரோ நமக்கெதிரில் உட்கார்ந்து நமக்காக ஏதோ சொல்லிக் கொண்டு இருக்கிறாரே, அது என்னவென்றுதான் பார்ப்போம் என்ற திறந்த மனதுடன் அறிவுறுத்தல்களை அணுகுங்கள். திறந்த மனதுடன் இருப்பதுதான் உங்கள் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.