
சற்று வயதானவர்கள் எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் நான் எதை சாதிக்கப் போகிறேன் என்று பேசுவதை கேட்டிருக்கிறோம். இளவயது உடையவர்கள் எது ஒன்றையும் சாதிப்பதற்கான வயது எனக்கு இன்னும் நெருங்கி விடவில்லை என்று கூறுவதையும் கேட்டிருக்கிறோம். இதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் சாதிக்கத் துணிந்தவர்கள் எந்த வயதிலும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குற்றாலீஸ்வரன் நீச்சலில் சாதனை பெறவில்லையா? அப்பொழுது அவனின் வயது எத்தனை?
வயது முதிர்ந்த முதியவர்கள் இப்பொழுதும் இளவயதில் சாதிக்க துணிந்த செயல்களை செய்து ஒரு பட்டத்தையோ பதவியையோ பெற்று வெற்றியில் முழு நிறைவு அடைவதை சமூக வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில் கண்டு வருகிறோம்.
ஒரு சமூகத்தின் முதுகெலும்பு இளைஞர்கள்தான். ஒரு இளைஞனின் வளர்ச்சியையும், அறிவுத்திறனையும் கொண்டுதான் ஒரு தேசத்தின் வெற்றி, தோல்விகளும் அமைகின்றன. எதையும் தாங்கவும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் கலங்காத போக்கும் இளைஞர்களுக்கு இருந்தாக வேண்டியது அவசியம். காலமும், சூழ்நிலையும் ஒரு இளைஞனின் தோளில் சுமைகளை ஏற்றினாலும் கலங்காமல் எதிர்கொள்ளும் பக்குவத்தை அவன் அமைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு குடும்பத்தின் தலைவர் எதிர்பாராத விதத்தில் மரணத்தை தழுவிவிட்டால், அந்த குடும்பத்தின் சுமைகள் மொத்தத்தையும் அந்த குடும்பத்தின் வாரிசான இளைஞர்தான் ஏற்றாகவேண்டும். அதிலும் நன்றாக சம்பாதிக்க கூடியவர்தான், அவர் கடைசியில் பிறந்தவராக இருந்தாலும் கூட அந்த பொறுப்பை அப்பாவின் ஸ்தானத்தில் நின்று அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய், உற்றார், உறவினர் என்று அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆதலால் வயதை காரணம் காட்டி அன்றாட வாழ்க்கை பிரச்னைகளில் இளைஞர்கள் எப்பொழுதும் தப்பித்துக்கொள்ள முடியாது.
மனிதர்களில் அபார அறிவு உள்ளவர் ஃபீல்ட் மார்ஷல் ஸ்மட்ஸ். ஆனால் 12 வயது வரை அவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. காரணம் சிறுவயதில் ஓயாத வியாதியாய் இருக்கும். இதனால் அவருடைய தந்தை அவர் ஒரு நோயாளி சிறுவன் என்றும், அறிவு மட்டமான வினோதப் பிறவி என்றும் கூறுவார். ஆனால் அவர் பள்ளியில் சேர்ந்ததும் அறிவைச் சம்பாதிக்க வேண்டும் என்று அவருக்கு ஏற்பட்ட ஆவலுக்கு அளவே இல்லை. எனவே அவர் மற்ற மாணவர்களுடன் சேர்வது இல்லை. ஓயாது படிப்புதான். ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம்வரை படிப்பாராம். பள்ளியில் வேறு மாணவர்களால் செய்ய முடியாத கணக்கு ஒன்றை செய்து முடிப்பதற்காக ஓர் இரவு முழுவதும் கண்ணுறங்காதிருந்தாராம் அவர்.
அவருக்கு வியத்தகு நினைவாற்றல் அமைந்திருந்தது. யாராவது அவருடைய நினைவாற்றலை சோதிக்க விரும்பினால் அவர் 16,000 நூல்களுக்கு மேல் உள்ள தம்முடைய நூல் நிலையத்தைச் சுட்டிக்காட்டி, நீங்கள் விரும்பிய எந்த நூலையாவது எடுத்து, எந்தவொரு பக்கத்திலாவது திறந்து, எந்த பாராவை வேண்டுமென்றாலும் படியுங்கள். அதற்கு அடுத்த பாராவின் கருத்தை நான் கூறுகிறேன் என்று கூறுவாராம். இச்சோதனை எத்தனையோ முறை நடந்து அத்தனை முறையும் அவர் வெற்றி அடைந்திருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் சட்டக் கல்லூரியில் படிக்கும்பொழுது இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை ஓராண்டுக்குள் படித்து முடித்ததோடு அல்லாமல், இரண்டு ஆண்டுகள் முழுவதும் மற்ற மாணவர்கள் படித்ததை விட இரு மடங்கு அதிகமாக படித்தாராம். இவ்வாறு மற்ற சக மாணவர்களை விட நான்கு மடங்கு அதிக பாரத்தை தாங்கிய போதிலும் வகுப்பிலே அவர்தான் முதல்வராக தேறினாராம். அறிவு மட்டமான வினோத பிறவி என்று அவருடைய தந்தை கூறியது எவ்வளவு நகைமுரண் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆதலால் எதையும் சாதிப்பதற்கோ, வெற்றிவாகை சூடுவதற்கோ வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்வோம். அதன் வழி நடப்போம்!