நான் எதைச் செய்யப் போனாலும் அதைக் கெடுக்க ஒரு இடைஞ்சல் வந்துவிடுகிறது. ஏதாவது ஒரு தடை வந்து நிற்கிறது.. இதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனது தன்னம்பிக்கை உற்சாகம் எல்லாம் காணாமல் போய்விடுகிறது.
உடனே எடுத்த வேலையை முடிக்க முடியாமல் போட்டு விட்டுத் திரும்பி விடுகிறேன். தடைகளை உடைக்க எனக்கு ஆற்றல் தேவை. அதை நான் எப்படிப் பெறுவது?
இதுதான் உங்களது கோரிக்கையா கவலைப்படாதீர்கள். அதைச் சுலபமாக நிறைவேற்றி விடலாம் வாருங்கள்
பல பேர் கலந்து கொள்ளும் விழா ஒன்றிற்கு உங்களை அழைக்கிறார்கள். கூட்டம் ஒன்றில் உங்களைப் பேசக் கூப்பிடுகிறார்கள். விழாவுக்குப் போவதற்கு உங்களுக்குத் தயக்கம் இருக்கிறது.
இத்தனை பேர் மத்தியில் எப்படிப் பேசுவது என்று கூச்சப்படுகிறீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் நினைப்பதனால்தான் உங்கள் எண்ணத்தில் வாழ்க்கையில் தடைகள் குறுக்கிடுகின்றன. இதற்கு, நாம் விழாவில் கலந்து கொள்வதற்கு நல்ல உடைகள் இல்லையே என்ற தயக்கம் கூட காரணமாக இருக்கலாம்.
தடையில்லாமல் பேசத் தெரியாத நம்மால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் எப்படித் தடுமாறாமல் பேசமுடியும் என்று நீங்க நினைக்கலாம். உங்களது இந்த நினைப்பை ஆராயுங்கள்.
உடைக்கு ஏற்பாடு செய்ய முடியாதா? அல்லது எப்படி செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா? இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். முடியாது என்பதும் வழி தெரியவில்லை என்பதும் குற்றமே அல்ல.
உங்களால் முடிக்க முடியும். வழியைத் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் முடியாது என்று நீங்கள் நினைப்பதால்தான் அது முடியாமல் போகிறது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அச்சம் உங்களை ஆட்டிப் படைக்க இடம் கொடுக்காதீர்கள். முடியாது என்று நினைக்கத் தோன்றும் போதெல்லாம் அதை விரட்டுங்கள். என்னால் இது முடியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அதை முழுவதுமாக நம்புங்கள்.
எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்திருக்காது. உங்களுக்கும் ஒன்றிரண்டு விசயங்கள் தெரியாமல் இருக்கலாம். அதில் தவறில்லை.நீங்கள் முயற்சி செய்தால் அதைக் கற்றுக்கொண்டு விடலாம். கற்றுக் கொள்ளாத வரைதான் இதுகூட இவருக்குத் தெரியாமல் இருக்கிறதே என்பதற்காக மற்றவர்கள் உங்களைக் குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். உங்களுக்கும் தெரியும் காட்டிவிட்டீர்கள் என்றால் அப்புறம் அவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்.
உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். கார் ஓட்டக் கூடத் தெரியாதவர் என்று உங்களைச் சுட்டிக் காட்டிக் கேலி செய்பவரைப் பற்றி முழுமையாக ஆராயுங்கள். அந்தப் பேர்வழிக்கு ஒரு சைக்கிளைக் கூட ஓட்டத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கிண்டல் செய்பவர்கள் எல்லாருமே அசகாய சூரர்கள் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் உங்களைக் குறைத்து மதிப்பீட்டுக் கொண்டு அதற்காக ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துவிடாமல் உங்களது திறமையை கண்டறிந்து மென்மேலும் முயற்சி செய்து வாழ்வில் முன்னேற்றப் பாதையில் பயணம் செய்யுங்கள்.