நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கும் உண்மையில் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். என்னால் அது முடியும் என்று பலர் கூறுவதை கேட்டிருக்கிறோம். அவர்களுள் எத்தனை பேர் அதை செய்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் செய்யப் போகிறார்கள் என்பதும் பெரிய கேள்விக்குறியே. பொதுவாக சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.
மிக உன்னத நோக்கத்தை விட மிகச் சிறிய செயல் சிறந்தது என்கிறார் ஜான் பர்ரோஸ். பலர் உயர்ந்த கனவுகளையும் லட்சியங்களையும் கொண்டிருப்பதன் மூலமும் அவை குறித்து தொடர்ந்து பேசுவதன் மூலமும் தாங்கள் நினைத்ததை அடைந்து விடலாம் என்று எண்ணுகின்றனர். இது தவறான எண்ணம். எண்ணத்திற்கும் என்ன நடக்கிறது என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. என்ன நடக்க வேண்டும் என்று பேசுவதற்கும், அவை நடப்பதற்கான செயல்களை செய்வதற்கும் பெரிய இடைவெளி உள்ளது. எண்ணங்கள் ஈடேற வேண்டுமெனில் அதற்கான தகுந்த உகந்த செயல்களை செய்துதான் ஆகவேண்டும் .அச்செயல்களை செய்ய தவறும்போது எண்ணங்கள் நிறைவேறாத ஆசையாகவே நிலைத்து விடும்.
உயர்ந்த நோக்கத்தையும் லட்சியத்தையும் கொண்டவர்கள் பலரை நாம் காணத்தான் செய்கிறோம். தங்கள் லட்சியம் ஈடேறாமல் இருப்பதற்கு பல காரணங்களை அவர்கள் கூறுவதையும் நாம் கேட்கிறோம். தங்கள் நோக்கம் ஈடேறாததற்கான அடிப்படை காரணமான தங்கள் செயலற்ற தன்மையை மறந்து விடுகின்றனர். மறைத்தும் விடுகின்றனர். எப்படி சக்தி வாய்ந்த விமானம் பறக்க வேண்டுமெனில் விமானி, அதன் நின்று கொண்டிருக்கும் என்ஜினை முடுக்கி விட வேண்டுமோ, அதைப் போன்று எத்தனை சக்தியை நாம் பெற்றிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி செயல்படும்போதே முழு வல்லமையை அடைய முடியும். எண்ணங்கள் நிறைவேற செயல்திறன் மிக அடிப்படையான மூலக்கூறு. செயல்திறன் பெற்றவர்கள் தங்கள் எண்ணங்களை நனவாக்கி மகிழ்கின்றனர்.
ஓட்டப்பந்தயத்தை எடுத்துக்கொள்வோம். மைதானத்தில் ஓடும் எட்டு பேரில் ஒருவர்தான் பரிசை பெறமுடியும். பார்வையாளர்கள் பல்லாயிரம் பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவர் கூட வெற்றி பரிசைப் பெற முடியாது. செயலினை செய்பவர்களே வெற்றிக்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். வெற்றிக்கான வாய்ப்பு அவர்களுக்கே தரப்படுகிறது. முயற்சி செய்கிறவர் வெற்றி பெற முடியும். தோல்வி அடையவும் முடியும். ஆனால் முயற்சி செய்யாதவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. தேவை விட அதிகம் உழைப்பது தவறல்ல. தேவையான அளவுக்கு கூட உழைக்காதது மிகத் தவறு. காரணம் வெற்றிக்கும் தோல்விக்கும் உடைய இடைவெளி மிகக் குறைவு .செயலின் வீரியம் குறையக் குறைய தோல்வியின் பக்கமே நாம் சாயத் துவங்குகிறோம்.
வல்லமை குறைந்தவர்கள் தங்களால் எது முடியுமோ அதை செய்கின்றனர். வல்லமை படைத்தவர்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை செய்கின்றனர். நாம் விரும்பிய எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடிவதில்லை. விருப்பத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லை. வரன்முறைகள் இல்லை. ஆனால் நாம் செய்யும் செயல்களுக்கு வரன்முறைகளும் கட்டுப்பாடுகளும் நிறைவே உள்ளன .தவறான செயல்களை செய்வது குற்றமாக மாறுகிறது. எனவே என்ன செயல்களை எப்படி செய்கிறோம் என்பது குறித்து எப்பொழுதும் கவனமுடன் இருந்தாக வேண்டும். தொடர்ந்து செயலாற்றி வெற்றிப் பாதையை தன் வசமாக வேண்டும்.