வயது தடையல்ல... வியக்க வைக்கும் வில்லேஜ் விஞ்ஞானி!

 வில்லேஜ் விஞ்ஞானி...
வில்லேஜ் விஞ்ஞானி...www.etvbharat.com

40 வயதிலேயே வாழ்க்கை அலுத்து களைத்துப்போகும் காலத்தில் 65 வயதில்  தனியொருவராக சிறிய ஜீப் ஒன்றை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் தேனியைச் சேர்ந்த பட்டறைத் தொழில் புரியும் ஈஸ்வரன்.  முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ள "வில்லேஜ் விஞ்ஞானி" என செல்லமாக பெயர் பெற்ற ஈஸ்வரனுக்கு மக்களிடம் பாராட்டுக்கள் குவித்து வருகின்றன. இவரது காணொளிப்பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரன். 65 வயதாகும் இவர் இரும்புப்பட்டறை நடத்தி  வருகிறார். தனது பட்டறையில் தயாராகும் விவசாயத்துக்கு ஏற்ற அரிவாள், மண்வெட்டி, களைக்கொத்தி போன்ற உபகரணங்களை தானே வெளியிடங்கள் சென்று விற்பனையும் செய்து வருகிறார்.

ஊர் ஊராக பொருட்களுடன் செல்ல வசதியாக  வாகனம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த ஈஸ்வரன் அதை செயல்படுத்தியும் உள்ளார். ஆம் தான் விரும்பிய குட்டி ஜீப்பை இருசக்கர வாகனமான ஸ்கூட்டி ஒன்றை வைத்து தானே உருவாக்கி  அசத்தியுள்ளார்.

மிகப்பெரிய இன்ஜினியர்கள், மெக்கானிக்களுக்கே சவால் விடும் வகையில், ஜீப்பில் இருப்பதைப் போலவே முகப்பு விளக்கு, ஸ்டியரிங், காலால் அழுத்தக்கூடிய ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றுடன் இவர் உருவாக்கிய ஜீப் பலருக்கும் வியப்பைத் தந்துள்ளது. பின்னே?  ஜீப் வாங்க பல லட்சங்கள் தேவைப்படும் நிலையில் ஈஸ்வரன், சுமார் 45 ஆயிரம் செலவில் தனது பட்டறையில் உள்ள இரும்பு பொருட்களைக் கொண்டே ஜீப்பை உருவாக்கியுள்ளது வியப்புதானே?

இந்த ஜீப்பை உருவாக்க ஒரு மாதம் உழைத்துள்ளார் ஈஸ்வரன்.  ஸ்கூட்டியில் இருக்கும் இருசக்கரங்களையும் அகற்றி விட்டு, குட்டி ஜீப்பிற்கு ஏற்றார் போல் 4 சக்கரங்களை பொருத்தியுள்ளார். இப்படி பல புதுமைகளை செய்து, தான் கற்ற   தொழிலின் மூலம் தனக்குத் தேவையானதை உருவாக்கி மகிழ்ந்த இந்த வில்லேஜ் விஞ்ஞானி இதைப்பற்றி என்ன சொல்கிறார்?

   "நான் மண்வெட்டி, களைக்கொத்தி போன்ற இரும்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதற்காக எனக்கு ஒரு வாகனம் தேவைப்பட்டது. 45 ஆயிரம் செலவழித்து என்னுடைய சொந்த முயற்சியில் இந்த ஜீப்பை உருவாக்கினேன். இதற்கு முன்னாலும் இரண்டு வண்டிகளை உருவாக்கியுள்ளேன். அதில் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை. ஒன்றை உறவினருக்கு கொடுத்துவிட்டேன்,” என்கிறார்.

சிறு வயதில் பொருளாதாரத்திற்கு சிரமப்பட்ட ஈஸ்வரன் பட்டறையில் பணிக்குச் சேர்ந்து தற்போது சொந்தமாக அரிவாள், மண்வெட்டி போன்ற கருவிகளை செய்து விற்பனை செய்கிறார். இவற்றை விற்க தனக்கு ஒரு வாகனம் தேவை என நினைத்தவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை முயற்சியாக ஆட்டோ போன்ற வாகனத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அது சில காரணங்களால் சரியாக அமையவில்லை.

இதையும் படியுங்கள்:
ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்ய உதவும் உணவுகள்!
 வில்லேஜ் விஞ்ஞானி...

தற்போது பல கட்ட முயற்சிக்குப் பிறகு, லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களே உருவாக்க தயங்கும் அளவிற்கு  குட்டி ஜீப்பை வெற்றிகரமாக உருவாக்கி விவசாயக் கருவிகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து தன் கனவை நிறைவேற்றி வருகிறார்.

நாம் விரும்பும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உழைப்பும் ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என நிருபித்து இன்றைய இளைஞர்களுக்கு உதாரணமாக ஆகியுள்ளார் தேனி ஈஸ்வரன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com