ஹார்மோன் சமநிலையின்மை மனச்சோர்வு, பதற்றம், எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், சோர்வு, முடி கொட்டுதல், தூக்கமின்மை மற்றும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது இப்போது மிகவும் பொதுவான பிரச்னையாக அனைவருக்கும் காணப்படுகிறது.
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும். ஹார்மோன் சுரப்புகள் சீராக இருக்க உணவுகளில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்.
ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்யும் உணவுகள்: புரதம் உடல் வளர்ச்சிக்கும் உடலில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம் தேவை. புரதச்சத்து குறைந்தாலும் அதிகரித்தாலும் பாதிப்பு உண்டாகும். உடலில் சில ஹார்மோன்களை உருவாக்கத்தில் இதற்கு பங்கு உண்டு என்பதால் தினமும் நம் அன்றாட உணவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
நம் அன்றாட உணவில் நட்ஸ், தயிர், பால், கொட்டைகள், செக்கில் ஆட்டும் எண்ணெய்கள், கீரைகள், பழங்கள், பல வண்ண காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம். இதனால் ஹார்மோன் சுரப்புகளும் சீராக இயங்கும். இன்சுலின், கிரெலின், லெப்டின் என்னும் ஹார்மோன்களின் சீரான சுரப்புக்கு இவை உதவும்.
தவிர்க்க வேண்டியவை: வெள்ளை சர்க்கரை, துரித உணவுகள், ஃபாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்வதால் ஹார்மோன் பிரச்னைகள் உண்டாகும். அதிக அளவில் காபி, டீ போன்ற பானங்களை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். ஹார்மோன் பிரச்னைகளால் பெண்கள் பி.சி.ஓ.எஸ் பிரச்னை, இருதய கோளாறுகள், நீரிழிவு, பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உணவில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. உடலுக்கு உழைப்பும் தேவை.
இன்சுலின் சுரப்பு சீராக இருந்தால் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை வராது. உடலில் உணவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் குளுக்கோசை உடலுக்கு ஆற்றலாக பயன்படுத்த இவை சீராக இயங்க வேண்டும். மிதமான உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை மூலம் ஹார்மோன் சுரப்பு சீராக செயல்படும்.
போதுமான உறக்கத்துக்கும் ஹார்மோனுக்கும் சம்பந்தம் உண்டு. இரவு நேரங்களில் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். நேரத்துடன் தூங்கச்செல்வது ஹார்மோன் பிரச்னைகளை உண்டாக்காது.
ஹார்மோன் சமநிலையை மேம்படுத்த உதவும் மேலும் சில உணவுகள்:
1. ஆளி விதைகள்: இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இதில் கரையாத நாச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
2. அவகோடா பழங்கள்: இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கார்டிசோலை சமப்படுத்த உதவும்.
3. செர்ரி பழங்கள்: இது மெலடோனின் நிறைந்த உணவு. இது அமைதியான தூக்கத்திற்கு உதவும். ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தும். செர்ரிக்களில் உள்ள மெக்னீசியம் நம் உடலின் அட்ரினலின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
4. மாதுளம் பழம்: இது ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தது.
5. ஹார்மோன் சமநிலைக்கு உதவும் சிலுவை காய்கறிகள் (cruciferous vegetable): புராக்கோலி, முட்டை கோஸ், காலிபிளவர் ஆகியவை ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் திறன் பெற்றவை. இவை நம் மனநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துகிறது.
6. ஆப்பிள்: குர்செடின் என்னும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். இது தவிர, க்ரீன் டீ, கீரைகள், காலே கீரைகள், பட்டாணி பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், எள், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், மஞ்சள், லவங்கப்பட்டை, சோம்பு மற்றும் இஞ்சி நான்கையும் எடுத்து நீரில் கொதிக்க வைத்து குடிக்க ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.