துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

ரு நண்பர்கள் ஜாலியாக இருப்பதற்காக ஆள் அளரவமற்ற தீவுக்கு படகில் பயணித்தார்கள். ஆட்டம் பாட்டத்துடன் மது அருந்தி அரை மயக்கத்தில் விடிகாலை வீடு திரும்ப முடிவு செய்து படகில் ஏறினர். ஏறிய பிறகுதான் துடுப்பு நினைவு வந்தது.

அதில் ஒருவன் சொன்னான். "நண்பா நீதானே ஃபயர் கேம்ப் கேட்ட.. அதுதான் துடுப்பைப் போட்டு நெருப்பு மூட்டினேன்" துடுப்புகள் அற்ற படகில் இனி எப்படி பயணித்து அவர்கள் கரை திரும்புவார்கள்? ஒருவரையொருவர் நொந்தபடி உதவி எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இவர்கள் போலத்தான் நிறைய பேர் தனக்கென்று ஒரு இலட்சியத்தையும்  பற்றிக் கொள்ளாமல் துடுப்பற்ற படகு போல செய்வதறியாது தவிப்பார்கள். இலக்கு இல்லாத மனம் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் துள்ளித் திரியும் கன்றுக்குட்டியை போல இயங்கும். பலவிதமான விஷயங்களை பற்றி மோதும் எண்ண அலைகளுடன், கலக்கம், குழப்பம், பயம், அதைர்யம்  போன்றவைகள் அவர்களை எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாமல் தடுத்துவிடும். இப்படிப்பட்டவர்கள் பரிதாபத்தில் மொத்த உருவமாக காட்சி தருவார்கள். ஆனால் இவர்களுக்கு திறமை என்பது நிச்சயம் இருக்கும்.

ஒரு மாபெரும் இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை செய்து முடிக்கும் பணியில் அர்ப்பணித்துக் கொண்டால் மட்டுமே வெற்றியை நோக்கி நாம் பயணிக்க முடியும். எதை செய்யலாம்? என்ன செய்வது? எப்படி செய்யலாம்? என்று தெரியாமல் குழப்பத்துடன் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை சலிப்புடன் நகரும். பெரிய பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சலித்து சோம்பேறித்தனத்துடன் அமர்ந்திருப்பதற்கு நேரம் கிடையாது.

ஒரு இலக்கை தீர்மானித்துக் கொண்ட பின் கற்பனையில் மிதக்கலாம். ஆனால் இலக்கே இல்லாமல் நான் பெரிய மனிதனாக வரவேண்டும் என்ற கற்பனையில் மிதப்பது முட்டாள்தனமானது. சோம்பேறித்தனமாக அமர்ந்து உங்களுடைய விலை மதிக்க முடியாத பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் நேரம் கடந்துவிட்டால் எதுவும் கை வராது. உங்களுடைய லட்சியத்தை அடைய முயற்சியுடன் வீரநடை போடுங்கள்.

வாழ்க்கையில் நிறைய பேர் தாங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் மட்டுமே நல்ல பலன்களை தரும் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்காமல் தங்கள் வாழ்வில் தாழ்ந்த நிலையிலேயே உள்ளனர். அதனால் தான்  கடின உழைப்பு இருந்தும் போகும் இலக்கு எதுவும் இல்லாமல் பலர் வாழ்க்கையின் அடிமட்டத்திலேயே தங்கி மிகக் குறைந்த தேவைகள் கூட அடைய முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

பலரும் பணத்தை எப்படி சேமிப்பது, வீட்டை எப்படிக் கட்டுவது,  விடுமுறையை எப்படிக் கழிப்பது என்று திட்டம் போடுகிறார்கள். ஆனால் அவர்களிடம் உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன? வாழ்க்கையில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? என்பதைப் போன்ற கேள்விகளை கேட்டால் அவற்றுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
முதுகு வலியை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன?
motivation Image

நாம் எந்த ஊருக்கு போக வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதை தீர்மானித்துக் கொள்ளாமல் பேருந்தில் ஏறுபவன் எங்கு செல்வது என்று தெரியாமல் அதே பேருந்தில் சுற்று சுற்றி வந்து தான் வந்த இடத்திலேயே வந்து நிற்பான்.

அதாவது தன் உழைப்பையும் நேரத்தையும் வீணடித்து இதேபோன்று வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளாதவர் தேவையற்ற  பல காரியங்களை அரைகுறையாக செய்து தன் வாழ்க்கையையே  வீணடித்து விடுகிறார்கள்.

எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்த பிறகு எந்த வழியாக எந்த இடத்தை அடைய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நாம் திட்டம் என்று கூறுகிறோம். இதே திட்டமிடல் நம் இலக்குகளுக்கும் பொருந்தும்.

இலக்கை நிர்ணயித்து, அதை செயல்படுத்த திட்டங்கள் தீட்டிய பின் அதை நோக்கி பணியுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்குத்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com