உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவது, நீங்கள் விரும்பும் இலக்கை அடைவதற்கு தகுந்த சாலை வரைபடம் உங்களிடம் கிடைத்து விடுவது போன்றது. வாழ்க்கையை திட்டமிடும்போது , நீங்கள் விரும்பிய இலக்கைத் தெரிந்து கொள்வதுடன் அந்த குறிக்கோளை அடைவதற்குத் தேவையானவை பற்றியும் தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையின் சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகளுக்கும் திட்டமிடல் பயன்படும்.
உடல் நலத்தை அதிகரிக்க திட்டமிட்டால், நல்ல உணவுப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவது, கெட்ட பழக்கங்களை விடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, ஓய்வு எடுப்பது என உடல் நலத்தை பாதிக்கும் அனைத்து செயல்களையும் ஒருங்கே சிந்தித்து திட்டமிடும்போது உடல்நலம் மேம்பட வெளியாகிறது. திட்டமிடும்போது எந்த செயல் மிக முக்கியமானது. எதை உடனடியாக முடிக்கலாம். எதை காலம் தாழ்த்தி செய்யலாம் என்பது தெரியவரும். சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், கவனத்தை இறுதி இலக்கை நோக்கியே வைப்பதற்கும் திட்டமிடல் உதவுகிறது
இலட்சியத்தை அடைய முடியவில்லை என்றால் அந்த இலட்சியத்தைச் சென்றடைய தேவையான திட்டத்தை நீங்கள் எடுக்கவில்லை என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுங்கள். உங்கள் இலட்சியங்களை எட்டுவதற்கு திட்டமிடுங்கள். தோல்வி அடைவதற்கு யாரும் திட்டமிடுவதில்லை. எல்லாத் திட்டமும் வெற்றியடையாமல் போகலாம். திட்டம் வெற்றியடையாதபோது அந்தத் திட்டத்தை மாற்றியமைத்து வெற்றியை எட்டலாம்.
எல்லோருக்கும் கனவுகளும், இலட்சிய எண்ணங்களும் நிறையவே உள்ளன. ஆனால் அவற்றைச் சென்றடைவதற்கு தேவை என்ன, வழி என்ன எப்படி எட்டுவது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நாம் எப்படி செயலாற்றுவது தெரியவரும?. தகுந்த திட்டம் இல்லையென்றால் எந்த இலட்சியமும் நிறைவேறாது.
திட்டங்கள் கால அளவு உடையதாகவும், செயல்கள் அளவிடக் கூடியதாகவும், தேவை ஏற்படும்போது மாற்ற ஏதுவானதாகவும், நிர்வாக முறைக்குத் கட்டுப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் நோக்கம் ஒன்று, செயல்கள் இன்னொன்றாக மாறக்கூடும்.
திட்டங்கள் உருவாக்குவதற்கு முன் நிறைய தகவல்களைச் சேர்க்க வேண்டும். தீவிரமாக சிந்திக்க வேண்டும். திட்டமிடுவதால் மட்டுமே இலக்கை அடைய முடியாது. முடிவுகள் எடுப்பதற்கும் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும், முறையான வளங்களை பயன்படுத்துவதற்கும் உதவும் செயல்முறையே திட்டமாகும். திட்டமிடல் குறிக்கோளைத் தெளிவுபடுத்தும்.
அக்குறிக்கோளை எட்டுவதற்கான சாதனங்கள், வளங்கள், நேரம் ஆகியன மதிப்பிடப்பட்டு, அக்குறிக்கோளை சென்றடையும் வழியும், அக்குறிக்கோள் நோக்கிய முயற்சியில் ஈடுபாடும் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது. திட்டம் வெளிப்படுத்தும் வழியை உறுதியுடன் பின்பற்றினால்தான் வெற்றியின் கதவைத் திறக்க முடியும்.