உறவுகளை மேம்படுத்த மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். பணம் இல்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் உறவுகள் என்று ஒன்று இல்லாத ஒருவரை அனாதை என்றுதான் எண்ணுகிறோம். மனம்விட்டு பேசவும், அன்பு செலுத்தவும் ஓர் உறவு அவசியம். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்கள் மனம் நோகாமல், தேவையற்ற வார்த்தைகளை விடாமல் உறவை பாதுகாப்பது அவசியம்.
நம்மைச் சுற்றியுள்ள உறவுகளின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொண்டால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான். சுயநலம் கொண்டவர்கள் தான் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ, பரிதாபப்படவோ முயல்வதில்லை. ஏன் நாம் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்? ஏனென்றால் நாம் மனிதர்கள். இந்த சமூகத்தில் வாழ்வதற்கு மற்றவர்களுடன் பழக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.
ஒரு சிலர் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்கள். ஒரு சிலரோ உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அதிகம் வெளிக்காட்டாதவர்களாக இருப்பார்கள். வேறுசிலரோ மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதும், ஆறுதல் சொல்வதும், ஆதரவாக இருப்பதும் உறவை பலப்படுத்தும். அத்துடன் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்களும், உணர்வுகளும் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அவற்றுடன் நம்மால் ஒத்துப்போகவோ, உடன்படவோ முடியாவிட்டாலும் அவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்வது உறவை பலப்படுத்தும்.
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதும், மதிப்பதும் நேர்மறையான சூழலை வளர்க்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மதிக்கும்பொழுது அவர்களுக்கு நம்பிக்கையை வளர்த்து நம் உறவுகளை பலப்படுத்துகிறோம். பிறர் மீது பச்சாதாபம் கொள்வது சிக்கல்களை மிகவும் திறம்பட தீர்க்க உதவும். பச்சாதாபம் என்பது சமூக தொடர்புகளின் அடிப்படை அம்சமாகும். இது மற்றவர்களுடன் நம்மை ஆழமாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் உதவும். மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது அந்த உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களை வார்த்தைகளால் மேலும் துன்பப்படுத்தாமல் ஆறுதலும், நம்மால் ஆன உதவிகளையும் செய்வது தான் மனிதத்தன்மை. இல்லாவிட்டால் வாழ்க்கை முழுமை அடையாது.
அன்பு, இரக்கம், உண்மை, உற்சாகம், தைரியம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றை கைக்கொள்வது உறவை உன்னதமாக்கும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் எல்லா உறவுகளும் உன்னதமே. உறவுகள் தோட்டம் போன்றவை. கவனிப்பு இல்லாத விளைநிலத்தில் களைகள் முளைப்பது போல் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத உறவுகளில் குழப்பம் என்ற களை முளைக்க வாய்ப்புண்டு. எனவே பரஸ்பர அக்கறையும், கவனமும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
நெருக்கடியான சமயத்தில் கை கொடுப்பதும் உறவுகளை வலுவாக்கும். உறவுகளை புரிந்து கொள்ளும் பயிற்சி கூடமாக குடும்பம் திகழ வேண்டும். விருப்பு, வெறுப்பு, கோபதாபங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளால் பிணையும் உறவுகளே ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வதன் மூலம் உறவு வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம். ஒவ்வொரு உறவு வட்டத்திற்குமான வரையறை ஆழமானது. ஆனால் அதனை நிர்ணயிப்பது நாம் அதற்கு தரும் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.
பெறுவதை காட்டிலும் தருவதில் உள்ள இன்பத்தை தெரிந்து கொள்வதும், ஒருவருக்கொருவர் ஆழமான புரிதலுடனும், பரஸ்பர அக்கறையுடனும் இருந்தால் உறவு வலுப்படும்.