எப்போதும் தயார் நிலையில் இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நிச்சயம்.
2012-இல், லண்டனில் நடந்தது ஒலிம்பிக் போட்டிகள். அப்போது நூறு மீட்டர் இறுதிப் போட்டியில் எட்டு பேர் ஓடினார்கள். முதலில் வந்தவர் ஜமைக்காவின் உஸைன் போல்ட். இவர் எடுத்துக் கொண்ட நேரம் 9.63 விநாடிகள். அவருக்கு அடுத்தபடி இரண்டாவதாக வந்தவர் எடுத்துக் கொண்ட நேரம் 9.75 விநாடிகள்.
இந்த மைக்ரோ செகண்ட் வெற்றிகள் விளையாட்டில் மட்டும்தான் என்று எண்ணி விடாதீர்கள். வாழ்க்கையில் பல நேரங்களில் இப்படிப்பட்ட வெற்றிகள் கிட்டும். இத்தகைய வெற்றிகளை அடைவதற்கு தயார் நிலையும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறனும் அவசியத் தேவை.
பல சமயங்களில் நாம் தயாராக இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டு, தொடர்ந்து கோபமும் வந்து தோல்வி நிலைக்கு வந்து விடுகிறோம்.
குடை கொண்டு வராதவன் மழையைக் கண்டதும் கோபம் கொள் வது இயற்கைதானே! ஆனால் தயாராகக் குடையுடன் வந்திருந்தால் தேவையற்ற கோபத்தையும் பரபரப்பையும் தவிர்த்திருக்கலாமே!
"தயாராக இருப்பதில் தோற்றுவிட்டால், தோற்றுப் போவதற்குத் தயாராகி விட்டீர்கள்” என்று பெஞ்சமின் பிராங்க்ளின் கூறியது எவ்வளவு உண்மை!
இன்று முழுவதும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற பட்டியல் அதிகாலையிலேயே உங்கள் கைகளில் இருந்தால் நீங்கள் வெற்றிக்குக் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்! இந்தப் பட்டியல் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் உற்சாக டானிக்காக செயல்படும்.
இப்படித் தயார் செய்து வைத்த பட்டியலின்படி உள்ள செயல்பாடுகளை குறித்த காலத்தில் முடிக்கவேண்டும் என்று ஒரு உச்ச வரம்பையும் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் அந்த நாளிலேயே அத்தனையையும் செய்து முடிக்க முடியும். மீதி இரண்டு இருக்கிறது, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோபாவத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். இப்படித் தள்ளிப் போடுவதால் பல வாய்ப்புகள் கை நழுவிப்போகும் நிலை ஏற்படும். வாய்ப்புகள் வரும்போது தயார் நிலையில் இல்லையென்றால் இழப்பு நமக்குத்தானே.
வாய்ப்புகள் தினசரி வந்து போகும் பேருந்து போல அல்ல. எப்போதாவது வரும் மழையைப் போன்றது. அது வரும்போது அதைக் கைக்கொண்டு விட வேண்டும்.
எப்போதும் தயார் நிலையில் இருக்கும் ஒருவரால், நொடிப் பொழுதில் தோன்றி மறையும் மின்னல் போல வரும் வாய்ப்புகளையும் கைப்பற்றி, சாதனை புரிய முடியும். இன்றைய நவீன உலகில், ஒரு சில நொடிகளே தாமதமானாலும் உங்களுக்கு வந்த வாய்ப்பை வேறு ஒருவர் தட்டிச்சென்று விடுவதற்குவாய்ப்புகள் அதிகம் உள்ளன.
காத்திருக்கும் காலம் என்ற ஒன்று இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது இந்த காத்திருத்தல் காலத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. இந்த நேரங்களை இன்னும் முழுமையாகிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம். எனவே எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.