"சாதாரண மனிதர்கள் இயல்வதை மட்டும் நம்புவார்கள். அசாதாரமாணவர்கள் எது இயலாது முடியாதது என்பதை உணர்ந்து அதை நோக்கமாக்கி அதையும் முடியும் என்ற அளவில் பார்ப்பர். -Cherie Carter-Scott.
அவர்கள் இருவரும் தோழிகள். இருவரும் திறமைசாலிகள் எனினும் ஒருவர் சாதாரண வாழ்க்கையே போதும் என்ற மனப்பான்மை உள்ளவர். மற்றொரு பெண்ணோ சாதாரண வாழ்க்கையை வெறுப்பவர்.
கல்லூரி பருவம் இருவருக்கும் கட்டற்ற பறவைகள்போல மட்டற்ற சுதந்திரம் கிடைத்தது. தங்கள் சுயம் அறிய வெவ்வேறு இடங்களுக்கு பறந்து சென்றனர். இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை எனினும் வருடம் ஒரு முறையாவது பேசிக்கொள்வது வழக்கம். நான்கு வருடங்கள் கழிந்தது.
சாதாரண வாழ்க்கையை விரும்பிய பெண் இப்போது வெளிநாடு ஒன்றில் தனது குழந்தை மற்றும் கணவருடன் வசிக்கிறாள். குழந்தையை பார்த்துக் கொண்டு ஆன்லைன் மூலம் தனது திறமையை வளர்த்து வருமானத்தை ஈட்டுகிறாள். இது இன்றைய இளம் பெண்கள் சாதாரணமாக செய்யும் ஒரு பணியே.
சாதாரண வாழ்க்கையை விரும்பாத அவளின் தோழி இப்போது என்ன செய்கிறாள் தெரியுமா? அவளின் வம்சத்தில் யாரும் இறங்காத ஒரு துறையில் இறங்கி ஊரே புகழும் அளவுக்கு சாதித்து இருக்கிறாள். அதுதான் திரைப்படத்துறை. திரைப்படத்துறை என்றாலே தூரமாக 10 அடி தள்ளி நிற்கும் குடும்பத்தில் இருந்து வந்த அவள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே நகரத்திற்கு சென்று திரைப்படம் குறித்த தனது தேடலை துவங்கினார். அந்தத் தேடலில் முழுமூச்சாக ஈடுபட்டு "உன்னால் முடியாது திரும்ப வந்துவிடு" என்று குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் திரும்ப வராமல் "முடியாததை முடித்துக் காட்டும் திறமை எனக்குள் இருக்கிறது" என்று சொல்லி இயக்குனராகும் பயிற்சியைப் பெற்று தற்போது ஒரு வெற்றிப் படத்தையும் இயக்கி காட்டியுள்ளார்.
இப்போது ஊரெல்லாம் அந்த பெண்ணின் பேச்சுதான். அவரின் வெற்றி குறித்து தோழி "என் தோழி முடியாததை முடித்துக் காட்டும் அசாதாரணம் ஆனவள் என்பதாலேயே இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். இதற்கு அவர் தந்த விலை மிக அதிகம். இந்த விலையைத் தரத் தயாராக இருக்கும் சாதாரணமாணவர்கள் யாராக இருந்தாலும் அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைப் பெறலாம் எனது தோழி போல" என இணையத்தில் மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
ஃபிளாரன்ஸ் சாட்விக் உலகின் சிறந்த பெண் நீச்சல் வீராங்கனை. முதல் முறை கடும் பனி மண்டலமும் சுறா மீன்களின் தாக்கமும் அதிகம் இருந்த கடலில் 26 கிலோமீட்டர் பகுதியைக் கடக்க நீந்துகிறார். தோல்வியில் முடிகிறது. "சிறந்த நீச்சல் வீராங்கனை என்ற சொன்ன உங்களால் முடியவில்லை" என்னும் விமர்சனத்தை கேட்டார். முடிவு செய்தார். கடும் பயிற்சி எடுத்து இரண்டே மாதத்தில் அதே கேட்டலினா கோஸ்டில் நீச்சல் அடித்து சாதனை புரிந்தார்.
இவரைப் போன்ற அசாதாரணமானவர்கள் மட்டுமே முடியாது என்ற இலக்கை நோக்கி பயணித்து முடியும் என்று சாதித்து காட்டுகிறார்கள். வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் நம்மாலும் அசாதாரணமான செயல்களை செய்து வெற்றியாளராக வலம் வர முடியும்.