40 வயது தாண்டினாலே வயதாகிவிட்டது என பலரும் எண்ணுகிறார்கள். சாதனையாளர்களின் பதிவுகளைப் பார்த்தால் அவர்களின் வயதுக்கும், சாதனைக்கும் சம்பந்தம் இருக்காது. வயது எதற்கும் தடையல்ல. மனம்தான் தடை. அதுவும் உங்கள் மனதின் கடிவாளம் உங்களை விட்டுப் போனால் மட்டுமே தடை விதிக்கும். மனம் இளமையானால் ஐம்பதிலும் சாதிக்கலாம்.
காந்தியடிகள் 24 நாட்கள் உப்புச் சட்டத்தை எதிர்த்து 241மைல்கள் நடந்து சென்றபோது அவரது வயது 62. அகராதியில் மனித நேயத்திற்கு அடையாளம் தேடினால் அனேகமாக எல்லா அகராதிகளிலும் அன்னை தெரசா என்றிருக்கும். சேவைக்காக தன்னை அர்ப்பணித்தபோது அவரின் வயது 18. மதுரையில் ஒரு மொத்தத் குடிசையில் கண்டாங்கி சேலை, சுருங்கிய தேகம், கறுப்பு நிறம் ஆன சின்னப் பிள்ளை களஞ்சியம் என்ற அமைப்பின் மூலம் பல ஏழைகளுக்கு வழி காட்டினார். அவர் காலில் அன்றைய பிரதமர் வாஜ்பேயி விழுந்து வணங்கியது வயதிற்காக அல்ல. அவர் செய்த சாதனைக்காக.
சாதனையாளர்களுக்கு மனம் அரிக்கும். அவர்களால் கட்டிப் போட்ட மாதிரி இருக்க முடியாது. மனம் புள்ளி போட்டால் உடல் கோலம் போடக் துவங்கும். அந்தத் துடிப்புக்கு வயதில்லை. மனம்தான் எல்லாம். மனம் அடைய முடியும் என்றால் எதையும் அடைய முடியும். அறிஞர் மார்க்ஸ் அரேலியஸ் "கடந்துபோன காட்சிகளைப் பற்றி வருத்தம் வேண்டாம். எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் வேண்டாம். இன்றைய காரியத்தில் முனைப்பாக இருங்கள். வெற்றி நிச்சயம்" என்றார்.
அந்த பையனுக்கு வயது 17தான். அவன் செய்த சாதனையால் அவன் பெயர் ஒரு செயற்கைக் கோளுக்குப் பெயராக்கப் பட்டுள்ளது. செயற்கைக்கோளின் பெயர் 12399_சிங்கால். அவனுக்கு இன்னொரு பெயர் இந்தியாவின் பில்கேட்ஸ். படித்தது +2 தான். ஆனால் அவன் மூளைக்குள் ஒரு குட்டி பில்கேட்ஸ் இருப்பதை சொன்னவர்கள் அமெரிக்க நாட்டு கம்ப்யூட்டர் நிபுணர்கள். 11 வயதில் கம்ப்யூட்டரைப் பார்த்தான். மவுஸ் பிடித்துப் போனது. சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர். விளைவு. விளைவு 13 வயதில் ஜாவா மொழி அத்துப்படி 14 வயதில் பட்டம். தொடர்ந்து லோட்டஸ் நிறுவனச் சான்றிதழ்.
சர்வதேச போட்டி நடத்தியது இன்டெல் நிறுவனம். அதில் முதல் பரிசு 17 வயது சிங்காலுக்குத்தான். அவன் பிறக்கும்போதே பேரறிவை கடவுளிடம் வாங்கி வரவில்லை. ஆனால் எப்படி இது சாத்தியம். எல்லோருக்கும் சாத்தியம்தான். கவனம், உறுதி, உழைப்பு நம்பிக்கை இருந்தால். பார்வையில் விசாலம் வேண்டும். ஜன்னல் பார்வை தேவையில்லை. பருந்து பார்வை அவசியம். சாதனைக்கு வயது தடையில்லை.