
நாட்டில் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைப்பதும், எல்லோரும் பிறருக்கு இலவசமாகக் கொடுக்கத் தயாராக இருப்பதுமானது, அறிவுரை. நமக்கு மிகவும் தேவைப்படும் நேரங்களில் தவிர, பிற நேரங்களில் அறிவுரைகளைக் கேட்க நாம் எவருமே விரும்புவதில்லை.
ஆனாலும் எல்லா நேரத்திலும் அவை நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் பிறருக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்! தேவையில்லாத அறிவுரைகளுக்கு செவி சாய்க்காமலும், அறிவுரை என்ற பெயரில் அடுத்தவரின் வட்டத்துக்குள் நுழையாமலும் நாம் இருப்பது, நமது ஆளுமைத் திறனைக் கூட்டும்.
நீங்கள் கவனித்துப் பாருங்கள். அறிவுரை என்ற பெயரில் பெரும்பாலும் தற்பெருமைகளே பேசப்படுகின்றன. 'இதே சூழலில் நான் இருந்தபோது, நான் என்ன செய்தேன் தெரியுமா? நானாக இருந்திருந்தால் இந்த நேரத்தில் என்ன தெரியுமா செய்திருப்பேன்?' பொதுவாக இத்தகைய சொற்கள் இல்லாமல் அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. அதனால் தான், அறிவுரைகளையே எப்போதும் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு, நட்பு வட்டமே அமையாமல் இருக்கும்.
மிதிவண்டியிலோ அல்லது மற்ற இருசக்கர வாகனத்திலோ பயணிக்கும் யாரும், வீட்டில் இருந்து கிளம்பும் போதே, 'இன்று ஒரு முறை கண்டிப்பாகத் தெருவில் விழ வேண்டும்' என்று எண்ணிக்கொண்டா கிளம்புகிறார்கள்? ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது கீழே விழுந்து விட்டால், தூக்கிவிட ஆள் வருகிறதோ இல்லையோ, அறிவுரைகள் சொல்லக் கூட்டம் சேரும்.
'பாத்து வரணும்பா, வேகமா போகக்கூடாது, என்ன அவசரம், இப்பிடியா வந்து வுழுவ, ஏதாவது அடி பட்டுருக்கா பாரு' என்று நமக்குப் பலவாறு அறிவுரைகள் வரும். அத்துடன், 'கொஞ்ச நேரம் உக்கார வைப்பா, தண்ணிய வாங்கி மூஞ்சில அடி, சூடாவது எதுனா குடிக்கக் குடு' என்று மற்றவருக்கும் அறிவுரைகள் பறக்கும். ஆனால், இத்தனை அறிவுரைகள் சொல்பவன், முதல் ஆளாய் கழன்று கொள்வான்!
இத்தகைய மனிதர்களின் பயனற்றப் பேச்சுக்களை, நமது காதுகள் கூட வாங்கத் தேவையில்லை. அறிவுரைகளை, நம்மைப் பெற்று வளர்த்தத் தாய் தந்தையர் சொல்லலாம். குடும்பத்துக்கு மூத்தவராகவும், நமது மரியாதைக்கு உரியவராகவும் இருப்பவர்கள் சொல்லலாம், ஆசிரியர்கள் சொல்லலாம், உண்மையான அக்கறையுடைய நண்பர்கள் சொல்லலாம், இவர்கள் எல்லாம் மிக கண்டிப்பாக அறிவுரைகள் சொல்லத்தான் வேண்டும்.
நாம் இவர்களது அறிவுரைகளை கேட்கவும் வேண்டும். சொல்வது யார் என்பதற்கு அடுத்ததாக அறிவுரை யாருக்கு சொல்லப்படுகிறது என்பது முக்கியம். சரியான இடங்களில், தேவைப்படுபவர்களுக்கு மட்டும் பொருத்தமான அறிவுரைகளைக் கூறுதல், நம் மீது அக்கறை கொண்டவர்களின் அறிவுரைகளை சீர்தூக்கிப் பார்த்து ஏற்றுக்கொள்ளல், பிறரின் பயனற்ற சொற்களால் பாதிக்கப்படாமல் இருத்தல், இவையே நமது ஆளுமைத் திறனுக்கான அடையாளங்கள்.