தற்போது சிறியவர் முதற்கொண்டு பெரியவர் வரை அனைவருக்கும் அடிக்கடி முதுகு வலியோ, இடுப்பு வலியோ ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு கவலைப்படும்படியான காரணம் எதுவும் இருக்காது. என்றாலும் பொதுவாக நமது தினசரி நடவடிக்கைகளை நிறுத்தாமல் இயல்பாக இருப்பதே பயன் தரும். தானாகவே சில வாரங்களில் சரியாகும் இந்த வலி, பின்பு மீண்டும் மீண்டும் வரும் தன்மையைக் கொண்டது என்கின்றனர். இப்படி வரும்போது அதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
முதுகு வலி எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்னையாகி விட்டது. என்றாலும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் முதுகு வலி ஏற்படுவதற்கு நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும், மன அழுத்தமும் முக்கிய காரணம். வயது அதிகரிக்கும்போது முதுகு வலியின் வீரியம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதுகு வலியை தவிர்க்க இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை முதுகை நேர் நிலையில் வைத்தபடி நின்று, கை கால்களை நீட்டி எளிய பயிற்சிகளை செய்யலாம். இடுப்புக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளை மேற்கொள்வதும் முதுகு வலியை தடுக்க உதவும்.
உடல் பருமனாக இருந்தால் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். அதற்கு தகுந்த மாதிரியான ஆகாரங்களை எடுத்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
நாள்பட்ட முதுகு வலி இருந்தால் கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். தினமும் ஏழு, எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். முதுகுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் நிலையில் படுக்காமல் இருப்பது சாலச்சிறந்தது. தலையணையை சரியானபடி தேர்வு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களும், நின்ற நிலையிலேயே வேலை செய்பவர்களும் அவ்வப்பொழுது சிறிது நேரம் நடமாட வேண்டும்.
டிஸ்க் என்பது முதுகுத்தண்டில் அமைந்துள்ள வெர்டிபெரா என்கிற எலும்புகளுக்கு இடையில் இருக்கும் மிருதுவான அமைப்பாகும். பொதுவாக, உடலில் மற்ற மூட்டுகளில் கீழ்வாதம் உள்ளவர்களுக்கு கழுத்து மற்றும் அடி முதுகு எலும்புகளிலும் கீழ்வாதம் இருக்க வாய்ப்பு உண்டு. இதுவும் முதுகு வலிக்கு ஒரு முக்கிய காரணம் என்கின்றனர்.
திடீரென ஒருவருக்கு கால் வலி, இடுப்பு வலி ஏற்படுவதுண்டு, இதற்கு ஸ்பைனல் கார்டிலிருந்து வெளிவரும் நரம்பு மீது ஏற்படும் அழுத்தத்தால் இந்த வலி ஏற்படுகிறது என்கின்றனர். அதனால்தான் சில நேரங்களில் காலில் ஊசி குத்துவது போல் வலி, எரிச்சல், மரத்துப்போன உணர்வு போன்றவை தோன்றுவதை உணர முடிகிறது.
சிகிச்சை முறைகள்: பப்பாளி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி அரைத்து முதுகில் 3 நாட்கள் பற்று போட்டு மூன்று மணி நேரம் கழித்து கழுவலாம். வலி ஏற்படும்போது மூன்று நாட்களுக்கு தென்னை மரக்குடி எண்ணெயை நாட்டு மருந்து கடையில் வாங்கி காலை, மாலை முதுகில் அழுத்தி தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவலாம். நல்வேளை இலைகளை குழம்பு வைத்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் என, நான்கு ஐந்து வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடையை சீராக வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. வலி நிவாரணிகளை மருத்துவரின் ஆலோசனை பெறாமல் நீண்ட நாட்கள் தினமும் உட்கொள்ளக்கூடாது. உடற்பயிற்சியை தவறாமல் அன்றாட வாழ்வின் அங்கமாக்க வேண்டும். பிசியோதெரபி பயிற்சிகள், குத்தூசி முறை (அக்குபஞ்சர்) வலி நிவாரணிகள் மூலமும் இன்றைய தினங்களில் அதிகமானவர்கள் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.
அதனால் எல்லா விதமான சிகிச்சை முறைகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவம் செய்து கொண்டால் முதுகு வலியை முறியடிக்கலாம்.